2025 மே 01, வியாழக்கிழமை

பொலிஸாரை வியப்படைய வைத்த கிராமம்

Mayu   / 2023 நவம்பர் 29 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மதுரை திருமங்கலம் பொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் ராகவன் - பாண்டியம்மாள் தம்பதி.

இவர்களின் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 26 பவுன் நகைகள் மற்றும் 21 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டதாக, சிந்துபட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்யப்பட்டது.

பட்டப்பகலில் கிராமத்திற்குள் புகுந்து வெளியாட்கள் திருடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் உள்ளூர்காரர்கள் யாராவது எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

திருட்டு வழக்கில் தங்களது கிராமத்தில் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டால் தங்கள் ஊருக்கு களங்கம் ஏற்படும் என கிராம பெரியவர்கள் நினைத்தனர்.

எனவே பழையகால முறைப்படி நகை, பணத்தை மீட்பது என முடிவெடுத்தனர். அதன்படி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பேப்பர் கவர் கொடுக்கப்பட்டது. இரவு நேரத்தில் ஊருக்கு நடுவே பொது வெளியில் ஒரு பெரிய அண்டா வைக்கப்படும் என்றும், ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுக்கப்பட்ட பேப்பர் கவரை அதில் போட வேண்டுமென்றும் தண்டோரா போடப்பட்டது.

நகை மற்றும் பணத்தை திருடியவர் அதனை கவரில் வைத்து யாருக்கும் தெரியாமல் அண்டாவில் போட்டுவிடுவார் என்பது கிராம பெரியவர்கள் மற்றும் பொலிஸாரின் திட்டமாக இருந்தது.

அதன்படி அனைத்து வீடுகளுக்கும் பேப்பர் கவர் கொடுக்கப்பட்டு, பொது இடத்தில் 2 அண்டாக்கள் வைக்கப்பட்டன.  இரவு நேரத்தில் மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. ஒரு மணி நேரத்திற்கு பிறகு மின் விளக்குகள் எரிய விடப்பட்டு அண்டாவில் இருந்த கவர்களை பிரித்துப் பார்த்ததில், ஒரு கவரில்  23 பவுன் நகைகள் இருந்தன.

இதன்படி, 26 பவுன் நகை மற்றும் ரூ.21,500 பணம் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் 23 பவுன் நகைகள் மட்டும் அண்டாவில் இருந்தன.

எனவே மீண்டும் வீடுதோறும் பேப்பர் கவர் கொடுக்கப்பட்டு, இரவு நேரத்தில் அண்டா வைக்கப்பட்டு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் மூலம் மேலும் 3 பவுன் நகை மற்றும் ரூ.20,000 பணம் மீண்டும் வந்தது.  நகைகளை மீட்ட கிராம பெரியவர்கள் பொலஸாரிடம் ஒப்படைக்க, அவர்கள் ராகவனிடம் நகைகளை ஒப்படைத்தனர்.

பழங்காலத்தைப்போன்ற நடைமுறையை கையாண்டு பெரிய பொக்கம்பட்டியில் நகைகள் மீட்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தங்கள் கிராமத்திற்கு வரவிருந்த அவப்பெயரை தடுத்திருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.   M 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .