2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ரூ.1 லட்சத்திற்கு ஆணுறை வாங்கிய நபர்

Editorial   / 2025 டிசெம்பர் 23 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆன்லைன் வர்த்தக தளங்கள் மூலம் பொருட்களை வாங்கும் பழக்கத்தில் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, பிரபல தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. அன்றாட தேவைகளிலிருந்து உயர்விலை மின்னணு சாதனங்கள் வரை அனைத்தையும் இணையம் வழியாக வாங்கும் போக்கு வேகமாக அதிகரித்து வருகிறது.

அந்த அறிக்கையில், ஐபோன்கள் முதல் பால் வரை, தங்கம் முதல் காய்கறிகள் வரை, சிப்ஸ் முதல் கறிவேப்பிலை வரை அனைத்தும் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, தனிப்பட்ட பயன்பாட்டு பொருட்களுக்கான விற்பனை இணையத்தில் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஒருவர், கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 228 முறை ஆணுறை ஆர்டர் செய்து, ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 398 செலவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆன்லைன் தளங்களில் ஆணுறை விற்பனை மிக வேகமாக நடைபெறுகிறது என்றும், சராசரியாக ஒவ்வொரு 127 ஆர்டர்களுக்கும் ஒரு முறை ஆணுறை ஆர்டர் செய்யப்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, செப்டம்பர் மாதத்தில் இந்த விற்பனை 24 சதவீதம் அதிகரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

உயர்விலை பொருட்கள் வாங்குவதிலும் இந்தியர்கள் தயங்கவில்லை என்பதற்கான சான்றாக, பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் ஒரே நேரத்தில் 3 ஐபோன்களை ரூ.4.3 லட்சத்துக்கு ஆர்டர் செய்துள்ளார். இது இந்த ஆண்டில் ஒரே நேரத்தில் ஒருவரால் செய்யப்பட்ட அதிகபட்ச மதிப்புள்ள ஆர்டர் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், நொய்டாவைச் சேர்ந்த ஒருவர் புளூடூத் ஸ்பீக்கர்கள், ரோபோ வாக்யூம் கிளீனர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை ஒரே ஆர்டரில் ரூ.2.69 லட்சம் மதிப்பில் வாங்கியுள்ளார். மும்பையைச் சேர்ந்த ஒருவர், சர்க்கரை இல்லாத ரெட்புல் பானத்திற்காக மட்டும் ரூ.16.3 லட்சம் செலவு செய்திருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோல, சென்னையைச் சேர்ந்த ஒருவர் செல்லப்பிராணிகளுக்கான பொருட்கள் வாங்குவதற்காக ரூ.2.41 லட்சம் செலவிட்டுள்ளார். மேலும், பெங்களூருவாசிகள் ஆன்லைன் வர்த்தக தளங்களில் அதிகமாக வாங்குவதுடன், டெலிவரி பணியாளர்களுக்கு தாராளமாக டிப்ஸ் வழங்குவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவல்கள், இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தின் வளர்ச்சியையும், நுகர்வோரின் வாங்கும் பழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் தெளிவாக காட்டுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X