2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஆடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்: எதிர்ப்பையடுத்து அகற்றப்பட்டன

Kogilavani   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்துக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து அமெரிக்காவை சேர்ந்த அமேசன்.கொம் என்ற இணையத்தளமானது, பெண்கள் அணியும் லெகிங்ஸ் மற்றும் டீசேர்ட்டுக்களில் பொறிக்கப்பட்டிருந்த இந்து கடவுள்களின் உருவப் படங்களை 24 மணி நேரத்துக்குள் அகற்றியுள்ளது என்று அமெரிக்கா செய்தி தெரிவிக்கின்றது.

உலகின் மிகப்பெரிய இணையத்தள விற்பனை முகவரான அமேசன்.கொம் என்ற இணையத்தளம் பெண்கள் அணியும் லெகிங்ஸ் ஆடையின் தொடைப்பகுதி மற்றும் டீசேர்ட்டில் இந்து மத கடவுள்களான பிள்ளையார், சிவன், பிரம்மா, விஷ்ணு, முருகன், ஹனுமான், இராமர், ராதா கிருஷ்ணர், காளி ஆகிய தெய்வங்களின் படங்களை டிசைன் செய்து விற்பனை செய்துள்ளது. 

இந்நிலையில் உலகிலுள்ள இந்துமத அமைப்புகள் இணைந்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் இவற்றை உடனடியாக அகற்றும்படி குறித்த இணையத்தளத்துக்கு மின்னஞ்சலையும் அனுப்பி வைத்துள்ளன.

எதிர்ப்பையடுத்து அமேசன் இணையத்தளமானது உடனடியாக குறித்த ஆடைகளை தனது விளம்பர பக்கத்திலிருந்து அகற்றியுள்ளது.

'இந்துக்கள் கலைப் பண்பை வெளிப்படுத்துவதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் தங்களது மதத்தின் மீது விசுவாசமும் பற்றும் உடையவர்கள்.
 பலகோடி மக்கள் வழிபடும் கடவுள்களின் படங்களை கொண்டு, ஆடைகளை வடிவமைப்பது ஏற்கக் கூடியது அல்ல' என்று  அமெரிக்காவில் உள்ள இந்துமத தலைவர் ராஜன் சேத் என்பவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் பியர் பாட்டிலில் இந்து கடவுள்களின் உருவங்கள் அச்சிடப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்படத்தக்கது. அவுஸ்திரேலியாவின் மதுபான நிறுவனம் ஒன்று தங்களது பியர் போத்தல்களின் மீது இந்துக் கடவுள்களாகிய பிள்ளையார், லக்ஷ்மி போன்ற தெய்வங்களின் உருவங்களை அச்சடித்திருந்தன.

இதனைக் கேள்விப்பட்ட அவுஸ்திரேலியா வாழ் இந்து மதத்தினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டதை தொடர்ந்து அவை அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தியா, ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு படவிழா ஒன்றில்  தென்னிந்திய திரைப்பட நடிகை குஷ்பு இந்துக் கடவுளின் படங்கள் அச்சிட்ட சேலையை அணிந்து பங்கேற்று பெரும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. இவரது சேலையில், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், ராமர் போன்ற இந்து கடவுள்களின் படங்கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 








  Comments - 0

  • Devan Monday, 20 October 2014 05:54 AM

    நன்றி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X