Editorial / 2025 டிசெம்பர் 28 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

விஜயரத்தினம் சரவணன்
ஒவ்வோராண்டும் மழைக்காலங்களில் புதுக்குடியிருப்பு நகர் வெள்ளத்தில் மூழ்குவதால் வர்த்தகர்களும், புதுக்குடியிருப்பு நகரை அண்டியுள்ள பொதுமக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே குறித்த வெள்ள அனர்த்தத்தால் ஏற்படும் நெருக்கடியை தடுக்க புதுக்குடியிருப்பு நகரிலிருந்து இரணைப்பாலை வீதியினூடாக, மாத்தளன் சிறுகடல் வரையில் வடிகாலமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் யோசனை ஒன்றை முன்மொழிந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த வடிகாலமைப்பு தொடர்பான வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளரின் ஆலோசனையையும் இதன்போது கேட்டறிந்து கொண்டார்.
இந்நிலையில் வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர் இதன்போது கருத்துத் தெரிவிக்கையில்,
புதுக்குடியிருப்பு நகரிலிருந்து இரணைப்பாலை ஊடாக மாத்தளன் சிறுகடல் 3.5 கிலோமீற்றர் தூரமாகும். எனவே வீதியின் இருபுறமும் வடிகாலமைப்பு மேற்கொள்வதால் 07கிலோமீற்றர் வடிகாலமைப்புச் செய்யப்பட வேண்டியிருக்கும்.
எனவே 07 கிலோமீற்றர் வடிகாலமைப்பை மேற்கொள்வதால் பாரியதொரு நிதி ஒதுக்கீடு தேவைப்படும்.
அத்தோடு புதுக்குடியிருப்பு நகரிலிருந்து மாத்தளன் சிறுகடல் வரையில் வடிகாலமைப்பை மேற்கொள்வதற்கு உரிய திட்ட முன்மொழி ஒன்று எம்மால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. அதை பாராளுமன்ற உறுப்பினரிடம் நாம் சமர்ப்பிக்கவும் தயாராக இருக்கிறோம் - என்றார்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
ஒவ்வோராண்டும் மழைக்காலங்களில் புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதி வெள்ளத்தில் மூழ்கி கொண்டே இருக்கிறது. பாரிய நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்பதற்காக வடிகாலமைப்பை மேற்கொள்ளாமல் இருக்க முடியாது. புதுக்குடியிருப்பு நகரிலிருந்து மாத்தளன் சிறுகடல் வரையான வடிகாலமைப்பு வசதியை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
பாரிய நிதி தேவைப்பட்டால் அதை அரசாங்கத்திடமிருந்து கேட்டுப் பெற்றுக் கொள்வோம். அதற்காகவே மக்கள் எம்மை தமது பிரதிநிதியாக தெரிவு செய்துள்ளனர். இந்த வடிகாலமைப்பு திட்டத்தை ஒரே தடவையில் மேற்கொள்ள முடியாவிட்டால் கட்டங்கட்டமாக இந்த வடிகாலமைப்பு திட்டத்தை மேற்கொள்ளலாம்.
எனவே புதுக்குடியிருப்பு நகரிலிருந்து மாத்தளன் சிறுகடல் வரையில் வடிகாலமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமென யோசனை ஒன்றை முன்மொழிகின்றேன். இந்த தீர்மானம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவிற்கும் அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
அந்த வகையில் இந்த வடிகாலமைப்பை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதியையும் பெறுவோம்.
அதன் பிற்பாடு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதியுடனும், முறையான திட்டமுன்மொழிவுடனும் குறித்த வடிகாலமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கையை உரிய அமைச்சுக்கு அனுப்பி வைப்போம் என்றார்.
7 minute ago
14 minute ago
43 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
43 minute ago
52 minute ago