2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

கப்பன்புலவு விவகாரம்: பிரதேச செயலாளர் விளக்கம்

Niroshini   / 2021 ஜூன் 09 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவான் பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் வசிக்கு காணி, அக்குடும்பங்களுக்கு சொந்தமில்லாததன் காரணமாகவே, அவர்களுக்கு மலசலகூடம் கட்டிக்கொடுக்க முடியாமல் இருப்பதாக, உடுவில் பிரதேச செயலாளர் எஸ்.முகுந்தன் தெரிவித்தார்.

புன்னாலைக்கட்டுவான் - கப்பன்புலவு பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர், வீட்டில் மலசலகூட வசதிகள் இல்லாத காரணத்தால், வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள பனங்காணிக்கு சென்று காலைக்கடனை முடித்து விட்டு, வீடு திரும்புகையில் இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டனர் என, நேற்று (08) செய்தி வெளியாகியிருந்தது.

இதேவேளை, அங்கு வசிக்கும் குடும்பங்கள் மலசலகூட வசதிகளற்ற நிலையில், பெரும் சிரமங்களுடன் வசித்து வருவதாகவும், மலசலகூடங்களை கட்டி தருமாறு பலரிடம் கேட்டும் மலசலகூடங்கள் கட்டிக் கொடுக்கப்படவில்லை எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிரு;நதது.

இந்நிலையில், குறித்த செய்தி தொடர்பில் வினவிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கப்பன்புலவு பகுதியில், சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவர்களுக்கு உரித்துடையதல்லாத காணிகளில் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றன என்றார்.

'அரச சுற்று நிரூபங்களின் பிரகாரம், காணி உரித்துடையவர் அல்லாதோருக்கு அல்லது காணி உரிமையை உறுதிப்படுத்தாதவர்களுக்கு கட்டடத்துக்கான உதவிகளை செய்ய முடியாது. அதனாலேயே அவர்களுக்கான மலசல கூடங்களை காட்டிக்கொடுக்க முடியவில்லை' என்றும், அவர் கூறினார்.

காணியின் உரிமையாளர் அங்கு வசிக்கும் மக்களுக்கு காணிகளை பகிர்ந்து அளிப்பதன் ஊடாகவோ அல்லது அங்கு வசிப்போர் தமது காணிக்கான உரித்தை உறுதிப்படுத்துவார்களாயின், அவர்களுக்கு மலசலகூட வசதிகளை செய்து கொடுப்பதற்கு தாம் தயாராகவே இருப்பதாக,  எஸ்.முகுந்தன் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .