2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

தவறினால் மீண்டும் கட்டியெழுப்ப முடியாது

Freelancer   / 2023 ஜூன் 07 , மு.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக கட்டமைப்பினுள் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் முழு பல்கலைக்கழக கட்டமைப்பையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாத நிலையை எட்டும் என்று தெரிவித்தார்.

பராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) உரையாற்றிய போது, மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையின் தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பு முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பல பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக அரச பல்கலைக்கழகங்கள் மட்டுமன்றி தனியார் துறையினரால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களும் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன. எவ்வாறாயினும்,அரசாங்கத்தின் புதிய வரிவிதிப்பு முறையால் நிறுவனத்திற்கு ஏற்படும் அனைத்து இழப்புகளையும் மாணவ மாணவிகளிடமிருந்தே ஈடுசெய்ய தனியார் பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சில பல்கலைக் கழகங்களில் நிகழும் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் முழுப் பல்கலைக்கழக கட்டமைப்புக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்றார். 

மேலும்  நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கீழ்வரும் கேள்விகளை  எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பினார்.

இந்நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களுக்கு தற்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் எண்ணிக்கை யாது?  

அரச பல்கலைக்கழகங்களில் தற்போது கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?எதிர்வரும் ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் செயற்படுமா? 
.
சர்வதேச அளவுகோல்களின் பிரகாரம்,பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு பீடத்திலும் படிக்கும் மாணவர்களின் விகிதத்துடன் ஒப்பி்டும் போது இருக்க வேண்டிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் எண்ணிக்கை யாது?  

பல்கலைக்கழக கல்விக்கு தகுதி பெற்ற தகுதி அடிப்படையிலான (10%) மற்றும் குறைந்த வருமானம் ரீதியாக (90%) மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் மஹாபொல புலமைப்பரிசில் திட்டமானது முதலாம் ஆண்டு (2020/2021 உள்வாங்கல்) மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாமதமானது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் 15,000 க்கும் மேற்பட்ட குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கடுமையான அநீதியாகிவிடாதா? எனவே, இந்த மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் என்ன தீர்வுகள் யாது?.

 தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் காரணமாக,அதன் நிர்வாக மற்றும் கல்வி நடவடிக்கைகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளன.இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கல்வி அமைச்சருக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளதா? 

அது என்ன?அந்தப் பரிந்துரைகளை அமுல்படுத்த இதுவரை அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்திருக்கிறதா? அது எவ்வாறான நடவடிக்கை? இல்லை என்றால், இந்தப் பல்கலைக் கழகங்களில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க அவசர நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்தது ஒட்டுமொத்த உயர்கல்வித் துறையே வீழ்ச்சியடையும் வரை அரசாங்கம் காத்திருக்கிறதா? என்று வினவினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .