2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

நீ வாங்குற கடையிலதான் நாங்களும் அரிசி வாங்குறோம்

Editorial   / 2021 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதான வீதிகளில் பஸ்களின் எண்ணிக்கை குறைவு, ஓரிரு பஸ்கள் ஓடினாலும் அதிலும் பயணிகள் குறைவு.

நின்றுகொண்டு பயணிக்க முடியாது என்பதனால், ஒவ்வொரு தரிப்பிடங்களில் இருந்தும் இரண்டுடொரு பயணிகள் மட்டுமே ஏறிக்கொள்கின்றனர்.

அதனால், பல பஸ்கள் நடக்கத்தொடங்கிவிட்டன. (வேகத்தை குறைத்து செலுத்தல்) ஒரு தரப்பிடத்திலிருந்து அடுத்த தரப்பிடத்தை பஸ் கடக்கும் முன்னர், அந்த தூரத்தை ஒருவர் நடந்தே சென்றுவிடுவார். அவ்வளவுக்கு மெதுவாக சில பஸ்கள் பயணிக்கின்றன.

அப்படிதான், மட்டக்குளிக்கும்-கங்காராமைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில் ஒன்றில், இன்று (15) ஏறிக்கொண்டேன்.

பின்னிருக்கையில், இரண்டு ஓரங்களிலும் ஒவ்வொரு அமர்ந்திருந்தனர். மூன்றாவது ஆளாக, நடுவில் நான் அமர்ந்துகொண்டேன்.

அவர்கள் இருவரும் புறக்கோட்டைக்கு வேலைக்குச் செல்லவேண்டும். அணிந்திருந்த ஆடைகளை பார்க்கும் போது அப்படிதான் தெரிந்தது.

இப்பஹாவத்தை சந்திக்கு வருவதற்கு கொஞ்சம் முன்னர்.

பயணி: இச்… நடக்குறான்… மட்டக்குளியிலிருந்து ஒரு மணிநேரமா நடக்குறான் என கை​யை நீட்டி, நீட்டி சத்தமிட்டார்.

பஸ் இப்பஹாவத்தைக்கு வந்துவிட்டது. அந்த தரிப்பிடத்தில் ஒரு பயணிக்கூட இருக்கவில்லை. வெறுமையாக இருந்தது. பஸ்ஸூம் நிறுத்தப்பட்டது.

அந்த பயணிக்கு அருகில் வந்த நடத்துனர். பாத்தையா, பாத்தையா, ஒருவர் கூட ஏறவில்லை. காலையில் கங்காராமையில் இருந்து மட்டக்குளிக்கு இருவருடன் மற்றுமே பயணித்தோம்.

பேசிக்கொண்டிருந்த நடத்துனர், ஹரியாங்… ஹரி… ஹரி…ஹரி என மிக​வேகமாக சத்தம்போட்டார்.

ஏற்​கெனவே, சலித்துகொண்ட பயணி. இப்பமட்டும் வேகமாக போறிங்க… என சத்தமாகக் கூறிவிட்டு பின்னால் பார்த்தார். இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்று வந்துநின்றது.

வழியில் இன்னும் இரண்டொருவர் ஏறிக்கொண்டனர். அவரிடம் பயணக்கட்டணத்தை  நடத்துனர் வாங்கிக்கொண்டார்.

எனது 38 வருடகாலத்தில் இவ்வாறு பயணித்ததே இல்லை. அங்கபாருங்கள், இங்க பாருங்கள் வீதியெல்லாம் வெறிச்சோடி கிடக்குது. நாளையில் இருந்து நடந்துதான் செல்லவேண்டும் 155 பஸ், ஒன்றுக்கூட ஓடுவதில்லை. அரசாங்கம் முடக்கத்தேவையில் முடங்கிதான் இருக்கிறது என்றார்.

பஸ், மீண்டும் நடக்கத்தொடங்கிவிட்டது.

பயணி: ச்சி. மீண்டும் தொடங்கிட்டான். இன்னும் எத்தனை மணிநேரம் எடுக்குமோ? எனக்கூறியதுடன் நாங்கள் வேலைக்கு போறது இல்லையா என சத்தமிட்டார்.

நடத்துனர்: மீண்டும் பின்கதவுக்கு அருகே வந்த நடத்துனர், ஏய்? நீ வாங்குற கடையிலதான் நானும் அரிசி வாங்குறேன். எங்களுக்கு வேற தனியா கடை இல்ல. ஒவ்வொரு சாமான்களும் விலை கூடிவிட்டது. ஒன்ன மட்டும் ஏத்திக்கிட்டு வேகமாக போகமுடியாது என சத்தமாக கூறிவிட்டார்.

பஸ், கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தை கடந்த, தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டது. அதற்கிடையில் 107 இலக்கமுள்ள பஸ்ஸொன்று, 145 பஸ்ஸை கடந்துசென்றுவிட்டது.

பின் ஆசனத்திலிருந்து எழுந்த அந்தப்பயணி, காலை 7.40க்கு மட்டக்குளியில் எடுத்த பஸ், இப்பநேரத்தை பாருங்க, 8.40. ஒரு மணிநேரமா வாறான். நீங்கள் எல்லாம் வாயைப் பொத்திக்கொண்டு இருங்கள். நான்மட்டும் கேட்கிறேன் என,கூறிக்கொண்டே சாரதியின் ஆசனத்துக்கு அருகில் சென்றார். அந்தக் கதவில் நடத்துனரும் நின்றுகொண்டிருந்தார்.

பழைய மீன் சந்தைக்கு அருகில் அப்பயணி இறங்கிவிட்டார். சாதாரண கூலி வேலை செய்பவர் போலவே அரைக்காற்சட்டையை அணிந்திருந்தார்.

பஸ்ஸில் பயணிகள் குறைந்துவிட்டனர். பின்கதவுக்கு அருகிவே வந்துநின்ற நடத்துனர்.

ஒருதடவையில் கிடைக்கும் பணம் டீசல் அடிப்பதற்கே போதவில்லை. காலையில் 2 பயணிகளுடன் சென்றோம். எங்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்ல. எங்களுக்கு மட்டும் என்ன, தனியான கடையா இருக்கு. நாங்களும் நீங்கள் வாங்குற கடையிலதான அரிசி வாங்குகின்றோம் எனக் கூறிகொண்டே இருந்தார்.

பஸ் கங்காராமையை வந்தடைந்தது. இருந்த இரண்டொரு பயணிகளும் இறங்கிவிட்டனர். நடத்துனருடன் பஸ் விரைந்துவிட்டது. செனிட்டைஸரை பூசிக்கொண்டு வீதியை நான் கடந்துவிட்டேன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X