2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையின் இணைபிரியா இசைத்தம்பதி: பிரபா – நிலுக்ஷி

A.P.Mathan   / 2010 நவம்பர் 20 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'எனது திறமையைப் பயன்படுத்தி புதிய சாதனையை இசைத்துறையில் நிலைநாட்ட முனைந்தேன். ஒரு கையில் தபேலா மறுகையில் கீபோர்ட் கால்களில் இரண்டிலும் இசைக்கருவிகளைக் கொண்டு இசையை வித்தியாசமான வடிவில் கொடுத்தேன். எனது திறமை நேரடியாக ஒளிபரப்பப்பட்டாலும் அது சரியான முறையில் பார்வையாளர்களை சென்றடையவில்லை என்ற கவலை எனக்குள் இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் கருப்பையாப்பிள்ளை பிரபாகரன் ஏதோ செய்கின்றார் என்று மட்டுமே உணர்ந்திருப்பார்கள். சரியான அடையாளப்படுத்தலை வழங்குவதற்கு ஊடகங்கள் முனைந்தும் அது மக்கள் மத்தியில் சரியாக சென்றடையவில்லை. எனது திறமைக்கான சரியான அங்கிகாரம் வழங்கப்படவில்லை. அதனால் எனது பரிசோதனை முயற்சி அப்படியே இருக்கிறது...'

'உண்மையில் இவர் அந்த இசை முயற்சிக்கு சரியானதொரு அடையாளம் வழங்கப்படாததால் அதனை மேலும் முன்னெடுத்துச் செல்லாமல் கைவிட்டு விட்டார். இவரைப்போல் எத்தனையோ பேர் மனம் சோர்ந்து தங்களது திறமைகளை மழுங்கடித்துக் கொண்டு இருக்கின்றார்கள்' என்கிறார்கள் இசையால் இணைந்த இசைத் தம்பதிகள் கருப்பையாபிள்ளை பிரபாகரன் மற்றும் நிலுக்ஷி ஜெயவீரசிங்கம்.

மிக நீண்டகாலமாக இசைத்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் இவர்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தவர்கள் என்பது குறிப்பிட்டேயாகவேண்டும். இலங்கையின் சின்னக் குயில் சித்ரா என பலராலும் அறியப்படும் பாடகி நிலுக்ஷி ஜெயவீரசிங்கம் கடந்த கால யுத்த சூழலில் இசைநிகழ்வொன்றில் பாடலொன்றை பாடிக்கொண்டிருந்தபோது குண்டு வெடிப்பில் சிக்கினார். அதில் அவர் இரண்டு வருடங்களை வீட்டிலே செலவிட வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனுடன் அந்த குரல் ஓய்ந்து விடாமல் மீண்டும் எதிரொளித்து இன்னும் பல பாடல்களை எமக்காக தந்துக்கொண்டிருக்கின்றது.

நல்ல இசையமைப்பாளராக, பாடலாசிரியராக பரிணமித்துக்கொண்டிருக்கும் கருப்பையாப்பிள்ளை பிரபாகரன் பல தடங்கல்களையும் தாண்டி இன்னும் இசையமைப்புத் துறையில் தனக்கான ஓர் தனியிடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றார். இவரது பாடலின் வலிகளே அவரது வாழ்வின் அனுபவமாக அமைந்துள்ளன. 'அக்னி' என்ற இசைக் குழுவின் அங்கத்தவர்களான இவர் இசைத் துறையில் திறமையானவர்களுக்கு நல்ல களங்களை வழங்கிவருகின்றார். இக்குழு இலங்கையின் பல பிரதேசங்களிலும் சென்று பல இசை நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

இசைத் தொகுப்புகள் பலவற்றை வெளியிட்ட பிரபா, அதற்கான சரியான அங்கிகாரம் ஊடகங்களால் வழங்கப்படவில்லையென்று ஆதங்கப்படுகின்றார்.

உண்மையில் இலங்கை முயற்சிகளுக்கு இலங்கை ரசிகர்கள் ஆதரவும் அங்கிகாரமும் வழங்குவது குறைவென்றே கூறவேண்டும். அந்நியநாட்டு ஆட்டங்களை ரசிக்கும் நாம், நம்நாட்டு நடனங்களை ஏளனப்படுத்துவது இயல்பான ஒன்றாய் போய்விட்டது.

கருப்பையாப்பிள்ளை பிரபாகரன் மற்றும் நிலுக்ஷி ஜெயவீரசிங்கம் இருவரும் இசை தம்பதிகளாக வாழ்வதே இருவருக்கும் இத்துறையில் சிகரத்தை எட்டிப்பிடிப்பதற்கு உறுதுணையாய் அமைந்துள்ளது. இங்கு ஒருவருக்கொருவரிலான நல்ல வழிப்படுத்தல்களே மிகச் சிறந்த படைப்புகளை எம்முன் பிரசவிக்கின்றன.  

தேவை வரும்போது தம்மை தேடி வருபவர்கள் தங்களது தேவைகள் நிறைவேற்றப் பட்டபின் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. நாங்கள் தொடர்பை ஏற்படுத்தினாலும் கூட அதற்கு செவிமடுக்கின்றார்கள் இல்லை. எங்களுக்கான நல்ல சந்தர்ப்பங்களை ஊடகங்கள் சரியாக வழங்குவதற்கு தவறுகின்றன என்பது இவர்கள் இருவரது மனதிலும் இருக்கும் ஓர் ஆதங்கமாகவே உள்ளது.

சரி... இணை பிரியாத இசைத்தம்பதியாக திகழ்கின்ற நம்நாட்டின் இசை முத்துக்கள் கருப்பையாப்பிள்ளை பிரபாகரன் மற்றும் நிலுக்ஷி ஜயவீரசிங்களம் ஆகியோர் 'தமிழ்மிரர்' இணையத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் காணொளியை இங்கு காணலாம்...

கருப்பையாப்பிள்ளை பிரபாகரனின் சாதனை படைக்கும் முயற்சி வீடியோ வடிவில்...


  Comments - 0

 • kishor Monday, 06 December 2010 11:52 AM

  வாழ்த்துக்கள் பிரபா , நெலுக்க்ஷி
  உங்களுடைய வளர்ச்சிக்கும் அறிமுகப்படுத்திய இரண்டு நபர்களை. மறந்துவிட்டீர்கள். அவர்கள் தான் கே .டி.பிரசாத் ,அப்சராஸ் மோகன்ராஜ்.

  Reply : 0       0

  meipporul Friday, 04 February 2011 04:38 AM

  உங்கள் இசைப் பயணத்தில் தம்பதிகளாக சாதிக்கிறீர்கள்.கடின முயற்சிகள் ஒருபோதும் தோற்பதில்லை.

  Reply : 0       0

  Nowfar alm Wednesday, 17 August 2011 02:40 PM

  அற்புதமான கலைத் தம்பதிகள்... இவா்களது கலைப் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள். பொதுவாக இலங்கை கலைஞா்கள் ஏதோ ஒரு வகையில் பின் தள்ளப்பட்டு வருவது கவலைக்கிடமான விடயம். வியாபார நேக்கத்திற்காக மட்டும் அவா்களை பயன்படுத்துபவா்கள் ஒரு கனம் சிந்திக்க வேண்டும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X