2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

குச்சிப்புடி, மோகினி போன்ற நடன வகைகள் குறித்த விழிப்புணர்வற்ற சமூகமே இங்கு உள்ளது: ஜெயதீபா

Kogilavani   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

'குச்சிபுடி, மோகினி, கிராமிய நடனம் என அனைத்து வகையான கலைகளையும் கற்றுக்கொடுக்கும் ஓர் இடமாக நான் உருவாக்கப்போகும் நடனக் கல்லூரி அமையப்போகின்றது. மருவிக்கொண்டு போகும் அனைத்துக் கலைகளையும் மீண்டும் உயிர்பிக்க வேண்டும். அதுவே எனது முதல் நோக்கம். குச்சிப்புடி, மோகினி போன்ற நடன வகைகள் குறித்த விழிப்புணர்வு அற்ற சமூகமே இங்கு காணப்படுகின்றது. இதனை பட்டிதொட்டி தோறும் விஸ்தரிக்க வேண்டும். அதேபோல் கூத்தும் எம்முடைய ஒரு பாரம்பரிய கலையென்பதையும் அது அழிந்துகொண்டு போகின்றது என்பதையும் இங்கு எடுத்துக்கூறியே ஆகவேண்டும்' என்கிறார் பல்துறைசார் கலைஞரும் நடன தாரகையுமான ஜெயதீபா சக்திவேல்.

பரதம், குச்சிப்புடி, மோகினி, கதக், கூத்து, உறுமி என பல துறைகளையும் கற்றுத்தேர்ந்து, தனக்கென ஒரு முத்திரையை பதித்திருக்கும் ஜெயதீபா சக்திவேல், இந்தியாவின் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் பரதநாட்டியத்தில் இளநுண்கலைப் பட்டத்தையும் முது நுண்கலைப் பட்டத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளவத்தை சாந்த கிளேயர் வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர், 'நர்த்தன நிர்ணயா' நிறுவனத்தில் தமது ஆரம்ப நடனக்கலையை பயின்றார். இவரது முதல் நடன குரு மேல் மாகாண நடன ஆசிரிய ஆலோசகர் திருமதி தயானந்தி விமலச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயதீபா அருஸ்ரீ கலையரங்கிலும் அங்கத்துவராக இருந்து பல்வேறு நடன நிகழ்வுகளினூடாக பலரின் மனதில் இடம்பிடித்திருக்கின்றார். பரதத்தை மட்டும் பயின்று அதனையே தமது மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க நினைக்கும் பல கலைஞர்களுக்கு மத்தியில் இவர் தனக்கேயுரிய நடனங்களாக குச்சிப்புடி மற்றும் மோகினி போன்ற நடனங்களை தேர்ந்தெடுத்து அதனை எமது நாட்டில் விஸ்தரிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார்.

இவரை தமிழ்மிரர் இணையத்தளத்தின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதிக்கு அவர் அளித்த செவ்வி பின்வருமாறு:

கேள்வி:- நடனத்துறையில் நீங்கள் எவ்வாறு உள்வாங்கப்பட்டீர்கள் என்பதை விபரிக்க முடியுமா?

பதில்:- சிறுவயதிலிருந்தே ஒவ்வொரு கலைகளையும் மிகவும் விரும்பியும் ரசித்தும் பார்ப்பவள் நான். நடனம், இசை, ஓவியம் என அனைத்துக் கலைகளையும் ஆர்வத்துடன் பார்த்தும் கேட்டும் ரசிப்பேன். நாட்டிய கலைமணி திருமதி தயானந்தி விமலச்சந்திரன் தனது மாணவர்களுக்கு நடனம் கற்பித்துக்கொண்டிருந்த நுட்பத்தை பார்த்து எனக்கும் நடனத்தை கற்றுத்தேற வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலே எழுந்தது. எனது 12 வயதில் நான் அவரிடம் நடனத்தை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அந்த ஆரம்பமே இன்று நடனம் சார்ந்த பல்வேறு பிரிவுகளையும் கற்றுக்கொள்வதற்கான உந்துதலை தந்தது.

கேள்வி:- பரதம், மோகினியாட்டம், குச்சிப்புடி என பல பிரிவுகளில் நடனத்தை பயின்றுள்ளீர்கள். இந்தப் பிரிவுகளில் நீங்கள் அதிகம் விரும்பும் நடனம் எது?

பதில்:- பரதம், மோகினி, குச்சிப்புடி என பல்வகை நடனங்களை பயின்றுள்ளேன். எல்லா நடனப்பிரிவுகளுமே ஒவ்வொன்றில் ஒவ்வொன்று வேறுபட்டு நிற்கின்றது. நான் கற்ற பிரிவுகள் அனைத்தும் எனக்கு மிகவும் விருப்பமாக இருந்தாலும் கூட என்னை அதிகமாக கவர்ந்தது பரதம்தான்.

கேள்வி: பரதத்திற்கும் குச்சிப்புடி மற்றும் மோகினியாட்டத்திற்கு இடையில் நீங்கள் எவ்வாறான வேறுபாடுகளை உணர்ந்தீர்கள்?

பதில்:- தாண்டவம், லாஷ்யம் என இரு பிரிவுகளை பரதம் கொண்டுள்ளது. தாண்டவமென்பது சிவபெருமான் ஆடிய நடனம். லாஷ்யம் என்பது பார்வதியம்மையார் ஆடியது. தாண்டவமென்பது ஆண்களுக்குரியதாக காணப்படுகின்றது. இது மிகவும் கடினமானதாக காணப்படும். லாஷ்யம் என்பது பெண்களுக்குரிய மிக மெல்லிய நடனமாகும்.

குச்சுப்புடி நடனமானது தாண்டவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதேபோல் மோகினியாட்டமானது லாஷ்யத்தை அடிப்படையாகக் கொண்டது. இதனால் இந்நடனத்தை பெண்கள் இலகுவாகக் கற்றுக்கொள்ளலாம்.

கேள்வி:- எமது நாட்டில் பரதத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஏன் குச்சிப்புடி, மோகினி போன்ற நடனங்களுக்கு கொடுப்பதில்லை?

பதில்:- உண்மையில் எமது நாட்டினருக்கு இவ்வாறான நடன வகைகள் இருக்கின்றனவா என்பது தெரியாமல் இருப்பதே இலங்கையில் இந்நடன வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமலிருப்பதற்கு பிரதான காரணமென நான் நினைக்கிறேன். இவ்வாறான நடனங்களை பயின்றுவரும் ஆசிரியர்கள் இந்த நடனங்களையும் மாணவர்களுக்கு போதிக்க வேண்டும்.  குச்சிப்புடி, மோகினி போன்ற நடனவகைகளும் இருக்கின்றன என்பதை பல்வேறு நடன நிகழ்வுகளின் வாயிலாக அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும். அந்நடனங்களுக்கு இருக்கும் முக்கியத்தும், எளிமை, கடினம் என்பவற்றை விளக்கிட வேண்டும். இவ்வாறு செய்தால் இந்நடன வகைகளுக்கும் இலங்கையில் முக்கியத்துவம் கொடுக்கப்படுமென நான் கருதுகின்றேன்.

அதனால்தான் நான்கூட எனது நாட்டிய நிகழ்வில் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தேன். தொடர்ந்து பரதத்தையே அளிக்கை செய்யாமல் ஒரு வித்தியாசமாக இவ்வாறான குச்சிப்புடி, மோகினி போன்ற நடனங்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும்போது அல்லது வழங்கும்போது இந்நடனத்திற்குரிய முக்கியத்துவம் எல்லோருக்கும் போய் சேரும் என்பதோடு இந்நடனம் பற்றிய அறிதலும் ஏற்படும். அதனால்தான் எனது நாட்டிய நிகழ்விற்குக் கூட 'நூபுர நாட்டியம்' என்ற பெயரை வைத்தேன்.

கேள்வி:- பொதுவாக இலங்கையில் நடன நிகழ்வுகளில் பாத்திரமேற்கும் அநேகமானவர்கள் அவர்களுக்கான பாத்திரத்தை உணர்ந்து செய்வதில்லையென்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. இதைப்பற்றி உங்களது கருத்து என்ன?

பதில்:- உண்மையில் இங்கு அனேகமான மாணவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. இந்தியாவில் ஒரு சிறிய பிள்ளையை எடுத்துக்கொண்டாலும் அந்த பிள்ளை தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தை உணர்;ந்து செய்யும். இங்கு மாணவர்கள் தமது பாத்திரத்தை உணர்ந்து செய்வதில்லை. மாணவர்கள் கலைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் குறைவு. பரதத்தை பயிலவேண்டும் என்பதற்காக பயில்கின்றார்கள்.
அதேபோல் பரதம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை இங்கு கூறியாக வேண்டும். மாணவர்கள் முன் ஆடுவதற்கு ஆசிரியர்கள் வெட்கப்படும் நிலை இங்கு காணப்படுகின்றது. நடனத்திற்கான 'தியரிகள்' மிகவும் குறைவாக இங்கு வழங்கப்படுகின்றன. பயிற்சிகளை வழங்குகின்றார்கள். ஆனால் தியரிகள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் சரியாக வழங்கப்பட வேண்டும். அப்போதே பரதம் பயிலும் மாணவர்கள் சிறப்பாக அந்த நடனத்தை விளங்கிக் கொள்வார்கள்.

அதையும்விட ஆசிரியர்கள் தமது மாணவர்களுக்கு எந்தப்பகுதி மிகவும் கஷ்டமாக இருக்கிறதோ அதை அப்படியே விட்டுவிட்டு வேறு ஒரு நடனத்திற்கு சென்று விடுகிறார்கள். நடனத்தின் எந்தப் பகுதி கடினமென மாணவர்கள் கருதுகின்றார்களோ அதையே அவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொடுக்க வேண்டும். மாணவர்கள் விடும் பிழைகளை ஆசிரியர்கள் சுட்டிக்காட்டி அதை மீண்டும் விடாதபடி செய்யவேண்டும். இவ்வாறான சிறுசிறு பிழைகளை திருத்திக்கொள்ளும்போது ஒரு கலை நிகழ்வின்போது சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள் என்ற பெயரை பெறுவதுடன் சிறப்பான வரவேற்பையும் பெறமுடியும்.

கேள்வி:- நீங்கள் பரதத்தை இங்கு பயின்றதற்கும் மேலதிகமாக இந்தியாவில் சென்று பயின்றதற்கும் ஏதேனும் வேறுபாடுகளை உணர்ந்தீர்களா? அல்லது நீங்கள் அங்கு எதிர்நோக்கிய சவால்களென எதனை கூற விரும்புகின்றீரகள்?

பதில்:- இங்கிருந்து சென்று 6 மாதங்களின் பின்பே அந்தச் சூழலிற்கு ஏற்றாற்போல் என்னை மாற்றிக்கொள்ள முடிந்தது. சவால்களென எதுவும் இல்லை. இங்கிருந்து வேறு நாட்டிற்குப் படிப்பதற்காகச் சென்றேன் என்ற எண்ணம் எப்போதும் இருந்ததால் என்னால் எவ்வளவு தூரம் கற்றுக்கொள்ள முடியுமோ அனைத்தையம் கற்றுக்கொண்டேன்.

அதேபோல் அங்கிருந்த ஆசிரியர்கள் எமக்கு கொடுத்த ஊக்குவிப்புக்களை இங்கு நினைவூட்டியே ஆக வேண்டும். அங்கு கலை நிகழ்வுகள் அதிகமாக நடக்கும். அந்தக் கலை நிகழ்வுகளில் ஒவ்வொருவரும் பங்குப்பற்றி தமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் நான் கண்டிய நடனத்தை மேடையேற்றினேன். அதற்கு நல்ல வரவேற்புகள் கிடைத்தன. என்னால் எவ்வளவு தூரம் கற்க முடியுமோ அதுவரை நான் கற்றுக்கொண்டேன். ஆனால் முதல் 6 மாதகாலத்திற்கு நான் பட்ட சிறுசிறு கஷ்டங்களை இங்கு இருந்து செல்லும் யாரும் எதிர்நோக்கக்கூடாது என்பதற்காக அதைப்போன்ற ஒரு நடனக் கல்லூரியை இங்கும் உருவாக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.

கேள்வி: எவ்வாறான கல்லூரியை உருவாக்கப்போகின்றீர்கள்? உங்களது அந்த முயற்சி குறித்து விளக்கமுடியுமா?

பதில்: இந்தியாவில் கலைக்காவிரி போன்று ஒரு நடனக்கல்லூரியை இலங்கையிலும் உருவாக்குவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளேன். கலைக்காவிரியில் ஏழை, பணக்காரர்கள் என்ற பேதம் இருக்காது. கலை மீது ஆர்வம் இருந்தால் மட்டும்போதும். அதேபோல பரதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நான் உருவாக்கப் போகும் அந்தக் கல்லூரி இருக்காது. குச்சிபுடி, மோகினி, கிராமிய நடனம் என அனைத்து வகையான கலைகளையும் கற்றுக்கொடுக்கும் ஓர் இடமாக நான் உருவாக்கப்போகும் நடனக் கல்லூரி அமையப்போகின்றது. மருவிக்கொண்டு போகும் அனைத்துக்கலைகளையும் மீண்டும் உயிர்பிக்க வேண்டும். அதுவே எனது முதல் நோக்கம்.

குச்சிப்புடி, மோகினி போன்ற நடன வகைகள் குறித்த விழிப்புணர்வு அற்ற சமூகமே இங்கு காணப்படுகின்றது. இதனை பட்டிதொட்டி தோறும் விஸ்தரிக்க வேண்டும். அதேபோல் கூத்தும் எம்முடைய ஒரு பாரம்பரிய கலையென்பதையும், அது அழிந்துக்கொண்டு போகின்றது என்பதையும் இங்கு எடுத்துக்கூறியே ஆகவேண்டும். அந்தக்கலை கற்றுக்கொடுக்கவும் இக் கல்லூரி தயாராகவே இருக்கும்.

கேள்வி: கிராமிய நடனங்கள் குறித்து உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்: உண்மையில் இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, கிராமிய நடனங்கள் அழிந்துகொண்டு போகின்றன. இந்தியாவில் எமது பாடத்திட்டத்தில் ஒரு வினாத்தாளில் கூத்துக்கள் மற்றும் கிராமிய நடனங்கள் குறித்து வருகின்றது. உண்மையில் கூத்துக்கள் ஆடுவது மிகவும் இலகுவானது. எந்தவித பதற்றமும் இல்லாமல் ஆடலாம். கூத்துக்களுக்கும் பரதத்தைப் போன்று சில அடவுகள் காணப்படுகின்றன. பரதத்தில் காணப்படும் இறுக்கமான தன்மை கூத்தில் இல்லை. இலகுவாக ஆடிக்கொண்டு செல்லலாம்.

கேள்வி: நீங்கள் உங்களது மூத்த கலைஞர்களிடமிருந்து எதிர்கொண்ட சவால்கள் குறித்து கூறமுடியுமா?
பதில்: மூத்த கலைஞர்களிடமிருந்து இதுவரை எவ்விதமான சவால்களையும் நான் எதிர்கொள்ளவில்லை. என் மூத்தோர்களிடமிருந்து நான் அதிகமானவற்றை கற்றுக்கொள்ளவே விரும்புகின்றேன். எனக்குத் தெரியாத அனைத்தையும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நடனம் என்பது விசாலமானது. நான் விரல் நுனியளவே கற்றுக்கொண்டுள்ளதாக உணர்கிறேன். இன்னும் எவ்வளவோ கற்றுக்கொள்வதற்கு உண்டு. அவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதை எனது மூத்தோர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

கேள்வி: இலங்கையில் நடனக் கலையின் நிலை குறித்து உங்களது கருத்து என்ன?

பதில்: இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஏதேனும் நடன நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறான கலை நிகழ்வுகளினூடாக புதிய கலைஞர்கள் தினம் தினம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். அவர்களது திறமைகள் வெளிக்கொணரப்படுகின்றது. ஆனால் இலங்கையில் அவ்வாறான நடன நிகழ்வுகள் இடம்பெறுவது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. பிரமாண்டமான அளவில் இல்லையாயினும் சாதாரண முறையில் நடன நிகழ்வுகளை மேற்கொண்டாலும்கூட புதிய நடனக் கலைஞர்கள் வெளிக்கொணரப்படுவார்கள்.
இங்கு தினமொரு மாணவியின் அரங்கேற்றம் நிகழ்கின்றது. அரங்கேற்றத்தின் பின் அவர்கள் என்னவாகின்றார்கள் என்று தெரியாமல் உள்ளது. எனவே இவ்வாறானவர்களை ஒன்றிணைப்பதற்காகவாவது நடன நிகழ்வுகளை அதிகமாக முன்னெடுத்தால் அதிகமான திறமைசாலிகளை வெளிக்கொணர முடியும்.

நேர்காணல்:க.கோகிலவாணி
படங்கள்:- குஷான் பதிராஜ


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X