2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

அசண்டை வேண்டாம்

Editorial   / 2021 மே 17 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசண்டை வேண்டாம்; முண்டியடித்தால் மீளவும் முடக்கத்துக்கே வழிசமைக்கும்

பழ மொழிகளில் பல வழக்கொழிந்துவிட்டன; இன்னும் சில உருமாறிவிட்டன. அதிலொன்றுதான், ‘பந்திக்கு முந்து; படைக்குப் பிந்து’ எனப் பலரும் கூறும் பழமொழியாகும். பந்திக்கு முந்திச் சென்று சாப்பிடவேண்டும்; கடைசியில் சென்றால் சில வகை உணவுகள் தீர்ந்துவிடக்கூடும். ஆனால், படையில் பின்னுக்குச் செல்ல வேண்டும். தவறி முன்னால் சென்றால், ஆபத்து என்பதே பொதுவான அர்த்தமாகும். ஆனால், இந்தப் பழமொழிக்குள் ஆழமான பல அர்த்தங்கள் பொதிந்துள்ளன. 

பந்தியில், வலது கை முந்தும்; போரில், எதிரியைத் தாக்க, அம்பை எய்துவதற்காக, பின்னோக்கி வில்லின் நாணை இழுக்கவேண்டும். அதுதான், ‘பந்திக்கு வலது கை முந்தும்; படைக்குப் பிந்தும்’ என மற்றோர் அர்த்தம் கற்பிக்கின்றனர்.

பொதுவாகவே பார்க்கும் பொழுது, ‘பந்திக்கு முந்து’ என்பதற்கு அப்பாற்சென்று, தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு முந்திக்கொள் என்றே பழமொழியை, தற்போதைய நிலைமைக்கு ஏற்றால்போல மாற்றவேண்டி இருக்கிறது. அந்தளவுக்கு, மக்களிடத்தில் ஓர் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

முதலாவது அலைக்குப் பின்னர், தடுப்பூசியை ஏற்றும்போது, அஞ்சியவர்கள், எந்தவகையாக இருந்தாலென்ன, ஏற்றிக்கொள்ள வேண்டுமென்ற விடாப்பிடியில், கால்கள் கடுக்க, நீண்ட நேரமாக வரிசையில் நின்று, தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதை அவதானிக்க முடிகிறது.

கடந்த மூன்று நாள்களில், தடுப்பூசியை ஏற்றிக் கொண்டோரின் எண்ணிக்கை அதிகமாகுமென புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருபுறத்தில் சந்தோஷமாக இருப்பினும், வரிசையில் நிற்போருக்கு இடையில், ஒருசில இடங்களில் சமூக இடைவெளியைக் காணக்கிடைப்பது அரிதாகவுள்ளது. ஆக, அவையெல்லாம் ‘தடுப்பூசி கொத்தணி’யை உருவாக்கிவிடும்.

தடுப்பூசியின் மீதிருந்த பயம், போக்கடிக்கப்பட்டு உள்ளது. ஆகையால், தடுப்பூசியை ஏற்றும் செயற்பாடுகளை நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்க வேண்டும். அப்போதுதான், கொரோனா வைரஸ் பரவலின் அச்சத்தை தடுக்கமுடியும். சுகாதார தரப்பினரால் முன்னெடுக்கப்படும் தற்போதைய திட்டங்கள் இன்னும் வகைப்படுத்தப்பட வேண்டும்.

தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களும் ஏற்கெனவே, கடைப்பிடித்த சுகாதார வழிமுறைகளை அச்சொட்டாகக் கடைப்பிடிக்க வேண்டும்; அசண்டையாக இருந்துவிடக்கூடாது.

சில நாடுகளில், இரண்டு தடவைகள் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டாலும் முகக்கவசத்தைக் கழற்றக்கூடாதென அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆகையால், திரிபடையும் கொரோனா வைரஸூகள், எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதற்கெல்லாம் பதிலில்லை: ஆகையால், மிகக்கவனமாக நாம் இருப்பதே உசிதமானது.

கொரோனா மட்டுமல்ல; பழமொழிகளும் அவற்றின் அர்த்தங்களும் உருமாறி வருகின்றன.  ‘பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து’ என்பதை பந்திக்கு ‘முன் தீ’, படைக்கு ‘பின் தீ’ எனவும் திரிபடைந்துள்ளது. அதாவது, வீட்டு விழாக்களுக்கு ‘இத்தனை பேர் வருவார்கள்’ என ஒரு யூகமாக ‘முன்பே’ தீ மூட்டிச் சமைப்பார்கள்,

போர்க்கள சமையற்காரர்கள், அன்றைய போர் முடிந்து உயிருடன் வருவோரின் எண்ணிக்கை தெரியாமல் இருப்பர், அவர்கள் வந்தபின்னர், ‘பின் தீ’ மூட்டிச் சமைப்பார்கள். அதைபோலவே, தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளச் சென்றவர்கள், கொரோனா வைரஸை அரவணைத்துக் கொண்டு, வீடுகளுக்குத் திரும்பிவிடக்கூடாது என்பதே, எமது ஆழ்ந்த கரிசனையாகும்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .