2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

ஜீவன் உள்ள வரை சுடலைஞானக் கூத்தாடிகளுக்கு ‘நாவடக்கம்’ வேண்டும்

Editorial   / 2021 ஏப்ரல் 12 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜீவன் உள்ள வரை சுடலைஞானக் கூத்தாடிகளுக்கு ‘நாவடக்கம்’ வேண்டும்

வாயைத் திறப்பதை விடவும், அமைதியாக இருப்பதன் ஊடாகப் பிரச்சினைகள் பல உருவாகாமல் இருப்பதைத் தவிர்க்கலாம். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவகையில், நாவை அடக்கிக் கொள்ளவேண்டும். ஆனால், பேசவேண்டிய சூழ்நிலையில் கட்டாயமாகப் பேசியே ஆகவேண்டும்.

‘உயிர்’ என்ற சொல்லுக்கு ஒத்தக்கருத்துள்ள பல சொற்கள் இருந்தாலும் ‘ஜீவன்’ என்ற சொல்லைப் பலரும் பயன்படுத்துகின்றனர். அந்த ஜீவன் இருக்கும் வரையிலும், நாமெல்லாம் என்னென்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்பதே தெரியாது.

சிலர், வெறுமனே நேரத்தைப் போக்கிக் கொண்டிருப்பர், அவ்வாறானவர்கள் மரண வீட்டுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பர், அதில், சிலர் உயிரற்ற உடலைப் பார்த்து, வாழ்க்கையின் நிலையில்லாத தன்மையை உணர்வார்களாம். அப்போதுதான், ஞானம் பிறக்குமாம்.

மரண வீடு முடிந்து, வீட்டுக்குத் திரும்பி, குளித்துவிட்டுச் சாப்பிட்டு விட்டால், அந்த ஞானமும் போய்விடுமாம். அதுதான் சுடலை ஞானமாகும். பொதுவெளியை பார்க்கும் போது, ‘சுடலை ஞானக் கூத்தாடி’களுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கிறது.

பேசத் தெரியாத அரசியல்வாதிகளுக்கு அரசியல் இல்லை; ஆனால், கத்துக்குட்டி அரசியல்வாதிகள் என்ன பேசுகின்றோமெனத் தெரியாமலே உளறுகின்றனர். அதற்காக, முடிவில்லாது கண்ட கண்ட கதைகளைக் கட்டிவிடுகின்றனர். அதில், 1,000மும் இருக்கும்.

சமூகத்தில் நன்மதிப்பை பெற்றவர்கள், மக்களின் பிரதிநிதிகள் போன்றோர் நடப்பு விவகாரங்களை அறிந்துவைத்திருக்க வேண்டும். இல்லையேல், ஓரங்கட்டப்படுவர். அதேபோல, கைகளை எதற்காக தட்டுகின்றோம் என்பதில், பார்வையாளர்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும். தேவையில்லாத கைதட்டல்கள், ஒரு சமூகத்தின் மீதான பார்வையையே திசைதிருப்பிவிடும்.

ஆபாசமாகவும் திமிர்த்தனமாகவும் பேசும் பேச்சைக்கேட்டு, கைதட்டும் கூட்டம் இருக்கிற வரைக்கும், பேசுபவர்களுக்குக் குறையே இருக்காது. ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதைப்போல, முழுச் சமூகத்தையும் அப்பேச்சு கேவலப்படுத்திவிடும்.

சமூகத்தில் அந்தஸ்துள்ள ஒருவர், பொதுவெளியில் மிகக் கவனமாக இருக்கவேண்டும். ஆனால், சமூக வலைத்தளங்களுக்கு செல்லமுடியாத அளவுக்கு, கத்துக்குட்டி அரசியல்வாதியின் பேச்சு, அந்தச் சமூகத்தை மிகக் கேவலமாகச் சித்திரிக்கும் அளவுக்கு, கடந்த இரண்டொரு நாள்களில் இழுத்துச் சென்றிருக்கின்றது.

அரசியல் சாக்கடைக்குள் தத்தளித்து கொண்டிருப்பவர்கள், தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக எவற்றை வேண்டுமென்றாலும் பேசுவார்கள், மாந்தரை இழிவுபடுத்தும் இவ்வாறான பேச்சுகளைக் கேட்டு, கைதட்டும் கூட்டங்கள் இருக்குவரையிலும் சுடலைஞான கூத்தாடிகளும் இருக்கவே செய்வார்கள்.

சமூகத்துக்கு சேவை செய்ய வந்திருக்கும், மக்களின் பிரதிநிதிகளாக இருப்போரின் வண்டவாளங்களை அம்பலத்துக்குக் கொண்டுவர வேண்டியதில்லை. ஆனால், பொதுவெளிக்கு வந்து, வண்டவாளங்களைத் தன் வாயாலேயே அவிழ்த்துவிட்டுவிடக் கூடாது.

ஏனெனில், இந்த ஜீவன் இருக்கும் வரையிலும், சுடலை ஞானம் இருக்கும். ஆகையால், அதுவரையிலும் நாவடக்கம் அவசியமாகும் என்பதே எங்களுடைய அழுத்தம் திருத்தமான வலியுறுத்தலாகும். இல்லையேல் சீரழிவை தவிர்க்க முடியாது. (படம்: நன்றி இணையம்) 12.04.2021


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .