2022 ஜூலை 07, வியாழக்கிழமை

முள்கிரீடத்தை தலையில் ஏந்தியிருக்கும் ரணில்

Editorial   / 2022 மே 14 , மு.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்தும், கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு எம்.பி-ஐ வைத்துக்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார்.

இலங்கையில் அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்கே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் வியாழக்கிழமை (12) பிரதமராக பொறுப்பேற்றார்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்தும், கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு எம்.பி-ஐ வைத்துக்கொண்டு. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார். இலங்கையின் அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலும் ஒரே எம்.பி-ஐ வைத்துக்கொண்டு பிரதமர் நாற்காலியை அலங்கரித்திருக்கிறார் ரணில்.

முன்னாள் பிரதமர் மஹிந்த  ராஜபக்‌ஷ, மே. 9 ஆம் திகதி தன்னுடைய பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை புதிய பிரதமராக பதவி ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். ஆனால், அவரோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பதவி விலக வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளை முன்வைத்தார்.

1977-ம் ஆண்டு முதல் தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகினார். ரணில் விக்கிரமசிங்க. ஆனால், 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் ரணில் விக்ரமசிங்கவும், அவரின் ஐக்கிய தேசியக் கட்சியும் படும் தோல்வியடைந்தது. மேலும், ஒரே ஒரு பாராளுமன்ற இருக்கையை கூட அவரின் கட்சியால் பெறமுடியவில்லை.

எனினும், நாடு முழுவதுவும் கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தது. இதனை யாருக்கு வழங்குவது என்ற விவாதம் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த நிலையில், கட்சியின் தலைவருக்கே அந்தப் பதவியை வழங்க வேண்டும் என அந்தக் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக்கொண்டுதான், பாராளுமன்றத்துக்குள் மீண்டும் நுழைந்தார் ரணில் விக்ரமசிங்க. தனியொருவராக பாராளுமன்றத்துக்கு வந்தாலும் அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டுவதுடன், நாட்டின் நிலைமைகளையும் பாராளுமன்றத்தில் தொடர்ந்து பேசிவந்தார் ரணில்.

இந்த நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்குவதற்காக அமைக்கப்படவிருக்கும் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். பிரதமராக ரணில் பதவியேற்பது இது ஆறாவதுமுறை.

எஸ்மண்ட் விக்ரமசிங்க, நளினி விக்ரமசிங்க ஆகியோருக்கு 1949-ம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி பிறந்தவர் ரணில். கொழும்பு ரோயல் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியை கற்றவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியை பயின்றார்.

இதனையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் களனி தொகுதி பிரதான அமைப்பாளராக 1970-ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டு, பின்னர் ̀பியகம' தொகுதியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின்பு, 1977-ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் பியகம தொகுதியில் வெற்றிபெற்று பாராளுமன்றத்துக்கு அதே வருடத்தில் அமைச்சராகவும் பதவி வகித்தார்.

1993 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்கே பிரேமதாச கொலை செய்யப்பட்டதால், இடைக்கால ஜனாதிபதியாக டி.பி.விஜேதுங்க நியமிக்கப்பட்டதுடன், 1993-ம் ஆண்டு மே மாதம் ஏழாம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

1999-ல் நடைபெற்ற ஜனாதிபதித்  தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க முதன்முறையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதனைத் தொடர்ந்து, 2001 டிசெம்பர் 5-ம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதால், 2001 டிசெம்பர் 09-ம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். எனினும், 2004 ஏப்ரல் 2-ம் திகதி வரையே பதவி வகித்தார். மீண்டும் 2005 நவம்பர் 17-ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித்  தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டாலும் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் தோல்வியடைந்தார்.

 

இதனையடுத்து, 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ரணில் - மைத்திரி கூட்டணி வெற்றிபெற்றதை அடுத்து, மூன்றாவது முறையாக ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். 2015-ம் ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, அப்போது நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதன் ஊடாக, நான்காவது முறையாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

எனினும், 2018 ஒக்டோபர் மாதம் ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சி மூலம் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை, பிரதமராக்கினார். ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக ரணில் விக்ரமசிங்க ஐந்தாவது தடவையாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்  தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ, வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் பதவியிலிருந்து விலகிய ரணில் விக்மசிங்க, அந்த ஆட்சியின் கீழ் நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தார்.

1977-ம் ஆண்டு பாராளுமன்ற அரசியலுக்கு வந்தபிறகு ரணில் எந்தவொரு பொதுத்தேர்தலிலும் தோல்வி அடைந்ததில்லை. 42 வருடங்களாக தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனையும் படைத்திருக்கிறார். 2020-ம் ஆண்டு தோல்வியைத் தழுவினாலும் கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் ஊடாக மீண்டும் பாராளுமன்றம் வந்தார்.

இந்த நிலையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வந்த பின்னணியில், ரணில் விக்ரமசிங்கவின் ஆளுமை மற்றும் அவரின் அனுபவம் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ஆட்சியில் இன்று அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

6 ஆவது முறையாகப் பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, இதுவரை ஒரு முறைக்கூட அந்தப் பதவியில் முழுமையாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரணில் முன் இருக்கும் சவால்கள் என்னென்ன?

இப்போது ரணில் முன் உள்ள சவால்கள் இரண்டு. ஒன்று அரசியல் உறுதிப்பாடு. அடுத்தது பொருளாதாரம்.

எதிரவரும் செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றத்தில் அவர் தனது அரசாங்கத்துக்கான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஏற்கெனவே அவரது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி விஷயத்தில் பல எம்.பி-க்கள் அதிருப்தியில் இருப்பதால், அவர்கள் ரணிலை ஆதரிப்பார்களா என்றும், எதிர்க்கட்சி வரிசையில் இருப்போர் அவருக்கு ஒத்துழைப்பார்களா என்றும் தெரியவில்லை.

இந்நிலையில், பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர், கொள்ளுப்பிட்டியில் உள்ள விஹாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரணில், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தனக்கு இருக்கிறது எனக் கூறுகிறார். அவர், அதில் வெல்லும் நிலைமையே இருக்கிறது.

மறுபக்கம் இப்போது தட்டுப்பாடாக இருக்கும் மருந்துப் பொருள்கள், உணவு, சமையல் எரிவாயு ஆகியவற்றை மக்களுக்கு கிடைக்கும் ஏற்பாடுகளை உடனே செய்யவேண்டும். மக்களின் ஆத்திரத்தை தணிக்க அவர் செய்யவேண்டிய முதல்வேலை இது என்றார்.

பிரதமராக ரணில் பதவியேற்றதும். அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றன. ஆனால், சீனா இதுவரையிலும் (இக்கட்டுரை பிரசுரமாகும் வரையிலும்) வாய் திறக்கவில்லை.

பிரதமராக தனது முதல் பயணமாக இந்தியா செல்லவிருக்கிறார் ரணில். மோடியுடன் பேசி முக்கியமான அடிப்படைப் பிரச்னைகளை அவர் தீர்க்கும் முயற்சிகள் தெரிகின்றன.

பிரதமர் பதவி எனும் முள்கிரீடத்தை தலையில் ஏந்தியிருக்கும் ரணில், அவரது அனுபவத்தை முழுமையாகப் பயன்படுத்தி இலங்கைச் சிக்கலைத் தீர்த்தால், அடுத்த ஜனாதிபதி அவர் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

என்ன செய்யப்போகிறார் ரணில்... பொறுத்திருந்து பார்ப்போம்!

நன்றி விகடன்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .