2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

புதிய போரொழுங்கின் முதலாம் அத்தியாயம் - 02 9/11க்கு முன்: கதைச் சுருக்கம்

Johnsan Bastiampillai   / 2021 செப்டெம்பர் 05 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

இதை எழுதத் தொடங்கும்போது, அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டன என்ற செய்தியை காணக் கிடைத்தது. 21ஆம் நூற்றாண்டின் முதலாவது ஆக்கிரமிப்புப் போர், 20 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வருகிறது. 

இந்தக் கதை புதிதல்ல! இதேபோன்றதொரு கதை, கெடுபிடிப்போர் காலத்தில் வியட்நாமில் நடந்தேறியது. அமெரிக்கா, உலகப் பொலிஸ்காரனாகத் தன்னை நிலைநிறுத்திய பின்னர், இவ்வாறு ஆக்கிரமித்த பகுதியில் இருந்து வெளியேறுவது, இது இரண்டாவது தடவை ஆகும். 

பேர்லின் சுவரின் இடிப்பைத் தொடர்ந்து, முடிவுக்கு வந்த இருமைய உலகுக்கும், அமெரிக்காவின் வர்த்தக மையக் கட்டடங்களின் மீதான விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்த ‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கும்’ இடையே நிகழ்ந்தவொரு சம்பவம் முதன்மையானது. 

அந்த நிகழ்வுக்கும் இப்போதைய ஆப்கானிஸ்தான் நிலைமைக்கும் இடையே பல ஒற்றுமைகள் உண்டு. அந்த நிகழ்வையும் அதைத் தொடர்ந்த அமெரிக்கக் கொள்கை வகுப்பையும், கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். 

1990களின் தொடக்கத்தில், சோவியத் ஒன்றியத்தின் உடைவைத் தொடர்ந்து, உலகின் முதன்மையான வல்லரசாக அமெரிக்கா தன்னை நிலைநிறுத்தத் தொடங்கியிருந்தது. சோமாலியாவில் 1991ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து, அங்கு  உச்சம் பெற்ற உள்நாட்டுப் போர், சர்வதேச கவனம் பெற்றது. 

1992ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய பஞ்சத்தால், மூன்று இலட்சம் சோமாலியர்கள் பட்டினியால் இறந்தார்கள். இதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை, உதவிகளை மேற்கொள்ள சோமாவில் களமிறங்கியது. ஒருபுறம் பஞ்சம், இன்னொருபுறம் போர் என இருமுனைகளில் சவால்களை எதிர்கொண்டது. 37,000 படைவீரர்களைக் கொண்ட ஐ.நா அமைதிகாக்கும் படைகள் களமிறங்கின. இதில் 25,000 பேர் அமெரிக்கப் படைவீரர்கள். இது குறித்துப் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், “சோமாலியாவில் நடக்கும் கொடுமைகளைத் தடுத்து, அங்கு பாதுகாப்பை வழங்கக்கூடிய ஒரே நாடு அமெரிக்கா தான். அமெரிக்கா தன் கடமையைச் செய்யும்’ என்று சொன்னார். 1992 டிசெம்பரில் அமெரிக்கப் படைகள் சோமாலியாவில் களமிறங்கின. 

1993 மார்ச் மாதம், உள்நாட்டுப்போரில் ஈடுபட்டிருந்த 15 ஆயுதக்குழுக்களும் எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் சந்தித்து அமைதியைக் கடைப்பிடிக்க உடன்பட்டன. ஆனால் கொஞ்சக்காலத்தில் முஹமட் அடீட் தலைமையிலான குழுவினர் அந்நியப் படைகளின் இருப்பை எதிர்த்தனர். 

புதிய அரசாக்க முயற்சிகளில், தானும் தனது குழுவினரும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் ஐ.நா தன்னைத் திட்டமிட்டு ஒதுக்குவதாகவும்  குற்றஞ்சாட்டினார். அவர் சோமாலியாவின் தலைநகர் மொகடீசுவின் வானொலியில் ஐ.நாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்தார். 

சோமாலியாவில் நிலைகொண்டிருந்த ஐ.நா அமைதிகாக்கும் படைகள் அந்த வானொலி நிலையத்தை மூடுமாறு உத்தரவிட்டனர். அதை நடைமுறைப்படுத்த ஐ.நா படைகள் அனுப்பப்பட்டன. இது அடீட் அவர்களின் படைகளுக்கும் ஐ.நா படைகளுக்கும் இடையில் மோதலை உருவாக்க காரணமானது. இதைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள், அடீட்டைக் கைது  செய்வதற்கான மொஹடீசுவில் பல தாக்குதல்களை மேற்கொண்டன. இது ஒருபுறம் அமெரிக்கப் படைகள் மீதான வெறுப்பையும், மறுபுறமும் அடீடுக்கான ஆதரவையும் சோமாலியர்கள் மத்தியில் உருவாக்கியது. 

அமைதிகாக்கும் படைகளாகக் களமிறங்கிய ஐ.நா படைகள், தாக்குதல்களில் ஈடுபட்டதன் மூலம், சோமாலியாவின் உள்நாட்டுப் போருக்குள் தம்மை இழுத்துக் கொண்டன. சோமாலிய உள்நாட்டுப் போரின் அரங்காடிகளாக இப்படைகள் மாறின. 

இது, ஐ.நா நடுநிலை நோக்கோடு இல்லை; போரிடுகின்ற தரப்புகளில், தனக்கு வாய்ப்பான தரப்புக்கு ஏற்ற வகையில் செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டை, அடீடும் அவரது சகாக்களும் முன்வைத்தார்கள். இதே மனநிலை, மெதுமெதுவாக சோமாலியர்களிடம் உருவானது. 

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக பில் கிளின்டன் பதவியேற்றிருந்தார். ஐ.நாவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராகப் பொறுப்பேற்ற மடலீனா ஆல்பிரைட், ஐ.நா பாதுகாப்புச் சபையில், ஐ.நா படைகளின் கொலைக்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார். 

இதைத்தொடர்ந்து, ஐ.நா செயலாளர் நாயகத்தின் சோமாலியாவுக்கான சிறப்புப் பிரதிநிதியாகப் பதவியேற்றிருந்த அமெரிக்க கடற்படை அட்பிரல் ஜொனதான் கோவ், அடீட்டின் தலைக்கு 25,000 அமெரிக்க டாலர்களை வெகுமதியாக அறிவித்தார். ஐ.நாவின் அனைத்து முடிவுகளையும் பதவிகளையும், திட்டமிடும் செயற்படுத்தும் தன்னிகரற்ற அதிகாரத்தை அமெரிக்க அப்போது கொண்டிருந்தது. 

1993ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி அடீட்டின் மறைவிடம் தொடர்பான புலனாய்வுத் தகவலின்படி, ஒரு வீட்டில் அடீட்டின் ஆட்கள் கூடியிருப்பது தெரியவந்தது. அமெரிக்கப் படைகள் அவ்வீட்டைக் குறிவைத்துக் களத்தில் இறங்கின. இதற்கு ‘ஒபரேசன் மிச்சிகன்’ எனப் பெயரிட்டனர். தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட சோமாலியப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். அமெரிக்கப் படைகள் குறிவைத்துத் தாக்கிய வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த கூட்டத்தில், சோமாலியாவின் முக்கியமான முதியவர்கள் ஒன்றுகூடி, போராளிக்குழுக்களுடன் சமாதானத்தை உருவாக்குவது பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள் என்பது, அமெரிக்கப் படைகளுக்குப் பின்பே தெரியவந்தது. 

குறித்த கூட்டம் தொடர்பிலான செய்தி, குறித்த திகதிக்கு முதல்நாள் பத்திரிகைளில் வெளிவந்திருந்தது. குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு செய்தி சேகரிக்கப் போன மேற்கத்திய ஊடகங்களைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்கள், கோபத்தில் இருந்த பொதுமக்களால் கொல்லப்பட்டார்கள்.  

ஓகஸ்ட் எட்டாம் திகதி அடீடின் படைகள், அமெரிக்கப் படைகளைக் குறிவைத்த கண்ணிவெடித் தாக்குதலில், நான்கு அமெரிக்கப் படைவீரர்கள் கொல்லப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து, சிறப்பு இராணுவத்தினரைக் கொண்ட படையணியல் 400 வீரர்களை, சோமாலியாவுக்கு அனுப்ப கிளின்டன் முடிவெடுத்தார். இதேவேளை, அடீடுடன் இரகசியமாகப் பேசுவதற்கும் அமெரிக்கா முடிவெடுத்தது. இதன்படி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி காட்டரின் தலைமையிலான குழு, இதில் ஈடுபட்டிருந்தது. 

இந்த நிகழ்வுகள், தலிபானுடனான அமெரிக்காவின் நடத்தையை ஒத்தன. ஒருபுறம், போர் புரிந்தபடி, இரகசியமாகப் பேச்சுக்களில் ஈடுபடுவதை அமெரிக்கா வழமையாகக் கொண்டிருந்தது. 2008ஆம் ஆண்டுமுதல் தலிபான்களுடன் அமெரிக்கா பேசுகிறது. மறுபுறம், அதிகமான படைகள் ஆப்கானுக்கு அனுப்பப்பட்ட ஆண்டாகவும் 2008ஆம் ஆண்டே இருக்கிறது என்பதையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 

ஆடீடையும் அவரது தளபதிகளையும் எப்படியாவது கைதுசெய்வது என்று அமெரிக்கா முடிவெடுத்திருந்தது. 1993ஆம் ஆண்டு ஓக்டோபரில், அடீட்டின் இருப்பிடம் குறித்த இரகசியத் தகவல் கிடைத்தது. தாக்குதலில் அமெரிக்கப் படைகள் இறங்கின. அமெரிக்கா எதிர்பார்த்ததற்கு மாறாக நிலைமைகள் மாறின. இரண்டு வானூர்திகள் சுட்டு விழுத்தப்பட்டதுடன், துப்பாக்கிச்சண்டையில் 19 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒரு படைவீரர் உயிரோடு பிடிக்கப்பட்டார். ஏராளமான சோமாலியப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். 

உலகின் வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்தியிருந்த அமெரிக்கா, சோமாலியாவில் ஒரு மோசமான தோல்வியைச் சந்தித்தது. அமெரிக்கப் படைவீரர்களின் உடலை, சோமாலியர்கள் தெருவில் கட்டி இழுத்துச் செல்லும் காட்சிகள் அதிர்ச்சி தருவனவாக இருந்தன. 

இதன் விளைவாக, சோமாலியாவில் அமெரிக்கப் படைகளின் தாக்குதல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த, கிளின்டன் உத்தரவிட்டார். 1994 மார்ச் 21ம் திகதிக்குள், அமெரிக்கப் படைகள் சோமாலியாவில் இருந்து முழுமையாக வெளியேறும் என அறிவித்தார். 

1995 மார்ச்சில் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறின. இந்தத் தோல்வி அமெரிக்காவின் ‘சர்வ வல்லமை வாய்ந்த வல்லரசு’ என்ற அமெரிக்காவின் நிலைக்கு பெருத்த அடியாகியது. 

தனது தொழில்நுட்ப இராணுவ வலிமையால், சாதாரண சிறுரக ஆயுதங்களை மட்டும் கொண்டிருந்த, முறையாகப் பயிற்றப்படாத போராளிகளிடம், அமெரிக்கா தோல்வியைச் சந்தித்திருந்தது. மரபார்ந்த பண்டைய தொடர்பாடல் முறைகள், கொண்டிருந்த சோமாலியப் போராளிகளின் தகவல் பரிமாற்றங்களை இடையீடு செய்யவோ, ஒட்டுக்கேட்கவோ அமெரிக்கப் புலனாய்வால் முடியவில்லை. 

அதேவேளை, இதேபோன்ற முரண்பாடுகளில் தலையிடக்கூடாது என்ற நிலைப்பாட்டை கிளின்டன் எடுத்தார். அது, நீண்டகாலம் நிலைக்கவில்லை. ஆனால், சிலவற்றில் தலையிடாமல் இருப்பதற்கான வாய்ப்பை இது கொடுத்தது. குறிப்பாக, ருவாண்டாவில் மூன்று இலட்சம் பேர் கொல்லப்பட்டபோது, ஐ.நா அமைதிப்படைகள் அமைதியாக இருந்தது முதல், மேற்குலகம் தலையிடாமைக்கு மொகடீசு அனுபவம் முக்கிய காரணமானது. 

மொகடீசு அனுபவம் பல புதிய திசைவழிகளை நோக்கி அமெரிக்காவை நகர்த்தியது. அதுவே, அடுத்த இருபதாண்டுகளுக்கு அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பில் செல்வாக்குச் செலுத்தியது. அதுகுறித்து அடுத்தவாரம் பார்க்கலாம். 

(வௌ்ளிக்கிழமை தொடரும்)    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .