2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மாகாண சபை தேர்தலுக்கு முஸ்லிம் கட்சிகள் தயாரா?

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

மாகாண சபைத் தேர்தல் பற்றிய கருத்தாடல்கள், மீண்டும் சூடுபிடித்திருக்கின்றன. ஆகக் குறைந்தது, இரு வருடங்களுக்கு முன்னராவது நடத்தியிருக்க வேண்டிய இத்தேர்தலை நடத்துவதற்கான முனைப்பை, அரசாங்கம் இப்போதுதான் வெளிக்காட்டத் தொடங்கியுள்ளது.  

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தமும் மாகாண சபை முறைமையும் இலங்கை - இந்திய உறவுடன் தொடர்புபடுகின்றன. இது விடயத்தில், புதுடெல்லி எப்போதும் விழிப்பாக இருக்கின்றது.  

தமிழ் மக்களின் நன்மை கருதியே, இந்த விடயத்தில் இந்தியா உறுதியாக இருக்கின்றது என்று கூறப்பட்டாலும் கூட, அதையும் தாண்டிய பிராந்திய ஆதிக்கப் போட்டி, அரசியல், இராஜதந்திர நலன்களும்  இதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.  

இந்தப் பின்னணியில், கடந்த வாரம் கொழும்பு வந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர், சீனாவின் கண்களை உறுத்தும்படி ஒரு ‘படம்’ காட்டிவிட்டு, புதுடெல்லியின் காட்டமான செய்தியையும் கொழும்புக்குச் சொல்லிவிட்டுப் போயிருக்கின்றார். அது என்னவென்றால், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாண சபைத் தேர்தல்களை உடன் நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். 

இதற்குப் பதிலளிக்கும் வகையில், 13ஆவது திருத்தத்தில் உள்ள நல்ல விடங்களையும் கண்டறிய வேண்டுமென்று கூறியுள்ள ஜனாதிபதி, மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.  

எனவே, மாகாண சபை தேர்தல் விரைவில் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு, இப்போது சற்று அதிகரித்து இருக்கின்றது. இவ்வாறான சூழலில், அந்தத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தயாராகி விட்டனரா என்ற கேள்வி எழுகின்றது. 

நாட்டின், ஒன்பது மாகாண சபைகளின் ஆட்சிக்காலமும் முடிவுக்கு வந்து விட்டன. கிழக்கு, சப்ரகமுவ, வடமத்தி ஆகிய மாகாண சபைகளின் ஆட்சிக்காலம், 2017 இல் முடிவடைந்தது. வடக்கு, மத்திய மாகாணங்களின் ஆயுட்காலம், 2018 இல் நிறைவடைந்தது. ஆனால், மைத்திரி - ரணில் அரசாங்கம் தேர்தலொன்றுக்குச் செல்லவில்லை. அதற்கான முன்வேலைகளை மட்டுமே, கடைசிவரை செய்து கொண்டிருந்தது. அதன்பிறகு மேல்மாகாணம், ஊவா, தெற்கு ஆகிய மாகாணங்களின் ஆயுட்காலம், 2019 இல் நிறைவடைந்தது. ஆனால், இதுவரை இந்த அரசாங்கமும் தேர்தல் ஒன்றை நடத்தவில்லை. 

பொதுவாகத் தேர்தல்களை நடத்துவதற்கு ராஜபக்‌ஷ அரசாங்கங்கள் பின்வாங்கியதில்லை. உரியகாலம் வருவதற்கு முன்னரே, தேர்தல்களை நடத்திய வரலாறும் அவர்களுக்கு இருக்கின்றது. ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தைப் போலவே, கோட்டாபய ராஜபக்‌ஷவின் இந்த அரசாங்கமும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில், மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கின்றது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. 

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்றால், தேர்தல் முறைமையில் மாற்றம், எல்லை மறுசீரமைப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று, அரசாங்கத் தரப்பு தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது. அத்துடன், 2019 இற்குப் பின்னர் ஏற்பட்ட இரு பெரிய நெருக்கடிகளால், இப்பணிகள் தாமதமாகியமையும் நிதர்சனமானதே! 

ஆனால், அதையும் தாண்டிய பின்புலக் காரணிகளும் இருக்கின்றன. இந்திய - இலங்கை ஒப்பந்தம், 13ஆவது திருத்தம், மாகாண சபை முறைமை என்பன, ஒன்றுக்கொன்று தொடர்புபட்டவை என்பதையும், 13ஆவது திருத்தத்தின் அடிப்படையான அதிகாரப் பகிர்வின் ஒரு சிறு வடிவமே, மாகாண சபைகள் என்பதையும் நாம் அறிவோம். 

ஆனால், இதுவரைகாலமும் 13 இல் குறித்துரைக்கப்பட்டபடியான முக்கிய அதிகாரங்கள், மத்தியில் இருந்து மாநிலத்துக்கு வழங்கவில்லை. இதன்மூலம், மாகாணங்களின் குறிப்பாக வடக்கு, கிழக்கின் ‘மூக்கணாங்கயிறை’ கொழும்பு தனது பிடிக்குள் வைத்திருந்தது. 

இப்போது, நாட்டில் தேர்தலை  நடத்துவதற்கான சூழல் இல்லை. கொவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில், பெரும் அரசியல், பொருளாதார பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியடையும் விதத்திலேயே, பொருட்களின் விலை அதிகரிப்பு முதலான அனைத்து விவகாரங்களிலும், அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

சரி! அதையும் கடந்து பயணிக்கலாம் என்றாலும், ஒரு முக்கிய விடயம் பற்றி ஆட்சியாளர்கள் நிச்சயம் சிந்திப்பர். மாகாண சபை தேர்தலை நடத்தி, மாகாண சபைகளை மீண்டும் உயிர்ப்பித்தால், 13ஆவது திருத்த உள்ளடக்கங்களை (குறிப்பாக அதிகாரப் பகிர்வை) நடைமுறைப்படுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்கலாம். 

ஆயினும், எந்தவகையிலும் அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டை, ஓர் எல்லைக்கு அப்பால் எந்த அரசாங்கமும் ஏற்க மாட்டாது. ரணில், மைத்திரி, சஜித் என யார் ஆட்சிக்கு வந்தாலும், இதுதான் நிலைப்பாடாக இருக்கும். இவர்கள் வெளிப்படையாகச் சொல்வதை, அவர்கள் குறிப்பால் உணர்த்துவார்கள்; அதுதான் வித்தியாசம். 

ஆகவேதான், புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம், ‘தமக்கு விரும்பிய’ ஏற்பாடுகளைச் செய்வதற்கு, ராஜபக்‌ஷ அரசாங்கம் சில முயற்சிகளை எடுத்தது. இன்னும் அம்முயற்சிகளைக் கைவிடவில்லை. ஆனால், இதனை உய்த்தறிந்து கொண்ட இந்தியா, அப்போது வெளிவிவகார அமைச்சரை உடனடியாக அனுப்பி, சொல்ல வேண்டியதைச் சொல்லியது.  

இப்போது கடந்த வாரம், வெளிவிவகார அமைச்சின் செயலாளரை அனுப்பி, அதே விடயத்தை மீள வலியுறுத்தியுள்ளது. உண்மையில், ‘தமிழர்களுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுத்தல்’ என்ற நோக்கத்தை விடவும், சீனாவுக்கு எதிராக இலங்கையில் நாமும் செல்வாக்குச் செலுத்துகின்றோம் என்பதைக் குறிப்புணர்த்துவதற்கு இவ்விஜயம் பயன்படுத்தப்பட்டது என்றாலும், அரசாங்கத்தை பொறுத்தவரை, இந்தியாவின் வலியுறுத்தலைத் தட்டிக்கழிக்க முடியாது.  

அதுமட்டுமன்றி, எதிர்க்கட்சிகளும் சிறுகட்சிகளும் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு, உரத்த குரலில் கேட்கத் தொடங்கியுள்ளன. எனவே, தேர்தலை நடத்துவதற்கான பாதையில், அரசாங்கம் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் முன்னரை விட அதிகரித்துள்ளது. என்னதான் இந்தியாவுக்கு வாக்குறுதி அளித்தாலும், தேர்தல் முறைமை பற்றிய தீர்மானமொன்றுக்கு வரவேண்டியது, தேர்தலுக்கு முன்னரே செய்து முடிக்க வேண்டிய காரியமாகும். ஆகவே, இதுபோன்ற காரணங்களைச் சொல்லியே, அரசாங்கம் இன்னும்  காலத்தை இழுத்தடிக்கலாம். அத்துடன், புதிய அரசியலமைப்பு வரைபு பணிகளை, கடுகதி வேகத்தில் செய்து முடிக்கவும் வாய்ப்புள்ளது. அதற்கான அறிகுறிகளும் தென்படாமல் இல்லை.  

ஆனால், மிகக் கிட்டிய காலத்தில் மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால், அதனை எதிர்கொள்வதற்கான வியூகங்களை முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற முஸ்லிம் கட்சிகளும் ஏனைய அரசியல்வாதிகளும் இன்னும் வகுக்கவில்லை என்றே தோன்றுகின்றது. 

இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில், இரண்டு மாகாணங்களின் ஆட்சியை மாத்திரமே சிறுபான்மையினர் கைப்பற்றக் கூடிய வாய்ப்பு உள்ளது. இதில் வட மாகாணத்தின் அதிகாரம் தமிழர்களைச் சென்றடையும். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அரசியல் அணிகள் ஒன்றுபட்டால், வெற்றி பெற முடியும். அல்லது, தமிழர்களுடனோ பெரும்பான்மைக் கட்சிகளுடனோ இணைந்து செயற்பட்டாலும் ஆட்சியதிகாரத்தில் செல்வாக்குச் செலுத்த முடியும். 

முஸ்லிம் அரசியல் அணிகள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் போட்டியிட முடியுமாயின், தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் அடிப்படையில், மறுதரப்புடன் பேரம்பேசலை மேற்கொண்டும், கிழக்கு மாகாண சபையில் தமது வகிபாகத்தை உறுதிப்படுத்தலாம். 

இவற்றுள் எந்தத் தெரிவை மேற்கொள்வது என்றாலும் நீண்டகாலத் திட்டமிடல் அவசியமாகும். அந்தவகையில், சற்றுக் காலம் கடந்தேனும் தேர்தல் முறைமை தொடர்பில் இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் அக்கறை காட்டத் தொடங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. 

ஆனால், இது மட்டும் போதாது. சமூக நலனை மையமாகக் கொண்டு வியூகங்களும் புத்திசாதுரியமான நகர்வுகளும் அவசியமாகும். தமிழ் அரசியல்வாதிகளுடனோ, பெருந்தேசிய சிங்கள அரசியல்வாதிகளுடனோ யாருடன் கைகோர்ப்பது என்றாலும், அவர்கள் கடைசி மட்டும் முஸ்லிம் சமூகத்தின் நலன்களைக் காப்பவர்களாக இருக்க வேண்டும். 

அதுபோல, கடந்த காலத்தில் நிறுத்தப்பட்ட சில உருப்படியற்ற மாகாண சபை உறுப்பினர், முதலமைச்சர் வேட்பாளர்களைப் போல, ‘ஆள் எண்ணிக்கைக்கு’ வேட்பாளர்கள் நிறுத்தப்படாமல், ‘உருப்படியான’ வேட்பாளர்கள், இப்போதில் இருந்தே இனம் காணப்பட வேண்டும். 

சிங்கள அரசியல்வாதிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் முஸ்லிம் மக்களின் விடயங்களில் நல்லெண்ணத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் போல, முஸ்லிம் அரசியல்வாதிகளும் அவ்விதம் அவர்கள் விடயத்தில் செயற்பட வேண்டியுள்ளது. 

அதுமட்டுமன்றி, பெருந்தேசியமும் தமிழ்த் தேசியமும் முஸ்லிம் சமூகத்தின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்றால், முதலில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் தமது சமூக நலனில் அக்கறை கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டியுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .