2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

சம்பியனானது கோணக்கலை மேற்பிரிவு கென்னடி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 18 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பூவரசன்

இலங்கை பொலிஸ் சேவையின் 150ஆவது ஆண்டு நிறைவையொட்டி பதுளை மாவட்ட பசறை பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேவைகளை முன்னெடுத்து வருகின்ற பசறை பொலிஸ் நிலையம், பிரதேசத்தின் கிராம, தோட்டப் பகுதிகளில் பல்வேறு சமூக பணிகளையும், கல்வி, கலை, கலாசார விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடாத்தி வருகிறது.

அந்தவகையில், பசறை பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள இளைஞர், யுவதிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் முகமாக மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டியொன்றினை பசறை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.

பசறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ரத்னவீர எல்அடஸ்சூரியவின் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு நிகழ்வில் சிறப்பு அதிதியாக பதுளை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அசோகா நெவ்கலகே கலந்து கொண்டிருந்தார்.

பசறை நகர விளையாடு மைதானத்தில் ஆரம்பமாகிய கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் ஆண்கள் பிரிவில் 10 அணிகள் பங்குபற்றின. இதிலிருந்து, முதலாவது அரையிறுதிப் போட்டிக்கு மஹதோவை பாடுமீன் அணியும், கனவரல்ல தமிழோசை அணியும் தகுதிபெற்றன. இப்போட்டியில் வெற்றிபெற்ற பாடுமீன் அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கு, கோணக்கலை மேற்பிரிவு கென்னடி அணியும் மீதும்பிட்டிய ஸ்ரீ கணேஷா அணியும் மோதின. இப்போட்டியில் வெற்றிபெற்ற கென்னடி அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

கென்னடி அணியும், பாடுமீன் அணியும் மோதிய இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது. முதலாவது செட்டை 24-22 என்ற புள்ளிகள் கணக்கில் பாடுமீன் அணி வென்றது. இரண்டாவது செட்டை 24-18 என்ற புள்ளிகள் கணக்கில் கென்னடி அணி வென்றது. இந்நிலையில், சம்பியனாகும் அணியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில், 24-23 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்ற கென்னடி அணி சம்பியனாகிக் கொண்டது.

தொடரின் சிறந்த வீரரான கென்னடி அணியின் இளம் வீரர் ஜெனிபர் தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில், தொடரில் சம்பியனாகிக் கொண்ட கென்னடி அணிக்கும், இரண்டாமிடம் பெற்ற பாடுமீன் அணிக்கும் வெற்றிக் கிண்ணங்களும், பணப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

இதேவேளை, மகளிருக்கான கரப்பந்தாட்டப் போட்டியில், பசறை – எல்டெப் தோட்ட கல்போக் – புளூலைன்ஸ் அணி சம்பியனாகி, வெற்றிக் கிண்ணத்தை தம்வசப்படுத்தியிருந்தது.

மேற்படி தொடரின் முடிவில், பசறை பொலிஸ் நிலையம் முன்னெடுத்து வருகின்ற மக்கள் சேவையை போற்றும் வகையில், பசறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ரத்னவீர எல்அடஸ்சூரியவுக்கு வீரர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .