2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

1983இல் தப்பிய சிப்பாய் அனுபவத்தை பகிந்தார்

Freelancer   / 2021 ஜூலை 27 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத அமைப்பொன்றை முழுமையாகத் தோற்கடித்த ஒரே நாடு என்றவகையில் இலங்கை பெயர்பெற்று 12 வருடங்கள் கடந்துள்ளன.

எனினும், 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் ஞாபகங்கள் இன்னும் பலவற்றை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. 

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழத்துக்கான முதலாவது நகர்வு, 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையுடன் ஆரம்பமானது. 

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் 1983 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதியன்று, இராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டனர். அதுவே இலங்கையின் விதியை மாற்றியது. 

கறுப்பு ஜூலை அரங்கேற்றப்பட்டு (ஜூலை 23) சனிக்கிழமையுடன் 38 வருடங்கள் நிறைவடைந்தன.
 
எனினும், யாழ்ப்பாணம், திருநெல்வேலி தாக்குதல்களிலிருந்து தப்பிய இராணுவ அதிகாரியான உபாலி பெரேரா அங்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் விபரிக்கையில்… 

அக்காலத்தில், இராணுவத்தில் சேர்ந்து கொள்வது என்பது மிகவும் சிரமமான காரியமாகும். நேர்முகத்தேர்வுகள் பலவற்றுக்கு முகங்கொடுக்கவேண்டும். உயர்கல்வித் தகுதிகள், விளையாட்டுத் திறமை, குடும்பப் பின்னணி ஆகியவை கவனத்தில் கொள்ளப்படும் என, இராணுவத்தில் சேர்ந்துகொள்வதற்கான நெருக்கடிகளை தொடர்ச்சியாக விவரித்தார்.

ஒருவாறு இராணுவத்தில் சேர்ந்துகொண்ட தான், பல்வேறான பயிற்சிகளைப் பெற்றுகொண்டதாகத் தெரிவித்ததுடன், அதன் கஷ்டங்களையும் விவரித்தார். 

தமிழ் இளைஞர்கள், தனிநாட்டுக்காக குழுவாகச் செயற்படுகின்றனர் என்பது தொடர்பில் 80ஆம் ஆண்டுகளில் எங்களுக்குத் தகவல்கள் கிடைத்தன. 

அவர்களின் ஆரம்ப இலக்கு, தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ்ப் பொலிஸார் என்பதால், அவ்வளவு பெரிதாக அது விளங்கவில்லை. 

நான், இணைக்கப்பட்டிருந்த படைப்பிரிவு யாழ்ப்பாணத்துக்குச் சென்றவேளையில், அங்கு படையினரின் ஐந்து முகாம்கள் இருந்தன. அவற்றில், மாதகல் பகுதியில் அமைந்திருந்த முகாமிலேயே நான் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தேன் என தனது நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார். 

பாதுகாப்புப் பிரிவினருக்கு தேவைப்பட்ட சீலன் என்றழைக்கப்பட்ட சார்ள்ஸ் அன்ரனி, 1983 ஜூலை 15ஆம் திகதியன்று இராணுவ கமாண்டோ படையணியின் தாக்குதலில் மரணமடைந்தார்.
 
சார்ள்ஸ் அன்ரனி, பிரபாகரனின் நெருங்கிய நண்பன். (பிரபாகரனின் மூத்த மகனுக்கும் சார்ள்ஸ் அன்ரனி) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், புலிகளின் சிறப்புமிக்க படையணியாக சார்ள்ஸ் அன்ரனி படையணி உருவானது.

சார்ள்ஸ் அன்ரனியின் மரணத்தால் கடுங்கோபமடைந்திருந்த பிரபாகரன், அதன் பதில் தாக்குதல்களை படையினர் மீது மேற்கொள்வதற்கு திட்டம் வகுத்திருந்தார். 

இந்நிலையில், ஜூலை 23ஆம் திகதியன்று புலிகள், மிக முக்கியமான தாக்குதல் ஒன்றை யாழ்ப்பாணத்தில் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளனர் என படையினரின் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசியத் தகவலொன்று கிடைத்தது. 

அதனைப்பற்றி நாங்கள் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில், புலி இளைஞர்கள், இருந்திருந்து இராணுவத்தில் ஓரிருவர் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். இராணுவப் படையணியின் மீதோ, முகாம்கள் மீதோ தாக்குதல்களை நடத்தியிருக்கவில்லை. 

ஆனாலும், பொலிஸ் நிலையங்களின் மீது தாக்குதல்களை நடத்தி, ஆயுதங்களை எடுத்துச் சென்றிருந்தனர். 

ஆனாலும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், ரோந்து நடவடிக்கைகளை நாங்கள் திட்டமிட்டிருந்தோம். எங்களுடைய குழுவில் 15 பேர் அடங்கியிருந்தோம். 

அக்குழுவின் கட்டளையிடும் அதிகாரியாக இரண்டாம் லெப்டினன்ட் வாஸ் குணவர்தன இருந்தார். எனக்கு நல்ல ஞாபகத்தில் இருக்கிறது. அன்றையதினம் அவர் மிகவும் சந்தோஷமடைந்திருந்தார். 

இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னர், ஆனந்தா- நாலந்தா கல்லூரிகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில், ஆனந்தா கல்லூரி வெற்றியீட்டியிருந்தது. “அந்த சந்தோஷத்தில் அவர் இருந்தார்”. 

ரோந்து நடவடிக்கைகளுக்காக ஜீப் ஒன்றும் ட்ரக் ஒன்றும் எங்களுக்கு கிடைத்திருந்தது. அந்த ஜீப்பில் லெப்டினன்ட் வாஸ் உள்ளிட்ட ஐவர் ஏறிக்கொண்டனர். ட்ரக்கில் நான் 10ஆவது நபராக ஏறிக்கொண்டடேன். 

பலாலியிலிருந்து வழங்கப்பட்ட கட்டளைகளின் பிரகாரம், காங்கேசன்துறை வீதியால் யாழ்ப்பாணத்துக்குச் சென்று, பின்னர் நாக விஹாரைக்குச் சென்று குருநகர் முகாமில் பதிவு செய்யவேண்டும்.

அதற்காக இரவு 9 மணிக்கு புறப்பட்டோம். எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. அவ்வாறே செய்து பதிவு செய்துவிட்டுப் புறப்பட்டோம். 

கடுமையாக இருள் சூழ்ந்திருந்த யாழ்ப்பாணம்-பலாலி வீதியில், பல்கலைக்கழத்துக்கு அண்மையில், திருநெல்வேலியை அண்மித்தோம். 

திருநெல்வேலியின் தபால் பெட்டி சந்திதான், புலிகளின் இலக்காக இந்தது. அவ்விடத்தின் வீதி  தற்போது இருமருங்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், 1983 ஆம் ஆண்டு இரண்டு புறங்களும் கட்டிடங்கள் மற்றும் மதில்களால் மறைக்கப்பட்டிருந்தன. 

அங்கு தற்போது தொலைபேசி வசதிகள் உள்ளன. வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

வீதியின் குறுக்காக கான் வெட்டப்பட்டிருந்தது. அந்த தாக்குதல்களுக்கு செல்லக்கிளி என்பவரே தலைமை தாங்கினார். 

அவருடன் கிட்டு  ஐயர், விக்டர், புலேந்திரன், சந்தோஷம், அப்பையா, பாஷிட் காக்கா உள்ளிட்ட 14 பேரடங்கிய குழுவொன்று இருந்தது. 

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் கடத்தப்பட்ட எக்ஸ்ஃபோல்டர் உபகரணமே வெடிப்புச் சம்பவத்துக்காக பயன்படுத்தப்பட்டது. வீதியின் குறுக்காக வெட்டப்பட்டிருந்த கானின் ஊடாகவே, இருமருங்கிலும் இருந்த மதில்களுக்கு பின்பாக மறைந்திருந்தவர்கள் தொடர்புகளைப் பேணியிருந்தனர். 

நாங்கள் அவ்விடத்துக்கு இரவு திரும்பிய வேளையில், ரோந்து நடவடிக்கை நிறைவடைவதற்கு இன்னும் சில கிலோமீற்றர் தூரமே இருந்தது. ஆகையால், சகலரும் கவனயீனமாகவே இருந்தோம்.
 
இரவு 11 மணியிருக்கும் இரண்டு வாகனங்களும் ஏகநேரத்தில் வெடிக்குள் சிக்கிக்கொண்டன. ஜீப் முன்புறம் சேதமடைந்தது. பின்னால் சென்றுகொண்டிருந்த  ட்ரக் வாகனமும் சிக்கிக்கொண்டது. (இங்கு விசேடமாக ஒன்றை சொல்லவேண்டும். சிலர் கூறுகின்றனர். இராணுவத்தைச் சேர்ந்த 13 பேரும் கண்ணிவெடியில் சிக்கி இறந்துவிட்டனர் என, கண்ணிவெடியில் சிக்கினால் யாரும் இறக்கமாட்டார்கள்) அவ்விடத்தில் ஜீப் சிக்கிகொண்டதை அடுத்து இருபுறங்களில் இருந்தும் துப்பாக்கிப்பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

வீதியின் நடுவே சிக்கிக்கொண்ட எங்களால் எதனையுமே செய்யமுடியவில்லை. துப்பாக்கிகள், ரைபிள்கள் மற்றும் அவர்களால் தயாரிக்கப்பட்ட குண்டுகளைக் கொண்டே, எம்மீது தாக்குதல்களை நடத்தினர். 

நாங்கள், வாகனங்களிலிருந்து கீழே இறங்கித்தான் பதில் தாக்குதல்களை நடத்தினோம்.  எங்களிடமிருந்த ஒரேயொரு தடுப்பணை வாகனங்கள் மட்டுமேயாகும். எனினும் புலிகளின் தாக்குதல்களை தாக்கப்பிடிக்கமுடியவில்லை பதில்தாக்குதல்களும் சத்தங்களும் குறைந்தன. 

ஆனால், எனது இரு கால்களையும் துப்பாக்கி ரவைகள் துளைத்துச் சென்றிருந்தன. என்னுடன் இருந்த லான்ஸ் கோப்ரல் சுமதிபாலவின் வயிற்றில் துப்பாக்கி சூடு பட்டிருந்தது. துடிதுடித்தார் அவரையும் தூக்கிக்கொண்டு தோட்டத்துக்குள் சென்றுவிட்டேன். 

அங்கிருந்த புதருக்குள் அவரை படுக்கவைத்துவிட்டு சத்தம்போடவேண்டாம் என்றேன். நான் அங்கிருந்த கூரையொன்றின் மீதேறிப் பார்த்துகொண்டிருந்தேன். அப்போதுதான் பயங்கரவாதிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதை நிறுத்திவிட்டு, படையினருக்கு அருகில் வந்து, கத்தியால் வெட்டினர். 

சன்னங்களைக் கழற்றிகொண்டு ஆயுதங்களைச் சேகரித்துகொண்டிருந்தனர். அப்போதுதான் பார்த்தேன், என் கால்களில் இருந்து இரத்தம் பீச்சிட்டு ஓடிகொண்டிருந்தது. அங்கிருந்த வாழை மரத்திலிருந்து ஒரு பட்டியை பிய்த்து, இரத்தம் வெளியேறாத வகையில் காயத்துக்கு மேலே இறுகக்கட்டிக்கொண்டேன். 

துப்பாக்கி சத்தத்துக்கு நாய்கள் குரைத்தன. ஆனால் புலிகளுக்கு அது கணக்கே இல்லை. என் கால்களிலிருந்து இரத்தம் வெளியேறிக்கொண்டே இருந்தது. அதன்பின்னர் எனது பூட்ஸை கழற்றி, அதிலிருந்த லேஸ்களை எடுத்து கால்களை மீண்டும் கட்டினேன். 

அந்த சொற்ப நேரத்தில் பயங்கரவாதிகள் போய்விட்டனர். சத்தம் குறைந்துவிட்டது. இன்றும் அந்தக் காட்சிகள் யாவும் எனது கண்முன்னே ஒரு திரைப்படக் காட்சிகளைப் போலவே இருக்கின்றன. 

சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து இரண்டு கிலோமீற்றருக்கு அப்பால் இருந்த பஸ் டிப்போவுக்குச் சென்று, அங்கிருந்து முகாமுக்குத் தகவலை கொடுத்தோம். அப்போது எமது அணியைச் சேர்ந்த இரண்டொருவரும் அவ்விடத்துக்கு கடுங்காயங்களுடன் வந்துவிட்டனர். நான், புதருக்குள் மறைத்துவைத்த வீரர் தொடர்பிலும் தகவல் கொடுத்தேன். 

தகவல் கிடைத்ததும் எம்மை மீட்க மற்றுமொரு அணி வந்தது. அந்த அணி, புதருக்கு இருந்தவரையும் மீட்டது. நாங்கள் அனைவரும், யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோம். புதருக்கு மறைத்துவைத்த வீரர் அங்கு உயிரிழந்தார். 

அங்கிருந்தவர் ஒரு தமிழ் வைத்தியர், “பயப்பிடவேண்டாம் நான், உங்களை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்போகின்றேன் என்றார். நன்றாகவே கதைத்தார். அதற்குப் பின்னர் சுயநினைவை நான் இழந்துவிட்டேன். சுயநினைவு திரும்புபோது எனது நெஞ்சின் மீது யுத்த களத்திலிருந்த பதவியுயர்வு வைக்கப்பட்டிருந்தது. 

அன்று மாலைதான் நானும் சுமதிபாலவும், மரணமடைந்த 13 வீரர்களின் சடலங்களை விமானத்தின் மூலம் கொழும்புக்குக் கொண்டுவந்தோம். உயிர்பிழைத்த சுமதிபால தற்போது உயிருடன் இல்லை. 

சடலங்கள் யாவற்றையும் பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. எனினும், அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடிவிட்டனர்.  

கோபத்தில் இருக்கும் மக்கள் ஏதாவது செய்துவிட்டால் என்ன நடக்கும் என்பதற்காக, வானத்தை நோக்கி துப்பாகிப்பிரயோகங்களை மேற்கொண்டு அவர்களை பொலிஸார் கலைத்தனர். 

அங்கிருந்து கோபத்துடன் கலைந்து சென்றவர்கள், தமிழர்களின் கடைகளுக்குத் தீயிட்டனர். அதன்பின்னர், அதுவே இனங்களுக்கு இடையிலான மோதலாக மாறியது. (நன்றி: லங்காதீப)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X