2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

பிளாஸ்ரிக் கழிவுகளை குறைக்க காகில்ஸ் மற்றும் யுனிலீவர் கைகோர்ப்பு

S.Sekar   / 2021 மே 18 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பிளாஸ்ரிக் கழிவுகளை நிர்வகிப்பது தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியுள்ள நிலையில், காகில்ஸ் மற்றும் யுனிலீவர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நிலைபேறான பிளாஸ்ரிக் கழிவு முகாமைத்துவ கட்டமைப்பொன்றை கொழும்பிலுள்ள ஒன்பது காகில்ஸ் புட் சிட்டி விற்பனை நிலையங்களில் ஏற்படுத்தியுள்ளன.

இரு நிறுவனங்களும் தம்வசம் கொண்டுள்ள பரந்தளவு வளங்கள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நிறுவப்பட்டுள்ள இந்தக் கட்டமைப்பினூடாக பிளாஸ்ரிக் கழிவுகளை சேகரிப்பது மற்றும் விநியோகிப்பது முதல் வகைப்படுத்துவது மற்றும் மீள்சுழற்சிக்குட்படுத்துவது போன்ற சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். நாடு முழுவதிலுமுள்ள ஏனைய காகில்ஸ் புட் சிட்டி விற்பனை நிலையங்களிலும் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்ய நிறுவனங்கள் எதிர்பார்த்துள்ளன. நாட்டில் பிளாஸ்ரிக் வெளியீட்டைக் குறைக்கும் யுனிலீவர் நிறுவனத்தின் நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது. மேலும், இலங்கைக்கு நிலைபேறான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது எனும் காகில்ஸ் நிறுவனத்தின் நோக்கத்துக்கமையவும் அமைந்துள்ளது.

ஒவ்வொரு பகுதியிலும் அடையாளமிடப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகளை இடும் பகுதிகள் நிறுவப்படும் என்பதுடன், இதில் கடுமையான பிளாஸ்ரிக்கள் (போத்தல்கள், டப்கள், கோப்பைகள்) அல்லது இலகுவான பிளாஸ்ரிக்கள் (பொலிதீன் பைகள், மேலுறைகள்) போன்றவற்றை வாடிக்கையாளர்கள் சௌகரியமான முறையில் இட முடியும். இவ்வாறு திரட்டப்படும் பிளாஸ்ரிக் கழிவுகள் வாராந்த அடிப்படையில் பெறப்பட்டு, பிரிப்புக்காக வகைப்படுத்தல் பகுதியொன்றுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனைத் தொடர்ந்து மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய சகல பிளாஸ்ரிக் கழிவுகளும் மீள்சுழற்சி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதுடன், மீள்சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்ரிக்கள் கழிவிலிருந்து-வலு மீட்சி நிலையங்களுக்கு (waste-to-energy recovery centres) அனுப்பி வைக்கப்படும். இந்தப் பணிகள் அனைத்தும் முறையாக கண்காணிக்கப்படும் என்பதுடன், பிளாஸ்ரிக் கழிவுகள் சூழலுக்கு பாதுகாப்பான முறையில் அழிக்கப்படுவதை உறுதி செய்யும்.

காகில்ஸ் புட் கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அசோக பீரிஸ் கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டில் காகில்ஸ் புட் சிட்டி விற்பனை நிலையங்கள் பரந்தளவு காணப்படும் நிலையில், இந்தத் திட்டத்தினூடாக பிளாஸ்ரிக் கழிவுகளால் ஏற்படக்கூடிய பெருமளவு சேதத்தைக் குறைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்தத் திட்டத்தினூடாக பிளாஸ்ரிக் மீள்சுழற்சி என்பது தொடர்பில் வாடிக்கையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் மத்தியில் பழக்கப்படுத்திக் கொள்ள உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், நிலைபேறான எதிர்காலத்தை கட்டியெழுப்பிக் கொள்ள உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

யுனிலீவர் ஸ்ரீ லங்காவின் வாடிக்கையாளர் அபிவிருத்தி பணிப்பாளர் சயிட் அருண மாவில்மட கருத்துத் தெரிவிக்கையில், “சூழலில் இந்த நேர்த்தியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக காகில்ஸ் உடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். பிளாஸ்ரிக் கழிவுகளைக் குறைப்பது என்பது உலகளாவிய மற்றும் தேசிய தேவையாக அமைந்துள்ளதுடன், யுனிலீவரின் முன்னுரிமையாக அமைந்துள்ளது. எமது தயாரிப்புகளை நுகர்வோருக்கு சென்றடையச் செய்வதில் மிகவும் பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான மூலமாக பிளாஸ்ரிக் அமைந்திருக்கும் நிலையில், பிளாஸ்ரிக்கை பொறுப்பு வாய்ந்த வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.  சூழலுக்கு ஆபத்தான வகையில் அது அமைந்துவிடக்கூடாது. இதன் காரணமாக நாம் காகில்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எமது புதிய கழிவு முகாமைத்துவ கட்டமைப்பை அறிமுகம் செய்துள்ளதுடன், எமது புவியை பாதுகாப்பதற்காக யுனிலீவரினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு திட்டங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.” என்றார்.

யுனிலீவர் சர்வதேச ரீதியில் தனது பிளாஸ்ரிக் வெளியீட்டை குறைப்பதற்கான அர்ப்பணிப்பு என்பதற்கு உண்மையான வகையில் திகழ்வதற்கு 100% பிளாஸ்திக் பொதிகளை மீளப் பயன்படுத்தக்கூடிய, மீள்சுழற்சி செய்யக்கூடிய அல்லது கொம்போஸ்ட் தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய தயாரிப்புகளாக கொண்டுள்ளது.  பொதியிடலில் அரைப்பங்கு வேர்ஜின் பிளாஸ்ரிக் பயன்படுத்தப்படுவதுடன், 2025 ஆம் ஆண்டளவில் தாம் விற்பனை செய்யும் பிளாஸ்ரிக் பொதிகளை விட அதிகம் பிளாஸ்ரிக் கழிவுகளை சேகரித்து பதப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள ஒன்பது காகில்ஸ் ஃபுட் சிட்டிகளில் பெலவத்த, கல்கிசை, ராஜகிரிய, கந்தானை, வத்தளை, மஹாரகம, கட்டுபெத்த, கொள்ளுப்பிட்டி மற்றும் ப்ளுமென்டால் ஆகியன அடங்குகின்றன. இவற்றுடன் மரைன் டிரைவ் பகுதியில் KFC உணவகமும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வு பெலவத்த காகில்ஸ் ஃபுட் சிட்டியில் அண்மையில் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .