2023 செப்டெம்பர் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை தன் கடன் மறுசீரமைப்பில் கானாவை பின்பற்றுமா?

S.Sekar   / 2023 மார்ச் 27 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச.சேகர்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நீடிக்கப்பட்ட நிதி வசதி கடந்த வாரம் கிடைத்திருந்தது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டிருந்த முதற்கட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்ததைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தின் நிதி வசதி வழங்கப்பட்டிருந்ததுடன், நான்கு ஆண்டுகளுக்கு தொடரும் இந்தத் திட்டத்தினூடாக மொத்தமாக பெற்றுக் கொள்ளும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச் செலுத்துவதற்கு இலங்கைக்கு 4 முதல் 10 வருட கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ஏன் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டியிருந்தது, அதை விட மாற்று வழிகள் எதுவுமில்லையா, இலங்கைக்கு நிகரான பொருளாதாரச் சூழல் காணப்படும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவிலும் இது போன்றதொரு பொருளாதார நெருக்கடி தோன்றி, சர்வதேச நாணய நிதியத்தை நாடும் முன்னர் அது மேற்கொண்டிருந்த சில மறுசீரமைப்புகள் போன்ற விடயங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு, சர்வதேச கடன் தரப்படுத்தல்களில் இலங்கை தொடர்ச்சியாக தரக்குறைப்புக்கு உள்ளாகி வந்தமை காரணமாக அமைந்தது. ஏனெனில், கடந்த கால ஆட்சியாளர்கள் தெரிவித்ததைப் போல, சர்வதேச கடன் தரப்படுத்தல்கள் என்பது சாதாரண, அலட்சியமாக இருந்துவிடக்கூடிய விடயமல்ல. சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்களில் ஃபிட்ச் தரப்படுத்தல், மூடிஸ் மற்றும் S&P குறிகாட்டிகள் போன்றன அடங்கியுள்ளன.

அந்தத் தரப்படுத்தல்களின் அடிப்படையிலேயே ஒரு நாட்டுக்கு கடன் வழங்குவது, முதலீடுகளை மேற்கொள்வது, அந்நாட்டில் வெளிநாட்டவர்கள் கொண்டிருக்கும் வியாபாரங்களை விஸ்தரிப்பு செய்வது போன்ற பல்வேறு தீர்மானங்களை மேற்கொள்வர். சர்வதேச நாணய நிதியத்தை நாடி, தமது கடன் தரப்படுத்தல்கள் குறைப்புக்கு காரணமாக அமைந்த காரணிகளை சீரமைத்து, இயங்குவதற்கான உடன்படிக்கைக்கு வருவதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வது என்பது, நாட்டுக்கு மீண்டும் சர்வதேச நிதியை நாடும் நிலையை தோற்றுவிக்கும்.

அத்துடன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இலங்கை சர்வதேச திவால் நிலையை அறிவித்தது. பெற்றுக் கொண்ட கடன்களையும், வழங்கிய கடன் பத்திரங்களுக்கான கொடுப்பனவுகளையும் செலுத்த முடியாத நிலையை அறிவித்திருந்தது. இந்நிலையில், நாட்டுக்கு அவசியமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரச வங்கிகளினூடாக, கடன் கடிதங்களை ஆரம்பிக்க முடியாத நிலை எழுந்தது. இதனால் எரிபொருள், மருந்துப் பொருட்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போன்றவற்றை உடனுக்குடன் அல்லது பெற்றுக் கொள்ளும் முன்னதாக அவற்றுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை எழுந்தது.

இந்த நிலையிலிருந்து மீள்வதற்கும் இந்த சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி என்பது பெரிதும் கைகொடுப்பதாக அமைந்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு என்பதில் இரு கட்டங்கள் காணப்படுகின்றன. சர்வதேசத்திடமிருந்து பெற்றுக் கொண்ட கடன்களை மறுசீரமைப்பு செய்வது மற்றும் உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பு செய்வது போன்றன அவையாகும். இலங்கையை பொறுத்தமட்டில், சர்வதேச நாணய நிதியத்தை நாடி, ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம், சர்வதேச கடன்களை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்திருந்தது. இது ஒருபுறமிருக்க, உள்நாட்டு கடன்களையும் மறுசீரமைப்பு செய்ய வேண்டியது முக்கியமானதாகும்.

குறிப்பாக, உள்நாட்டு வங்கிகளிடமிருந்து பெற்றுக் கொண்ட கடன்கள், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்ற நிதியங்களிலிருந்து பெற்றுக் கொண்ட கடன்கள் போன்றவற்றையும் அரசாங்கம் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இதற்கு, சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை நாட வேண்டியதில்லை. இங்குதான், மேலே குறிப்பிட்ட, மேற்கு ஆபிரிக்க நாடான கானாவை இலங்கை பின்பற்றுவது உகந்ததாக தென்படுகின்றது.

2020 ஆம் ஆண்டில், குறிப்பாக கொவிட்-19 தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கு முன்னர், ஆபிரிக்காவின் வளர்ந்து வரும் நட்சத்திரமாக உலக வங்கியினால் கானா அறியப்பட்டது. கொக்கோ மற்றும் தங்கம் ஆகியவற்றை பிரதான ஏற்றுமதியாகக் கொண்ட நாடாக கானா திகழ்கின்ற போதிலும், கானா குறைந்த வருமானமீட்டும் நாடாக அமைந்துள்ளதுடன், இலங்கையை விட சுமார் 10 மில்லியன் மக்கள் தொகையை அதிகமாகக் கொண்ட நாடாகும். 2019 ஆம் ஆண்டில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக கானா அமைந்திருந்தது.

2023 ஜனவரி மாதத்தில் கானாவின் பணவீக்க வீதம் 53.6 சதவீதமாக காணப்பட்டதுடன், இலங்கையில் 54.2 சதவீதமாக அமைந்திருந்தது. 2022 ஆம் ஆண்டளவில் தனிநபர் மொத்த தேசிய உற்பத்தி கானாவில் 2,370 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட நிலையில், இலங்கையில் அந்தப் பெறுமதி 3,290 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. 2022 ஆம் ஆண்டில் கானாவின் பொதுக் கடன் 46.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், 83.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் காணப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் கானாவில் மொத்த தேசிய உற்பத்திக்கு வரி விகிதம் 11.3 சதவீதமாக அமைந்திருந்ததுடன், இலங்கையில் இந்தப் பெறுமதி 7.7 சதவீதமாக அமைந்திருந்தது என ஃபஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பிஎல்சியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கானாவுக்கு இலங்கைக்குமிடையிலான பிரதான வேறுபாடு, இலங்கையின் சர்வதேச தரக் குறைப்பு SD (நியம திவாலாகிய நிலை) என்பதாக அமைந்திருந்த போதிலும், அதனை விட ஒரு படி உயர்ந்த ஸ்தானத்தில் கானாவின் கடன் தரப்படுத்தல் அமைந்திருந்தமையால், உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய நிலை ஏற்படவில்லை. இருந்த போதிலும், கானாவிலும், இலங்கையில் நிலவுவதைப் போல பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் தாக்கங்களால் அந்நாட்டு பொது மக்களும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றதை அவதானி்க்க முடிகின்றது.

இரு நாடுகளினதும் பொருளாதாரங்கள் ஒரே மாதிரியான போக்கைக் கொண்டிருந்தாலும், கடன் மறுசீரமைப்பு என்பது மேலே தெரிவித்ததைப் போல மாறுபட்டதாக அமைந்துள்ளன. கானா முதலில் தனது உள்நாட்டு கடனை மறுசீரமைப்பு செய்வதில் கவனம் செலுத்தியிருந்தது. அதன் பின்னரே சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருந்தது. இலங்கையில், முதலில் தனது வெளியக கடனை மறுசீரமைப்பு செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருந்தது.

கானா தனது சொந்த கடன் மறுசீரமைப்பு ஆய்வை மேற்கொண்டிருந்ததுடன், கடன் இலக்குகளையும் நிர்ணயித்து, அவற்றை எய்தியிருந்தது. சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்படிக்கையை எய்துவது தொடர்பில் கானா கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தாலும், உள்ளக கடன் மறுசீரமைப்பு பொறிமுறையை கானா அரசாங்கமே மேற்கொண்டிருந்தது. 2023 பெப்ரவரி மாதத்தில் தனது உள்ளக கடன் மறுசீரமைப்பை கானா பூர்த்தி செய்திருந்ததுடன், இதற்காக கானாவுக்கு சர்வதேச தரப்படுத்தலில் உயர்வையும் எய்த முடிந்தது.

சரி, இலங்கையில் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக அல்லது அவற்றுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய வகையில் கடந்த வாரம் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கண்டி மாவட்டத்தின் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கொழும்பு மாவட்டத்தின் காமினி லொகுகே ஆகிய இருவருக்கும் அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த இருவரும், கடந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில், எவ்வாறு தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை ஆற்றியிருந்தனர் என்பதை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு விவசாய அமைச்சும், காமினி லொகுகேவுக்கு மின்சக்தி, எரிசக்தி அமைச்சும் வழங்கப்பட்டிருந்த காலப்பகுதியில், இந்த இரு முக்கிய துறைகளிலும் பெரும் நெருக்கடிகள் எழுந்தன.

கானாவில் 2017 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக பதவியேற்ற நானா அகுஃபோ – அத்தோ, அந்நாட்டின் வரலாற்றில் கானாவை உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை நோக்கி வழிநடத்தியிருந்தார். 2017 – 2019 என்பது கானாவின் பொருளாதாரத்தில் பொற்காலமாக அமைந்திருந்தது. பணவீக்கம் 7.9 ஆக குறைக்கப்பட்டதுடன், ஆனாலும், அக்காலகட்டத்தில் எண்ணெய் வளத்தைக் கொண்டு பொருளாதார வளர்ச்சி பதிவாகியிருந்ததுடன், நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 40 சதவீதத்தைக் கொண்டிருந்த விவசாயத்தை தொடர்ந்து மேம்படுத்துவதில் அக்கறை காண்பிக்கப்படவில்லை. இதுவும் கொவிட்-19 தொற்றுப் பரவல், ரஷ்யா-உக்ரேன் மோதல் போன்றவற்றினால் கானா இன்றைய நிலைக்கு முகங்கொடுத்துள்ளமைக்கு காரணங்களாக அமைந்திருந்தன.

இலங்கையின் மீட்சிக்கும் பொறுப்பான, நாட்டைப் பற்றி சிந்தித்து தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடியவர்களிடம் அந்தப் பொறுப்புகள் ஒப்படைக்கப்படுவது சிறந்தது. தற்போதைய அரசாங்கத்தில் அவ்வாறு பொறுப்பாக செயலாற்றக்கூடியவர்கள் என எவரும் உள்ளார்களா என்பதில் மக்களுக்கு சந்தேகங்கள் உள்ளது. அல்லாவிடின், வெளியிலிருந்து அதனை மேற்கொள்ளக்கூடியவர்களை தெரிவு செய்து, அவர்களின் உதவியைப் பெற வேண்டியது, நாட்டின் எதிர்காலத்துக்கு முக்கியமானதாகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .