2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

சிலிண்டர் ரெகியுலேற்றர்கள், டியுப்களை அவதானிக்கவும்

S.Sekar   / 2021 நவம்பர் 29 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைக்காலமாக தொடர்ந்து இடம்பெறும் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்களுக்கு, தரம் குறைந்த ரெகியுலேற்றர்கள், வால்வுகள் மற்றும் டியுப் வகைகள் காரணமாக அமைந்துள்ளதாக லிட்ரோ காஸ் லங்கா சுகாதார பாதுகாப்பு மற்றும் சூழல் பணிப்பாளர் ஜயந்த பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

சந்தையின் மொத்த திரவ பெற்றோலிய வாயு தேவையின் 80 சதவீதத்தை லிட்ரோ காஸ் விநியோகிக்கின்றது.

எமது சிலிண்டர்களின் பாதுகாப்பை நாம் உறுதி செய்துள்ளோம். வாடிக்கையாளர்கள் தாம் பயன்படுத்தும் சாதனங்களின் தரம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். எமது சுய ஆய்வுகளை நாம் முன்னெடுத்து வருவதுடன், லிட்ரோவுடன் தொடர்புடைய சம்பவங்கள் பற்றிய அறிக்கை ஒன்றை பூர்த்தி செய்துள்ளோம். இதில் தரம் குறைந்த ரெகியுலேற்றர்கள், வால்வுகள் மற்றும் டியுப் வகைகள் போன்றன வெடிப்புச் சம்பவங்களுக்கு காரணமாக அமைந்துள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது.

வெடிப்புச் சம்பவங்களில் இரண்டு மாத்திரமே லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களுடன் தொடர்புடையதாக அமைந்திருந்தன. தொடர்ச்சியாக இவ்வாறான எரிவாயு சிலிண்டர் வெடிப்புகள் ஏற்படுவது என்பது அசாதாரண நிலையாகும். சாதாரணமாக வருடமொன்றில் ஐந்து முதல் பத்து வரையான சம்பவங்கள் மனிதர்களின் கவனயீனமான செயற்பாடுகளால் இடம்பெறுவது தொடர்பில் அறிந்துள்ளது.

கசிவு ஏற்படுவதாக உணர முடிந்தால், குறித்த சிலிண்டர் காணப்படும் பகுதிக்கு போதியளவு காற்றோட்டத்தை ஏற்படுத்துமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்துகின்றோம். அத்துடன் ரெகியுலேற்றரை சிலிண்டரிலிருந்து அகற்றி, பாதுகாப்பு வால்வை அதில் மீளவும் பொருத்த வேண்டும். அதன் பின்னர் சிலிண்டரை வெளியே கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு கசிவு ஏற்பட்டதாக கருதப்படும் பகுதிகளில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவது அல்லது மின் விளக்கை ஒளிர விடுவதைக் கூட தவிர்க்க வேண்டும் என்றார்.

உயர் தரம் வாய்ந்த ரெகியுலேற்றர்களை பயன்படுத்துவதனூடாக, இவ்வாறான கசிவுகளை தவிர்த்துக் கொள்ள முடியும். துர்மணத்தினூடாவும், எரிவாயு வெளியேறும் சத்தத்தினூடாகவும் கசிவு இருப்பதை அவதானிக்க முடியும். ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவையும் டியுப்கள் மாற்றப்பட வேண்டும் என்பதுடன், ஐந்தாண்டுகளுக்கு ஒரு தடவை ரெகியுலேற்றர்கள் மாற்றப்பட வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X