2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

உணவு விவசாய ஸ்தாபனம் விவசாய அமைச்சிடம் யூரியா கையளிப்பு

S.Sekar   / 2022 நவம்பர் 25 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் மத்திய அவசர நிவாரண நிதியத்தின் (UN-CERF) ஊடாகக் கொள்முதல் செய்யப்பட்ட 780.1 மெட்ரிக் தொன் யூரியாவை ஐக்கிய நாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனம் (FAO) அண்மையில் விவசாய அமைச்சிடம் கையளித்தது.

வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, பதுளை ஆகிய நான்கு மாவட்டங்களில் அரை ஏக்கருக்குக் குறைவான சிறிய காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளும் 15,619 விவசாயிகளுக்கு தலா 50 கிலோகிராம் வீதம் இந்த யூரியா பகிர்ந்தளிக்கப்படும். விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் இந்த உரத்தின் விநியோகம்; விவசாய அமைச்சு மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவியுடன் இவ்வாரத்தில் ஆரம்பமாகும்.

அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சமீபத்திய பொருளாதார அதிர்ச்சி, உர வகைகளுக்கான பற்றாக்குறை என்பவற்றிலிருந்து மீட்சிபெற உதவுவதே FAO மேற்கொள்ளும் இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.

யூரியா உரத்தைக் கையளிக்கும் வைபவத்தில் பேசிய விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கையில் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதில் அமைச்சு காட்டும் ஆழ்ந்த அக்கறையை வலியுறுத்தியதோடு, FAO வழங்கும் உதவிக்கு தனது நன்றியை தெரிவித்தார். 'அவசியமான விவசாய உள்ளீடுகள் நெற்செய்கையாளர்களுக்குக் கிடைக்குமாயின் நாட்டின் உணவுப் பாதுகாப்பை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டுவர முடியும். மிகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அத்தியாவசிய உரங்களும் ஏனைய உள்ளீடுகளும் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய முறையில் ஒத்துழைப்பதற்காக நான் FAO அமைப்பிற்கு நன்றி கூறுகின்றேன்' என்று அவர் தெரிவித்தார்.      

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான FAO பிரதிநிதி விமலேந்திர ஷரன் பேசுகையில், FAO அமைப்புடன் நெருங்கிய ஒத்துழைப்பை மேற்கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். “FAO என்ற முறையில் நாம் எமது பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றுவதோடு எளிதில் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகளும் மீனவர்களும் தமது வாழ்வாதாரங்களைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்படாமல் தத்தமது குடும்பங்களுக்கு உணவூட்டுவதை உறுதிப்படுத்துவதற்கு ஒவ்வொரு மட்டத்திலும் பரிந்துரைகளை வழங்குகின்றோம். இன்று கையளிக்கப்பட்ட யூரியா உரம் நாட்டின் மிக வறிய மாவட்டங்களில் மோசமாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும். அதன் மூலம் அவர்கள் தமது குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் நாட்டின் உணவு உற்பத்தியைப் பெருக்கவும் முடியும்' என்றும் அவர்; கூறினார்.

'பொருளாதார நெருக்கடியின் மோசமான தாக்கங்களிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் கடந்த ஜூன் மாதத்திலிருந்து பல்துறை உதவிகளை வழங்கி வருகின்றது. 3.4 மில்லியன் மக்களை இலக்காகக் கொண்டு சமீபத்தில் மறுசீரமைக்கப்பட்ட மனிதநேய தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் திட்டத்தின் மூலமான உதவிகளும் இதில் உள்ளடங்கும். 'உள்நாட்டு உணவு உற்பத்தி ஆற்றல் மற்றும் விநியோக அமைப்புகளை இயன்ற அளவுக்கு மேம்படுத்துவதற்கான உதவிகளில் நாம் கவனத்தைச் செலுத்துகின்றோம். விவசாய அமைச்சிடம் இன்று கையளிக்கப்பட்ட யூரியா உரமானது, பாதிக்கப்பட்டுள்ள வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்பவும் அதன் மூலம் இலங்கையில் உயிர்களைக் காப்பாற்றவும் உதவும்' என்று இலங்கையில் ஐ.நா. வதிவிட இணைப்பாளராகப் பணியாற்றும் ஹனா சிங்கர்-ஹம்டி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .