2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பொதுச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதெப்படி?

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

உரிய பருவ வ​யதை அடைந்த ஆணோ பெண்ணோ, குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முடியுமென்பதே, இந்நாட்டிலுள்ள பொதுச் சட்டம் வலியுறுத்துகின்றது. இந்தத் திருமணம் எனும் விடயத்தில், சமூக ரீதியான பொருளாதார நிபந்தனைகள், ஒருவருக்கொருவர் மாறுபட்டாலும், சட்ட நிபந்தனை என்பது, அனைவருக்கும் பொதுவானதாகவே காணப்படுகின்றது.   

இலங்கையைப் பொறுத்தவரையில், திருமணம், விவாகரத்து தொடர்பில், மூன்று பிரிவுகளின் கீழான சட்டங்கள் தாக்கத்தைச் செலுத்துகின்றன. பொதுச் சட்டம், மேலைத்தேய சட்டம், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் என்ற மூன்றே அவையாகும். இவற்றில், பொதுச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதாயின், சில விடயங்கள் பற்றி அறிந்திருப்பது நல்லது.

பொதுச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதாயின்...

இருவரும் 18 வயதைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

ஏற்கெனவே திருமணம் செய்தவராயின், அதை சட்டரீதியாக இரத்துச் செய்யாது, இன்னொரு திருமணத்துக்குத் தயாராவாராயின், அது குற்றமாகும்.

விவாகரத்தானவர்கள், மீண்டும் திருமண வாழ்க்கையில் ஈடுபட, எந்தவொரு தடையும் இல்லை.

விவாகரத்து வழக்கொன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போது, இன்னொரு திருமணத்துக்குத் தயாராக முடியாது. விவாகரத்து வழக்கின் தீர்ப்பு கிட்டும் வரை காத்திருக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட உறவுமுறைகளுக்கு இடையில், திருமணம் செய்ய முடியாது. அவ்வாறு தடை செய்யப்பட்ட உறவுமுறைத் திருமணங்களைச் செய்பவர்கள், முறையற்ற பால் தொடர்பு (incest) குற்றத்துக்கு ஆளாவார்கள்.

திருமணம் செய்துகொள்பவர்களில் ஒருவரேனும் 18 வயதுக்குக் குறைந்தவராயின், அந்தத் திருமணம், அதிகாரமற்றதாகும். அந்தக் குற்றம் நிரூபிக்கப்படும்போது அவ்விருவரும் 18 வயதைப் பூர்த்தி செய்திருந்தாலும், திருமணம் சட்டபூர்வமானதென அங்கிகரிக்கப்படும்.

இணைந்து வாழ்தல் மற்றும் உறவுகொள்ளல் என்பதற்கான பொறுப்பு, இருவரையும் சாரும்.

திருமணத்துக்குப் பின்னர் கணவர் இறப்பாராயின், இவரது இறுதி விருப்பமின்றியே, கணவரின் அனைத்துச் சொத்துக்களுக்கும், மனைவியே உரிமையாளர் ஆகின்றார்.

விவாகரத்து பெறுவதாயின்...

பொதுச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொண்டவர்கள், நீதிமன்றத்தின் கீழ் அந்தத் திருமணம் இரத்துச் செய்யப்படும் வரையில் அல்லது இருவரில் ஒருவர் உயிரிழக்கும் வரையில், அந்தத் திருமணம் செல்லுபடியானதாகும்.

இலங்கைச் சட்டத்தின்படி, திருமணமொன்றை இரத்துச் செய்வதாயின், திருமணம் தவறொன்று (matrimonial fault) நிரூபிக்கப்படல் வேண்டும்.

திருமணத்துக்குப் பின்னர் இடம்பெறும் முறைபிறழ்புணர்ச்சி.

வெறுக்கத்தக்க வகையில் கைவிட்டுச் செல்லல்.

திருமணம் செய்தது முதல் நிலவும் சுகப்படுத்த முடியாத குறைபாடுகள்.

விவாகரத்துக் கொடுப்பனவு...

வழக்கின் தீர்ப்பு கிடைக்கும் வரையில், தற்காலிக விவாகரத்துக் கொடுப்பனவொன்றைச் செலுத்துமாறு கோர முடியும்.

விவாகரத்துக்கான தீர்ப்பு கிடைத்த பின்னர், நிலையான விவாகரத்துக் கொடுப்பனவொன்றைக் கொடுக்க வேண்டுமென, நீதிமன்றத்தால் ஆணையிட முடியும்.

விவாகரத்துச் சட்ட விளைவுகள்...

முதல் திருமணம், சட்டரீதியாகச் செல்லுபடியற்றதாக்கப்பட்டு உள்ளது. இரு தரப்பினரும், மீண்டும் தனித்தனியே வேறு நபர்களைத் திருமணம் செய்துகொள்ள முடியும்.

திருமண பந்தம் தொடரும்போதும் விவாகரத்து கிடைத்து 280 நாள்களுக்குள்ளும், பிள்ளைகளுக்கு சொத்துரிமை உள்ளது.

மீண்டும் திருமணம் செய்தல்...

மாவட்ட நீதிமன்றத்தின் ஊடாக விவாகரத்துத் தீர்ப்பொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு, முதல் அதற்கான தற்காலிகத் தீர்​ப்பொன்றே வழங்கப்படுவது வழக்கம். இந்தத் தற்காலிகத் தீர்ப்பு வழங்கப்பட்டு மூன்று மாதங்களின் பின்னர், நிரந்தரத் தீர்ப்பு வழங்கப்படும்.

பெரும்பாலானவர்கள், இந்தத் தற்காலிகத் தீர்ப்பைக் கொண்டே, தங்களுக்கு விவாகரத்து கிடைத்துவிட்டதாகக் கருதுகின்றனர். அதனால், உடனடியாக மற்றுமொரு திருமணத்துக்குத் தயாராகின்றனர்.

முதல் திருமணத்தை, முறையாக அறுத்துக்கொள்ளாது, இன்னொரு திருமண பந்தத்தில் இணைந்துகொள்வதால், அந்தப் புதிய திருமணம், செல்லுபடியற்ற அல்லது சட்டபூர்வமற்ற திருமணமாகவே கருதப்படுகிறது.

அதனால், தங்களுக்கு நிரந்தர​ விவாகரத்து கிடைத்துவிட்டதா என்பது தொடர்பில், தங்களுடைய சட்டத்தரணியூடாக அறிந்துகொள்ள வேண்டும்.

அவசரப்பட்டு செல்லுபடியற்ற திருமணத்தில் ஈடுபட்டால், எதிர்காலத்தில் தாபரிப்புப் பணம், சொத்துரிமை போன்றவற்றைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படும்.

அத்துடன், செல்லுபடியற்ற திருமணத்தைச் செய்துகொள்வதால், பலதாரத் திருமணக் குற்றத்துக்கு ஆளாகி, தண்டனை அனுபவிக்க நேரிடும்.

சட்டரீதியாகப் பிரிதல் (Legal Separation)

திருமண பந்தத்தில் இணைந்துள்ள இருவரில் ஒருவரேனும் அல்லது இருவரும், தங்களைச் சட்டரீதியாகப் பிரிக்குமாறு கோர முடியும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில், உடல் ரீதியாக இருவரும் இணையாதிருக்கவே சட்டத்தின்பால் அனுமதி வழங்கப்படுமேயன்றி, திருமணம் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட மாட்டாது.

கொடூரம், அதிகப்படியாக மது அருந்துதல், முறைபிறழ்புணர்ச்சி, இரு தரப்பையும் ஓரிடத்தில் வைப்பதால், இருவரில் ஒருவருக்கேனும் உயிராபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை, அடிக்கடி அடிபுடி சண்டைகள் ஏற்படல், இருவரும் ஒன்றாக வாழ்வதால் ஏற்படக்கூடிய பாரிய நோய்களைக் காரணங்காட்டி, பிரிவதற்கான தீர்ப்பைப் பெற்றுக்கொள்ளலாம். அதுவே, சட்டப்படியான பிரிவாகும்.

சட்டத்தரணி
சஞ்ஜீவனி அபேகோன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .