2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

கோட்டாவுக்கு எதிரான வழக்கு: ஒவ்வொரு நாளும் விசாரணை

Editorial   / 2019 ஜனவரி 18 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஏழுபேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, கொழும்பு விசேட மேல்நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், நேற்று (17) கட்டளையிட்டுள்ளது.  

இந்த வழக்கு, நீதிபதிகளான சம்பத் அ​பேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் ஜானகி ராஜரத்ன ஆகியோரின் முன்னிலையில் அழைக்கப்பட்டபோதே, மேற்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது.   

மெதமுலன டீ.ஏ ராஜபக்‌ஷ, நினைவு அருங்காட்சியகத்தை நிர்மாணிக்கும் போது, அரச நிதியான 33.9 மில்லியன் ரூபாயை மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், அந்த ஏழு பிரதிவாதிகளுக்கு எதிராகவும் அதிக்குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   

இந்த வழக்கின் முதலாவது பிரதிவாதியான கோட்டாபய ராஜபக்‌ஷ, நீதிமன்றத்தின் அனுமதியுடன் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தமையால், கடந்த 3ஆம் திகதியன்று இடம்பெற்ற வழக்குத் தவணைக்கு அவர் சமுகமளித்திருக்கவில்லை. இந்நிலையில், நேற்றைய விசாரணைக்கு அவர், வருகைதந்திருந்தார்.   

முறைப்பாட்டாளர், பிரதிவாதிக்குக் கையளித்துள்ள ஆவணம், முறையாக இல்லையென, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கடந்த தவணையின் போது கொண்டுவரப்பட்டதை அடுத்து, வழக்கு விசாரணை நேற்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.  

இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த காணி மீட்பு மற்றும் மேம்பாட்டுக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், மேற்படி வழக்குடன் தொடர்புடைய ஆவணங்களைக் கையளித்தார். அத்துடன், பிரதிவாதிகள் தரப்பால் கோரப்பட்ட ஆவணங்களில் பல கையளிக்கப்பட்டுள்ளனவென, நீதிமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டுவந்தார்.   

இந்நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனர் திலீப் பீரிஸ், காணி மீட்பு மற்றும் மேம்பாட்டுக் கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றும் அதிகாரிகள், வழக்கு விசாரணை ஆரம்பிக்கவிருக்கும் காலகட்டத்தில், வெளிநாடுகளுக்குச் செல்வதற்குத் தயாராகியுள்ளனர்.

அவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டால், முறைப்பாட்டாளர் தரப்புக்குப் பெரும் பாரபட்சமாக அமைந்துவிடுமென, நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.   

இந்நிலையில், வழக்கு விசாரணைக் காலகட்டத்தில், சாட்சியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதாயின், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவருமாறு மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாம் சாட்சியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.   

அதிக்குற்றச்சாட்டு ஆவணங்கள் அடங்கிய வழக்குப் பொருட்கள் 105 மற்றும் கணக்காய்வு அறிக்கை உள்ளிட்டவையும் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதுடன், சாட்சியாளர்களாக 80 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X