2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மீட்ட உடற்பாகங்கள் தாஜுதீனுடையது அல்ல

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 06 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

மாலபேயிலுள்ள சைட்டம் (மருத்துவம் மற்றும் தொழில் நுட்பத்துக்கான தெற்காசிய நிறுவகம்) நிறுவகத்திலிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட உடற்பாகங்கள், பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் அல்ல என்று இரகசிய பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு நேற்று (05) கொண்டுவந்தனர். 

பொரளை ஜின்டெக் நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி ருவன் இலேபெரும, அனுப்பிவைத்துள்ள மரபணு அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குற்றப்புலனாய்வு பிரிவினர், கொழும்பு பதில், மேலதிக நீதவான் பிரசாத் சில்வாவின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். 

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியை மூடி மறைப்பதற்கு சூழ்சிகளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை, எதிர்வரும் 18ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டார். 

வசீம் தாஜுதீனின் உடலிலிருந்து காணாமல் போயுள்ள உடற்பாகங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மேற்கோள் கடந்த பெப்ரவரிமாதம் 5ஆம் திகதியன்று, சட்டமா அதிபருக்கு, ஆலோசனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு நேற்று கொண்டுவந்தனர்.  

இந்த வழக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் வழக்கமாக எடுத்துக்கொள்ளப்படும் நிலையில், அவர் நேற்று சமுகமளித்திருக்கவில்லை. 

வசீம் தாஜுதீன், 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியன்று நாரஹேன்பிட்டிய சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் காரொன்றுக்குள் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X