2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

‘அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட இரசாயனம் இலங்கையிலும் பயன்படுத்தப்பட்டது’

Gavitha   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டான, கொச்சிக்கடை பொலிஸ் நிலையங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது   

பாதுகாப்பு அமைச்சினூடாக வழங்கப்பட்ட ஜெலிக்நைட்டுகளைப் பயங்கரவாதிகளும் பெற்றுக்கொண்டனர்   

கடதாசி வெட்டும் இயந்திரத்தைப் பயன்படுத்தி ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டன   

தேசிய பாதுகாப்புக்கு மாத்திரம் சிறப்பு புலனாய்வு பிரிவு அவசியம்   

இலங்கையின் உளவுத்துறை பிரிவு மறுசீரமைக்கப்பட வேண்டும்  

இலங்கையின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு, தேசிய புலனாய்வுப் பிரிவு மேலும் வலுப்படுத்தப்படல் வேண்டும் உள்ளிட்ட பல பரிந்துரைகளை, ஜனாதிபதிக்கு வழங்கிய அறிக்கையில் உள்ளடக்கியதாக, உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட தெரிவித்தார்.  

ஏப்ரல் 21ஆம் திகதி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் விசாரணை, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (20) நடைபெற்றது.  

இதன்போது, உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோன், முன்னாள் செயலாளரான பத்மசிறி ஜயமான்ன ஆகியோர் சாட்சியமளித்திருந்தனர்.  

21/4 தாக்குதலுக்கு பின்னர், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவில் அங்கத்துவம் வகிக்கும் மூவரே, சாட்சியாளர்களாக ஆஜராகியிருந்தனர்.  

இவர்களது விசாரணை தொடர்பான அறிக்கை, ஜுன் 10ஆம் திகதி, ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில் உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, தெரிவுக்குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், தெரிவுக்குழுவின் பிரதிநிதிகளுக்கு முன்னால் உரையாடினார்.  

உயர்நீதிமன்ற நீதியசராக அன்றி, தற்போது தான் சாட்சியளிப்பதற்காக வந்துள்ளதாகத் தெரிவித்த அவர், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்பதாலேயே, ஜனாதிபதியால், தான் குழுவின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டபோது, அதை ஏற்றுக்கொண்டதாகவும் தாக்குதல் ​நடைபெற்ற அடுத்த நாளான 22ஆம் திகதியே, இந்தக் குழு நியமிக்கப்பட்டது என்றும் கூறினார்.  

இதன்பிரகாரம் தாங்கள் மூவரும், குழுவின் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்போது, இந்த நாட்டிலுள்ள சாதாரண பிரஜையின் மனதில் என்ன இருந்ததோ, அதுவே தங்களிடமும் இருந்தது என்றும், நடந்தச் சம்பவங்களை மாத்திரம் தெரிந்துகொண்டு, ஏப்ரல் 25ஆம் திகதி விசாரணைகளை ஆரம்பித்ததாகவும் அவர் கூறினார்.  

விசாரணைகளை முடிப்பதற்கு, ஜனாதிபதியால் 2 வாரங்கள் மாத்திரம் வழங்கப்பட்டிருந்தபோதிலும் அந்தக் காலம் தங்களுக்குப் போதாது என்பதால், மேலும் மூன்று வாரங்களுக்கு, குழுவின் காலம் நீடிக்கப்பட்டது என்றும் இந்த ஐந்து வாரங்களுக்குள், 60 பேரிடம் விசாரணைகளை முன்னெடுத்ததாகவும் அவர் கூறினார்.  

சாட்சியாளர்களாக ஆஜரானவர்கள், அவர்களுக்குத் தெரிந்த விடயங்களை அப்படியே கூறினார்கள் என்றும் இந்த விசாரணை, மே மாதம் 31ஆம் திகதி முடிவடைந்தது என்றும் அவர் கூறினார்.  

அதன் பின்னர் தான் மீண்டும் உயர்நீதிமன்ற நீதியரசராக பணியாற்ற ஆரம்பித்ததாகவும் 140 பக்கங்கள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். இந்த அறிக்கையில், தங்களால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பாகவும் தங்களது அவதானங்கள், விதப்புரைகள் உள்ளிட்ட சில ஆவணங்கள் உள்ளடக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.  

தயாரிக்கப்பட்ட அறிக்கையின் ஒரு பிரதியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் மற்றொரு பிரதியை தங்களிடமும் வைத்துக்கொண்டதாகக் கூறிய அவர், அதன்பின்னர், ஜனாதிபதி செயலகத்தால் கோரப்பட்டதையடுத்து, 10 பிரதிகள், கைச்சாத்திடப்பட்டு அனுப்பப்பட்டதாகவும் அவற்றுக்குள், தனிதனி தொகுதியாகச் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள், பெறப்பட்ட வாக்குமூலங்கள் இறுவட்டுகளில் பதியப்பட்டு ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.  

பின்னர் அவையனைத்தும், தேசிய சுவடி குழுவுக்கு வழங்கப்பட்டதாக தெரியவந்தது என்றும் தங்களது குழுவுக்கு இராணுவம், புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்ட சில இரகசிய ஆவணங்களும் சுவடி குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டது என்றும் அதன்பின்னர், தங்களிடமிருந்து அறிக்கைகள் உள்ளிட்ட இந்த விசாரணை சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்கள் உள்ளிட்ட இறுவட்டுகள், கடதாசி வெட்டும் இயந்திரத்தைப் பயன்படுத்தி அழிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.  

தற்போது, ஜனாதிபதியால் தங்கள் மூவருக்கும் வழங்கப்பட்ட நியமனக் கடிதங்களைத் தவிர, வேறு எந்தவோர் ஆவணமும் இல்லை என்றும் தேசிய பாதுகாப்பு காரணமாகவே, இவையனைத்தையும் அழித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.  

இந்நிலையில், தங்களால் ஞாபகம் இருக்கும் விடயத்தை மாத்திரமே, இந்த விசாரணைக்குழு முன்னிலையில் கூற முடியும் என்றும் தேசிய பாதுகாப்புக்கோ அல்லது இரகசியமாக பேணப்படவேண்டிய விடயங்களை கூறுவது, அத்துடன் சிக்கலாமன விடயங்களைக் கூறுவது​ போன்றவை, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட எங்களுடைய குழுவையும் நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்த விசாரணைக்குழுவையும் கொச்சைப்படுத்துவதாக அமைந்துவிடும் என்றும் கூறி முடித்தார்.  

இதன்போது, நாடாளுமன்ற தெரிவுக்குழுவால் கோரப்பட்ட பல கேள்விகளுக்கு, நீதியரசராலேயே பதிலளிக்கப்பட்டது.  

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவால், பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றமை குறித்து வினவியபோது, தனிப்பட்ட பரிந்துரைகள் எதையும் தங்களது குழுவினர் வழங்கவில்லை என்றும் ஆனால், யாரெல்லாம் விசாரிக்கப்பட வேண்டும் என்பது குறித்து, முதலாவதாக, அதாவது ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி சமர்ப்பித்த முதல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாக நீதியரசர் கூறினார்.  

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நாள்களிலேயே, இந்தத் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர், பாதுகாப்புச் செயற்பாடுகள் என்னென்ன குறைபாடுகள் காணப்பட்டன என்பது குறித்து தாங்கள் கண்டறிந்ததாகவும் அப்போதுதான், முதலாவது அறிக்கையையே சமர்ப்பித்ததாகவும் அந்த அறிக்கையில், எந்தெந்த துறையைச் சேர்ந்த யா​ரெல்லாம் விசாரிக்கப்படவேண்டும் என்பது குறித்து தெரிவித்திருந்ததாகவும் கூறினார்.  

விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் பொலிஸாரும் உள்ளடங்குகின்றனரா; அவ்வாறாயின் இரண்டு பொலிஸாரா அல்லது அதற்கும் மேற்பட்ட பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்று வினவிப்பட்டபோது, உள்ளூர் பொலிஸ் நிலைய பொலிஸார் உள்ளிட்ட பல பொலிஸாரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக் கூறினார்.  

இதேவேளை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு, ஏதாவது சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டதா என்று வினவியபோது இல்லை என்று தெரிவித்த அவர், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போது, சாட்சியங்களாக ஆஜர்படுத்தப்பட்டவர்களிடம் தங்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, பல நேரங்களில் பதில் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.  

சாட்சியாளர்களாக ஆஜரானவர்களின் பெயர் பட்டியலைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்று வினவப்பட்ட போது, அதற்கு பதிலளித்த நீதியரசர், “அது குறித்து சரியாக கூற முடியாது; ஏனெனில், தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையே சரியான முறையில் கணிப்பிடப்படவில்லை” என்றும் ஆனால், “அரசியல் தரப்பில், அமைச்சர்களான ஹரீன் பெர்ணான்டோ, மனோ கணேசன், சுவாமிநாதன் ஆகியோர் ஆஜராகினர்” என்றும் யாருடைய பெயரெல்லாம் விசாரணைகளின் போது கூறப்பட்டதோ, அவர்களே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று கூறினார்.  

இதேவேளை தற்கொலை குண்டுத்தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்ட குண்டில், யூரினா நைட்ரைட்டு பயன்படுத்தப்பட்டிருந்தது என்றும் இவை, அமெரிக்காவின் பாதுகாப்பு மய்யத்தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்டது என்றும் இந்த இரசாயனப் பதார்த்தத்தை ஐ.எஸ் அமைப்பு பயன்படுத்துகின்றது என்றும் கூறினார்.  

இந்த இரசாயனப் பதார்த்தம், புத்தளம், வனாத்தவில்லு பகுதியில் கண்ணெடுக்கப்பட்ட குண்டில் உள்ளடக்கப்பட்டிருந்தது என்றும் சாய்ந்தமருது குண்டுத்தாக்குலின் போதும் பயன்படுத்தப்பட்டிருந்தது என்றும் அவர் கூறினார்.  

இலங்கையின் உளவுத்துறை தொடர்பான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதா என்று வினவப்பட்டபோது, இலங்கையின் உளவுத்துறை பிரிவு மறுசீரமைப்பு செய்யப்படவேண்டும் என்றும் தேசிய பாதுகாப்புக்கென சிறப்பு உளவுப்பிரிவு ஸ்தாபிக்கப்படல் வேண்டும் என்று பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக, உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோன் ஆகிய இருவரும் தெரிவித்தனர்.  

இலங்கையில், பல புலனாய்வுப்பிரிவுகள் இருந்தபோதும் அவை ஒவ்வொன்றுக்கும் இடையில் சரியான தொடர்பாடல் இன்மை ஒரு குறையாகக் காணப்படுவதாகவும் இதனாலேயே, தேசிய பாதுகாப்புக்கென்று தனியானதொரு பிரிவு அவசியமொன்று தெரிவித்ததாகவும் கூறினார்.  

இதேவேளை, தாக்குதல் நடைபெறுவற்கு முன்னரிலிருந்து, தேசிய பாதுகாப்பு குழுக்கூட்டம் நடைபெற்றிருக்கவில்லை என்றும் ஆனால், அது ஏன் நடைபெறவில்லை என்பது குறித்து தாங்கள் ஆராயவில்லை என்றும் ஏனெனில், இந்தத் தாக்குதலின் போதும் அதற்கு முன்னரும் என்ன நடந்தது என்பதைத் தேடி எடுப்பதே, தங்களது நோக்கமாக இருந்தது என்றும் இதன்போது அவர் கூறினார்.  

உள்ளூர் பொலிஸ் நிலையங்களில், தலா இரண்டு புலனாய்வுப் பிரிவு செயற்பட்டு வருவதாகவும் ஆனால், அவர்களுக்கும் இந்தத் தாக்குதல் பற்றி தெரிந்திருக்கவில்லை என்றும் தெரிவித்தார்.  

எவ்வாறாயினும் அனைத்து பொலிஸாரும் கடமையிலிருந்தும் இது பற்றி அறிந்துகொள்ள தவறிவிட்டார்களா என்று வினவப்பட்டபோது, அதற்கு பதிலளித்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோன், தகவல் பரிமாற்றல் முறை, பொலிஸாருக்குள் சரியான முறையில் நடைபெறவில்லை என்றும் இதனாலேயே, தேசிய பாதுகாப்புக்கென்று மாத்திரம் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு பரிந்துரை செய்ததாகவும் கூறினார்.  

வேறு என்ன குறைபாடுகள் குறித்து தெரியவந்தன என்று வினவப்பட்டபோது, பாதுகாப்பு அமைச்சில் குறைபாடுகள் இருந்தன என்றும் ஆனால், இந்த பாதுகாப்பு அமைச்சில் காணப்பட்ட குறைபாடுகள், யார் மீது குறைபாடுகள் காணப்பட்ட என்பது குறித்து, ஊடகவியலாளர்கள் இருக்கும்போது கூற முடியாது என்றும் ஆனால், அது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரியவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.  

தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரான 20ஆம் திகதி, இந்தத் தாக்குதல் நடத்தப்படவுள்ளது என்பது குறித்து, கட்டான, கொச்சிக்கடை உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும், எந்த நபரால் தாக்குதல் நடத்தப்படவுள்ளது என்பது குறித்து கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ள போதிலும், இந்தத் தாக்குதல் தடுத்து நிறுத்தப்படவில்லை என்பது, மிகப்பெரிய குறைபாடு என்று கூறிய நீதியரசர், கிழக்கு மாகாணத்தில் சஹ்ரான் பற்றிய பல பிரச்சினைகள் இருந்திருந்த போதிலும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாமையும் குறைபாடே என்றும் இதன்போது அவர் கூறினார்.  

இதேவேளை, தற்கொலை குண்டுத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட குண்டில், ஜெலிக்நைட் இரசாயனப் பதார்த்தம் கலக்கப்பட்டிருந்தது என்றும் இந்த ஜெலிக்நைட், பாதுகாப்பு அமைச்சினூடாக, கருங்கல் உடைக்கும் இடங்களுக்கு வழங்கப்படுவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.  

எனவே, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த ஜெலிக்னைட், பாதுகாப்பு அமைச்சினூடாக வழங்கப்பட்டாலும் அதை, பயங்கரவாதிகளும் பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் எனவே, இதில், பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்தி, கட்டுப்பாட்டுடன் இந்த இரசாயனப் பதார்த்தத்தை, வழங்கவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகின்றது.  

சாட்சிக்கு அழைக்கப்பட்டவர்களில், சட்டமா அதிபர் திணைக்கள உறுப்பினர்கள் இருவர் இருந்தனர் என்றும் ஆனால், அவர்களிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்படாமல், மாறாக, அவர்கள் கொண்டு வந்த ஆவணங்கள் சேமிக்கப்பட்டன என்றும் இதன்போது நீதியரசர் கூறினார்.  

இதன்பின்னர், ஊடகவியலாளர்கள் அனைவரும், விசாரணைக் குழு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .