Gavitha / 2016 நவம்பர் 22 , பி.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
'சிங்கள, முஸ்லிம் உறவை சீர்குலைத்து, இருதரப்புகளுக்கும் இடையில் மோதலை உருவாக்குவதற்கு சூழ்ச்சி வகுக்கப்படுகின்றது. இதன் ஓர் அங்கமாகத்தான் கண்டியில் பள்ளி வீதி பெயர்பலகை உடைக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்;வின் நீலப் படையணியில் இருந்த இளைஞர் ஒருவரே, முஸ்லிம் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டு வருகிறார்' என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
'முஸ்லிம் மக்களுக்கு இந்த நாட்டில் வாழும் உரிமை இல்லை என்ற பயங்கரமான செய்தியை வழங்குவதே அவர்களின் நோக்கமாக இருக்கின்றது. நீலப்படையணின் சூத்திரதாரி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். முஸ்லிம் அடிப்படைவாதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளையின் கீழ், ஏற்கெனவே எழுப்பியிருந்த கேள்விக்கு, செவ்வாய்க்கிழமை (22) அளித்த பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
'பலஸ்தீனுக்கு ஒத்துழைப்பு வழங்கும் இலங்கையின் கொள்கையில் மாற்றம் இல்லை. பலஸ்தீன் தொடர்பான யுனெஸ்கோ வாக்கெடுப்பை, இலங்கை தவிர்த்தது. அது எதிர்த்து வாக்களித்ததாக அர்த்தப்படாது. இஸ்ரேல்-பலஸதீன உறவை உறுதிப்படுத்தவே, அவ்வாறு செய்தோம் என்பதுடன் அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிப்பணிந்து, வாக்களிப்பிலிருந்து விலகிநிற்கவில்லை
அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பணிந்துதான், பலஸ்தீன விவகாரம் தொடர்பான யுனெஸ்கோ வாக்கெடுப்பில், இலங்கை பங்கேற்கவில்லை என்றக் குற்றச்சாட்டை நான் முற்றாக மறுக்கின்றேன். இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது, சிங்கள, முஸ்லிம் மக்களிடையே மோதலை உருவாக்குவதற்கான சூழ்ச்சித்திட்டமாகும். அதற்கான திட்டமே வகுக்கப்படுகின்றது' என்றார்.
'பலஸ்தீனத்துக்காகவும் அங்குவாழும் மக்களுக்காகவும், இலங்கை தொடர்ச்சியாக குரல் எழுப்பிவருகின்றது. அன்று முதல் இன்றுவரை அனைத்து அரசாங்கங்களும் பலஸ்தீனத்துக்கு ஆதரவளித்துள்ளன. எமது நல்லாட்சி அரசாங்கமும் அதே கொள்கையைத்தான் கடைபிடிக்கப்படுகின்றது. அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எதிர்காலங்களில் ஏற்படப்போவதுமில்லை.
குறிப்பாக பலஸ்தீனத்துக்கு ஐ.நாவில் கண்காணிப்பு அங்கத்துவம் கிடைப்பதற்கும் பலஸ்தீனகொடி அங்கு ஏற்றப்படுவதற்கும் இலங்கை முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது என்பதனை நினைவுப்படுத்த விரும்புகின்றேன்' என்று அவர் கூறினார்.
'இதற்கிடையில் இஸ்ரேல்- பலஸ்தீன பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாதுள்ளது. நாளாந்தம் பிரச்சினைகள் உக்கிரமடைந்துவரும் நிலைமையே இருக்கின்றது. எனவே, பேச்சுவார்த்தை மூலம்தான் அந்தப் பிரச்சினைக்கு, சுமூகமான தீர்வு காணப்படவேண்டும். அவ்வாறுதான் தீர்க்கப்பட வேண்டும்' என்றும் சுட்டிக்காட்டினார்.
'அதேவேளை, இஸ்ரேலுடனாக உறவும் இலங்கைக்கு முக்கியமாகும். அங்கு 6 ஆயிரம் இலங்கையர்கள் பணிபுரிகின்றன. தொழில்நுட்ப ரீதியில் அந்த நாடு முன்னிலையில் திகழ்கின்றது. எதிர்காலத்தில் மேலும் பல தொழில்வாய்ப்புகள் கிடைக்கலாம்.
எனவேதான், மேற்கூறப்பட்ட இருநாடுகளுடனும் எமது உறவைப் பலப்படுத்தும் நோக்கில் யுனெஸ்கோ வாக்கெடுப்பிலிருந்து இலங்கை விலகியிருந்தது. மாறாக அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பணிந்து தீர்மானம் எடுக்கப்படவில்லை. அணிசேரா நாடுகளின் கொள்கையும் மீறப்படவில்லை.
நிலைமை இப்படியிருக்கையில், இந்தப் பிரச்சினையைத் தவறாக அர்த்தப்படுத்தி, சர்வதேசத்துக்கு மத்தியில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு கும்பலொன்று முயற்சித்துவருகின்றது.
அத்துடன், இலங்கையில் நீண்டகாலமாகவே சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்துவருகின்றனர். இந்த உறவை சீர்குலைத்து மோதலை உருவாக்குவதற்கு சூழ்ச்சி வகுக்கப்படுகின்றது. இதன் ஓர் அங்கமாகத்தான் கண்டியில் பள்ளி வீதி பெயர்பலகை உடைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்களுக்கு இந்த நாட்டில் வாழும் உரிமை இல்லை என்ற பயங்கரமான செய்தியை வழங்குவதே அவர்களின் நோக்கமாக இருக்கின்றது. நாமல் ராஜபக்;வின் நீலப் படையணியில் இருந்த இளைஞர் ஒருவரே முஸ்லிம் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டுவருகிறார். தற்போது அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முஸ்லிம் அடிப்படைவாதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அடிப்படைவாதிகளின் தீய எண்ணங்களுக்கு இடமளிக்கப்படாது. இன ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் பாடுபடும்' என்றார்.
5 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago