2025 நவம்பர் 05, புதன்கிழமை

'முகாமில் இருக்கும் மக்களுக்கு காணிகளை வழங்கவும்'

Princiya Dixci   / 2016 நவம்பர் 26 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, பூந்தோட்டம் அகதி முகாமில் தங்கியிருக்கும் மக்களுக்கு அந்தக் காணிகளையே சொந்தமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி. எம்.பி.யான சுனில் ஹந்துநெத்தி, நேற்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (25) நடைபெற்ற காணி அமைச்சின் மீதான வரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்ட சுனில் ஹந்துநெத்தி, தாங்கள் வாழ்வதற்காகவே வடக்கு மற்றும் கிழக்கு மக்கள், அவர்களது காணிகளைக் கோருகின்றனர் என்றும் அவற்றை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தினார்.

அத்துடன், சிதம்பரபுரம், பூந்தோட்ட முகாமில் இன்றுவரை பல்வேறு கஷ;டங்களுக்கு மத்தியிலும் வாழும் மக்களுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் சுனில் ஹந்துநெத்தி சுட்டிக்காட்டினார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்:

'யுத்தம் நிறைவடைந்த 8 வருடங்களாகின்ற போதிலும் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படாமல் இருக்கிறது. அரசாங்கத்திடம் முறையாக பதிவுகள் இல்லாமையே இதற்கான காரணமாக இருக்கிறது. ஆகவே, பிரதேச செயலாளர் மட்டத்தில் காணி அலுவலகங்களை பலப்படுத்தி தேவையான அதிகாரிகளை நியமித்து பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இந்தக் காணிப் பிரச்சினைகளுக்கு இலகுவாக தீர்வினை வழங்க முடியும்.

கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட ஏனையா பலரும் காணிகளை கைப்பற்றியிருக்கலாம் அல்லது ஏனைய பல வழிகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அது தொடர்பில் ஆராய்ந்து முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் வசமே நாட்டின் பெருமளவான காணிகள் இருக்கின்றன. அத்துடன், கிராம சேவகர், பிரதேச செயலாளர்  மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் காணி தொடர்பான பதிவுகள் இருக்கின்றன. இவற்றின் உதவியுடன் ஆணைக்குழு முறையான பதிவுகளை மேற்கொள்வதில் சிரமங்கள் இருக்க வாய்ப்பில்லை' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X