2025 மே 15, வியாழக்கிழமை

‘இராணுவ ஆட்சி நீடிக்கிறதா?’

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

“காணிக்கான உரிமையை உறுதிப்படுத்தினால் பொதுமக்களின் காணிகளைக் கையளிப்போம் என்று கூறுவதற்கு விமானப்படையினருக்கு இருக்கும் உரிமை என்ன” என்று வினவிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சிவசக்தி ஆனந்தன், “வடக்கு, கிழக்கில் இராணுவ ஆட்சி நீடிக்கிறதா?” என்றும் கேள்வியெழுப்பினார்.  

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நிலவியதைப் போன்று தற்போதைய நல்லாட்சியிலும் நிலவுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  

நாடாளுமன்றத்தில், நேற்று நடைபெற்ற நிதி அமைச்சின் கட்டளைச் சட்டங்களின் கீழான கட்டளைகளை அங்கிகரிப்பதற்கான பிரேரணைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சிவசக்தி ஆனந்தன் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில், 

“முல்லைத்தீவு, கேப்பாபுலவு கிராமத்தைச் சேர்ந்த 84 குடும்பங்கள் தமது காணிகளை மீண்டும் வழங்குமாறு கோரி கடந்த 8 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில் குழந்தைகள், முதியவர்கள் என பலரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பலர் நோய்வாய்ப்பட்டுள்ளதுடன், சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாதுள்ளது.  

நல்லாட்சியெனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. இராணுவம் கையகப்படுத்திய காணிகளை ஆறு மாதங்களில் வழங்குவோம் என ஜனாதிபதி வடக்கில் வந்து கூறியிருந்தார். ஆனால், ஒரு வருடமாகிவிட்ட போதிலும் அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை. காணி விவகாரம் தொடர்பில் ஜெனீவாவிலும் உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. அவையும் நிறைவேற்றப்படவில்லை.  

விமானப்படை அதிகாரிகளுடன் பேசியபோது மேலிடத்தின் உத்தரவு இருந்தால் விடுவிக்க முடியும் எனக் கூறினார்கள். யாருடைய காணியை யார் விடுவிப்பது? யாருக்கு விடுவிப்பது? நல்லாட்சி நிலவுகிறதா அல்லது இராணுவ ஆட்சி முன்னெடுக்கப்படுகிறதா எனக் கேட்க விரும்புகிறோம்.  

பல ஏக்கர் சொந்தக் காணிகளை இராணுவத்தினர் பிடித்து வைத்திருப்பது தனிப்பட்ட பிரச்சினை மாத்திரமன்றி அரசியல் ரீதியான பிரச்சினையே” என்று தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .