2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

‘தீர்ப்பை மாற்ற மாட்டேன்’; ‘சண்டித்தனத்துக்கு சளைக்கேன்’

Gavitha   / 2017 மார்ச் 08 , பி.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

சபாநாயகர் கடும் உத்தரவுகளையும் கட்டளைகளையும் பிறப்பித்தார். அவைக்குள் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான தினேஷ் குணவர்தன, அவையிலிருந்து வெளியேற்றுவதற்கு பெயர் குறிப்பிடப்பட்டமை போன்றவை இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் பதிவாகியிருந்தன.

நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்று பிற்பகல் ஒரு  மணிக்கு கூடியது. சபாநாயகரின் அறிவிப்பின் போது, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியை நாடாளுமன்றத்துக்கு தனிக்கட்சியாக அங்கிகரிக்கமுடியாது என்று பல உதாரணங்களையும் விளக்கங்களையும் அளித்து தனது தீர்ப்பை அறிவித்தார்.

இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டதன் பின்னர் எழுந்த விமல் எம்.பி, ஏதோவொன்றை கூறுவதற்கு முயன்றார். எனினும், சபாநாயகர் அதற்கு அனுமதியளிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பில் வாதவிவாதங்கள், கருத்துகளை தெரிவிக்க இடமளிக்கமாட்டேன், எழுத்துமூலம் முறையிடுமாறு விமலிடம் கேட்டுக்கொண்டார்.

இதன்போது எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஏற்கெனவே கூறியதைப் போல, விமல் வீரவன்ச தலைமையிலான எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கமுடியும். எனினும் குழுவாக இயங்க இடமளிக்கமுடியாது என்றார். குறுக்கிட்ட விமல், இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் கருத்துரைத்துள்ளார். ஆகவே,தனக்கும் சந்தர்ப்பம் வேண்டுமெனக்கோரி ஒன்றைக்காலில் நின்றார்.

எப்போது  இடமளிப்பீர்கள்

சபாநாயகர் எவ்வளவு எடுத்துரைத்தும், விமல் வீரவன்ச கருத்துத் தெரிவிப்பதாக நின்றார். “எனக்கான சந்தர்ப்பம் நாளையா அல்லது நாளை மறுதினமா என்று அறிவிக்கவேண்டும்” எனக் கேட்டார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், இவ்வாரத்துக்குள் சந்தர்ப்பம் தருவேன் என்றார்.

இவ்வாரமல்ல, எப்போது இடமளிப்பீர்கள் என வீரவன்ச வினவினார். அதற்கு பதிலளித்த சபாநாயகர், வாரம் முடிவதற்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன. அந்த நான்கு நாட்களுக்குள் இடமளிப்பேன் என்றார்.

இதனிடையே, தினேஷ் குணவர்தன எம்.பியும் ஒழுங்குப் பிரச்சினையை கிளப்பி, ஏதேதோ கூறிக் கொண்டே போனார். அவருடன் இணைந்து கொண்ட விமல் வீரவன்ச, அந்தத் தீர்ப்பை ஏற்க முடியாது என்று கூச்சலிட ஆரம்பித்தார். “எமது வாயை மூடவா முயலுகின்றீர்கள்? நாடாளுமன்றத்தில் ஏகாதிபத்தியம் முன்னெடுக்கப்படுகின்றது. நான் இங்கு கருத்து வெளியிட வேண்டும் அதற்கு சந்தர்ப்பம் கொடுங்கள்”  என்று கோரிக்கை விடுத்தார்

இதற்குப் பதிலளித்த சபாநாயகர், “முக்கியமான பிரேரணை எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையால் உங்களின் கருத்துகளுக்கு என்னால் நேரம் ஒதுக்க முடியாது. நீங்கள் எழுத்து மூலமாக உங்களின் ஆட்சேபனையை அனுப்பினால் நான் அதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பே” என்றார்.

எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத விமல், தொடர்ந்தும் சத்தமிட்டதுடன்  சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தார்.

தொலைக்காட்சிக்கு பேசுகிறார்

அவரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த சபைமுதல்வாரன லக்ஷ்மன் கிரியெல்ல, “இவர் தொலைக்காட்சி விளம்பரத்துக்காகவே இவ்வாறு கூச்சலிடுகிறார்” என்று தெரிவித்தார்.

பின்னர், ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய விமல் எம்பி, “நான் சபாநாயகரின் கருத்துக்கு எதிர்ப்பினை வெளியிடவில்லை. எனக்கு இது தொடர்பில் கருத்து வெளியிட நேரம் ஒதுக்குமாறு கேட்கிறேன். இதற்கு முறையான பதிலொன்றை சபாநாயகர் வழங்க வேண்டும்”என்றார்.

இதனைத் தொடர்ந்து எழுந்த, ஒருங்கிணைந்த எதிர்கட்சியின் தலைவரான தினேஷ் குணவர்தன, “ஒருங்கிணைந்த எதிரணி உறுப்பினர் எனும் வகையில், சபாநாயகர் கூறிய கருத்துகள் பொய்யானவை எனக் கூறிக்கொள்கிறேன். விமல் எம்பி. இது தொடர்பில் இதற்கு முன்னர் சுட்டிக்காட்டியிருந்தாலும் இதுவரை இதற்கு ஒழுங்கான ஒரு பதில் வழங்கப்படவில்லை” என்றார்.

இதனிடையே, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒரேடியாக எழுந்து நின்று கொண்டு சபையில் பெரும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். சபாநாயகர்,  அவர்களை அமைதியாக இருந்து சபை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பலமுறை கேட்டுக்கொண்டும் அவர்கள் தொடர்ச்சியாக கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர்.

“நான் வரலாற்றை பிழையாக்கி கருத்துத் தெரிவிக்கவில்லை. நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கமையவே நான் இந்த முடிவை கூறினேன்” என்றார்.

“கூட்டணியிலிருந்து இதற்கு முன்னர் கட்சிகள் பிரிந்து சென்றுள்ளன. அதற்கெல்லாம் அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் எமக்கு மட்டும் இப்போது ஏன் அனுமதி இல்லை?” என் விமல் வீரவன்ச தொடர்ச்சியாக எழுந்து நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். 

கௌரவம் முக்கியம்

இதனால், சபையில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டமையால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கௌரவத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் அறிவித்தார். எனினும் அவரது அறிவித்தலை கவனத்தில் எடுக்காத, விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட எதிரணியின் உறுப்பினர்கள் தொடர்ந்தும் உரத்த குரலில் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

“மிகவும் வெட்கமாக உள்ளது. தயவு செய்து அனைவரும் அமருங்கள. தினேஷ் எம்.பி, நீங்கள் ஒரு சிரேஷ்ட உறுப்பினர். நீங்கள் இவ்வாறு கூச்சலிடுவது ஏனையோருக்கு பிழையான முன்னுதாரணமாகிவிடும்”  என்று சபாநாயகர் பலமுறை அறிவித்தும் சபையில் கூச்சல் குழப்பம் ஓயவில்லை.

“நான், தீர்ப்பை அறிவித்து விட்டேன். இதுதான் இறுதித் தீர்ப்பு, சண்டித்தனத்தை என்னிடம் காட்டமுடியாது. அதற்கெல்லாம் நான் சளைத்தவன் அல்ல. எதிர்க்கட்சி உறுப்பினராக நான் இருந்தபோது, நான் கொண்டுவந்த தகவலறியும் சட்டமூலத்தை கொண்டுவராமல் விடச்செய்தவர்கள் நீங்கள்” என, தினேஷை சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் எழுந்த விமல் எம்பி., சபாநாயகரை நோக்கி, வெட்கமாக உள்ளது வெட்கமாக உள்ளது  என்று கூறி சபாநாயகரை நோக்கி நடந்துவர, அவரை பின்பற்றி  தினேஷ் எம்.பியும் எழுந்து வந்தார்.

ஒன்றுகூடி கதைத்தனர்

அவர்கள் சபையின் நடுவில் வந்தமையால் படைக்கல சேவிதர்களும் அவர்களுக்கு இருபுறமும் வந்து நின்று கொண்டனர். தொடர்ந்து அவையில் அமைதியின்மை ஏற்பட்டதால், சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்து, சபாநாயகர் அக்கிராசனத்திலிருந்து எழுந்து சென்றுவிட்டார். சபாநாயகர் சென்றதுடன், எதிரணி உறுப்பினர்கள் தத்தமது ஆசனங்களில் அமராது ஒன்றுகூடி கதைத்துக் கொண்டே இருந்தனர்.

ஒத்திவைக்கப்பட்ட சபை,  1.50 மணியளவில் மீண்டும் கூட்டியது.  நான் நிலையியற் கட்டளைகளின் படி தான் செயற்படுகிறேன். எனவே, உறுப்பினர்கள் அனைவரும் அமைதியாக இருக்கவும் என சபாநாயகர் வினயமாகக் கேட்டுக்கொண்டார். இதற்கு, “நாம் எமக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தான் கேட்கிறோம்” என்று விமல் எம்.பி., சபாநாயகரைப் பார்த்துக் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது, குறுக்கிட்டு ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத்பொன்சேகா, விமல் சிறையில் இருந்து வந்து கதைக்கின்றார். நான் கைது செய்யப்பட்டபோது நாடாளுமன்றக் குழு விவாதங்களில் கலந்து கொள்ளவே எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், விமலுக்கு மட்டும் எப்படி அனுமதி வழங்க முடியும் எனக் கேட்டார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், நீதிமன்றின் அனுமதியுடனேயே விமல் கலந்து கொண்டுள்ளார். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று விடயத்தை நகர்த்துவதற்கு முயன்றார்.

எனினும், சபையை அடுத்தகட்ட நடவடிக்கைக்கு கொண்டு செல்ல விடாதவாறு  தினேஷ், விமல் ஆகியோர் தொடரந்தும் கூச்சலிட்டனர். இதன்போது, கூச்சலிடுபவர்களை வெளியேற்றிவிட்டு சபை நடவடிக்கையை தொடருங்கள் என்று ஆளும் தரப்பு உறுப்பினரான ஹெக்டர் ஹப்புஹாமி, சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். 

அதன் போது குறுக்கிட்ட சபாநாயகர், நீங்கள் இவ்வாறு தொடர்ச்சியாக சபை நடவடிக்கைகளை முன்னெடுக்கவிடாமல் குழப்பிக் கொண்டிருந்தால் நான் நிலையியற் கட்டளைக்கு இணங்க உங்களை வெளியேற்ற வேண்டியேற்படும்.

2.25 மணியளவில் ஆரம்பமானது

தயவு செய்து இவ்விடயத்தைக் கேலியாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தார்.அதனைக் கவனத்தில் எடுக்காத தினேஷ் எம்.பி. உள்ளிட்டோர் தொடர்ந்து கூச்சலிட்டனர் 

இந்நிலையில், இரண்டாவது தடவையாக சபை அமர்வுகள் 2.10 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டு 2.30 மணிக்கு மீண்டும் சபை கூடியது. இதனையடுத்து, சபையில் மீண்டும் குழப்பம் ஏற்பட சபை அமர்வு  2.10 மணிக்கு 10 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் 2.25 மணியளவில் ஆரம்பமான சபை அமர்வுகளின் போது, தினேஷ் குணவர்தன தொடரந்த சத்தமிட்டு, வாதமிட்டார். 

இதன்போது, எழுந்த பந்துல குணவர்த்தன எம்.பி,  “நாம் கொலைகாரர்கள் அல்ல” உறுப்பினர்களின் உரிமைக்காகவே தினேஷ்  குரல் கொடுக்கிறார் என்றார்.

வழமைதானே

தினேஷ் எம்.பியும் எழுந்து நின்று, “பிரச்சினையொன்று ஏற்பட்டால் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படுவது தானே வழமை. ஏன், இவ்விடயத்தில் இன்று (நேற்று), அவ்வாறு எவ்வித கலந்துரையாடலும் நீங்கள் மேற்கொள்ளவில்லை” என்று சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு, “இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் நாம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடிவிட்டோம். இதற்கு மேல் கலந்துரையாட ஒன்றுமில்லை என்பதால் தான், நாம் விமலின் கோரிக்கை தொடர்பில் இவ்வாறானதொரு தீர்ப்பினை வெளியிட்டோம் என சபாநாயகர், தினேஷுக்கு பதில் வழங்க, மீண்டும் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.

இதனால் கோபமடைந்த சபாநாயகர், நான் இனி முடிவை மாற்றமாட்டேன். சொன்னது சொன்னதுதான். விமல் வீரவன்சவின் கட்சி நாடாளுமன்றில் தனித்து செயற்பட முடியாது என்றார்.

வாக்கெடுப்பு கோரினார்

சபாநாயகர் பல முறை கூறியும் கேட்காததால், தினேஷ் எம்.பியை வெளியேற்றுமாறு சபையின் படைக்கல சேவிதர்களுக்கு உத்தரவிட்டதுடன், பொலிஸாரை பயன்படுத்துமாறு கூறினார். அத்துடன் 2.40 மணியளவில் 3ஆவது முறையாக சபையை ஒத்திவைத்தார்.

சபை நடவடிக்கை 3.10 மணியளவில் மீண்டும் ஆரம்பமான போது, சபாநாயகரின் கட்டளையை மீறி, சபையில் இருந்தமையால்  சபை நடவடிக்கையில் பங்கேற்க தினேஷ் குணவர்தனவுக்கு ஒரு வார கால தடை விதிக்குமாறு, சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல கோரினார். அத்துடன் வாக்கெடுப்பு நடத்துமாறு கோரினார்.

அதனையடுத்து, உறுப்பினர்களின் பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது, இதன் போது, ஆதரவாக 85 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன்   மூன்று உறுப்பினர்கள் வாக்களிக்க விரும்பவில்லை. அத்துடன் 104 பேர் சமூகமளிக்கவில்லை.

இதனையடுத்து, சபை நடவடிக்கையில் கலந்துகொள்ள தினேஷ் குணவர்தன எம்.பிக்கு ஒரு வார கால தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஒன்றிணைந்த எதிரக்கட்சிகள் வெளிநடப்பு செய்வதாக தெரிவித்து வெளியேறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .