2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

‘தண்டனை வழங்குவதை மக்கள் எதிர்க்க மாட்டார்கள்’

George   / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

போரின்போது பாலியல் துஷ்பிரயோகம், படுகொலை போன்ற குற்றச்செயல்களில் படையினர் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதை நாட்டு மக்கள் எதிர்க்கமாட்டார்கள் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர  முன்னணியின் பொதுச்செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.  

நாடாளுமன்றத்தில், நேற்று நடைபெற்ற இலங்கைப் பொறியியற் பேரவை சட்டமூலம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.  

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,  

“இராணுவத்தினரை அரசியல் ரீதியான பழிவாங்கல்களுக்கு உட்படுத்துவதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருக்கிறார். அரசின் நிலைப்பாடும் இதுவாகவே இருக்கின்றுது. ஆனால், அவர்கள் ஒழுக்கமற்ற விதத்தில்- இராணுவ சட்டத்திட்டங்களுக்கு முரணான வகையில் செயற்பட்டிருந்தல் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.  
புலனாய்வாளர்கள் என்ற போர்வையைப் பயன்படுத்தி எவருக்கேனும் அநீதி இழைந்திருந்தால், குற்றமிழைத்தவர் இராணுவம் என்ற காரணத்துக்காக அரசாங்கம் அமைதியாக இருந்துவிடமுடியாது. அதற்கு எதிராக நடவடிக்கை அவசியம்.  
படையினரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் பலிகடாவாக்காது. அவர்களை பாதுகாப்பதற்காக தீவிரமாகச்செயற்படும்.  

மனிதநேயத்துடனேயே படையினர் யுத்தத்தை முடித்தனர் என நாம் நம்புகின்றோம். 99 சதவீதமான படையினர் ஒழுக்கமாகவேச் செயற்பட்டுள்ளனர். மீதமுள்ள 1 சதவீதத்தினர் தவறிழைத்திருக்கும் பட்சத்தில் நடவடிக்கை தேவை.  
பாலியல் வல்லுறவு, படுகொலை, ஊடகவியலாளர்கள் கடத்தில் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கப்படுவதை மக்கள் எதிர்க்கமாட்டார்கள்.  

அதேவேளை, இந்த நாட்டில் சலக மக்களுக்கும் சமஉரிமை வழங்கப்படவேண்டும். எவருக்கும் பாகுபாடுகாட்டப்படக்கூடாது” என்றார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .