2025 மே 16, வெள்ளிக்கிழமை

பிரதியமைச்சருக்கும் எம்.பி.க்கும் இடையில் கும்மாங்குத்து

Thipaan   / 2016 ஜூன் 21 , பி.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசணங்கள் பறந்தன
தளபாடங்கள் நடுங்கின
தடுத்தது சிவப்பு

 

அழகன் கனகராஜ்

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விவகாரம், அவையில் நேற்றுச் சூடுபிடித்து அணைந்திருந்த நிலையில், பிரதியமைச்சருக்கும் அவ்வணியின் உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் நாடாளுமன்றுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தக் கைகலப்பு விவகாரம் நாடாளுமன்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கைகலப்பில் ஈடுபட்டுக்கொண்ட இவ்விரு உறுப்பினர்களும் தூசணத்தை அள்ளிக் கொட்டி, அந்த இடத்தையே அதிரச்செய்து, அசிங்கப்படுத்தி விட்டனர்.

ஒருவரையொருவர் பதம்பார்த்துக் கொண்டதுடன், அவ்விடத்திலிருந்த மேசை, நாற்காலிகளையும் எட்டி உதைத்து, அட்டகாசம் புரிந்துள்ளனர் என அறியமுடிகிறது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதை அவதானித்த ஜே.வி.பி உறுப்பினர் உள்ளிட்டோர், இருவரையும் சமாதானப்படுத்தி, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகேயும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல வீட்டுத் தொகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை, ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியுள்ளனர்.

அந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது, மாதிவெல வீட்டுத் தொகுதியில் கறுப்பு நிறத்திலான டிபெண்டர் இருப்பதாகவும் அந்த டிபெண்டரைப் பயன்படுத்தியே கடந்த காலங்களில் ஆட்கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

ஊடகவியலாளர் மாநாட்டை முடித்துக்கொண்டு நாடாளுமன்றத்துக்குத் திரும்பும்போது, நாடாளுமன்றத்தின் இரண்டாவது மாடியின் 'லிப்ட்'க்கு அருகில் (மின்னுயர்த்தி), ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார

திஸாநாயக்க காத்திருந்துள்ளார்.

ஏககாலத்தில், பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவும் அவ்விடத்துக்கு வந்துள்ளார். வந்தவர், 'ஆமாம், ஆமாம். நீங்கள் இப்போது மஹிந்தானந்த அளுத்கமகேயைக் காப்பாற்றுவதற்கு முயல்கிறீர்கள் அல்லவா?' என்று வினவியுள்ளார். 'இல்லை, இல்லை. யாரையும் நாங்கள் காப்பாற்ற வேண்டியதில்லை' என்று அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துக் கொண்டிருக்கையில், லிப்ட் திறந்துவிட்டது.

உள்ளிருந்து வெளியேறிய மஹிந்தானந்த அளுத்கமகே, 'தேவையில்லாத வேலையைச் செய்துவிட்டீர்கள்' என்று, ரஞ்சன் ராமநாயக்கவைப் பார்த்துக் கேட்கையில், 'என்ன தேவையில்லாத வேலை? உண்மையைத் தானே கூறியிருக்கிறோம்? உங்கள் மனைவி கொடுத்த தகவலைத் தான் நாம் சொல்லியிருக்கிறோம்' என்றார். இதனையடுத்து, இவ்விருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் முற்றிப்போய், கைகலப்பு வரை வியாபித்துள்ளது. அதனை, அநுர குமார திஸாநாயக்க எம்.பி உள்ளிட்ட அங்கிருந்தவர்கள், தடுத்து நிறுத்திக் காப்பாற்றியுள்ளனர்.

இதேவேளை, தாங்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம் என்றும் கைகலப்பு வரை அது செல்லவில்லை என்றும், இவ்விருவரும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .