2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

விமலின் முடிவுக்கு ரணில் மகிழ்ச்சி

George   / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

விமல் வீரவன்சவின் முடிவையிட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுயாதீன குழுவாக அல்ல, சுயாதீன உறுப்பினர்களாகவே தேசிய முன்னணியின் உறுப்பினர்கள், நாடாளுமன்றத்துக்குள் செயற்படலாம் என்றும் குறிப்பிட்டார்.  

நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றுக்காலை 10:30க்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், விமல் வீரவன்ச எம்.பி ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினார்.  

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து தாம் விலகி விட்டதாகவும் தனது தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி எம்.பிக்கள் ஐவரையும் சபையில் தனித்து செயற்படுவதற்கு அனுமதிக்குமாறும் கோரிநின்றார்.  

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பில் சபையில் வாத பிரதிவாதங்கள் ஏற்பட்டது. இதன்போதே பிரதமர் ரணில் விக்கிமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

விமல் வீரவன்ச தனது ஒழுங்குப் பிரச்சினையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து விலகி விட்டோம். தேசிய சுதந்திர முன்னணியை சேர்ந்த ஐந்து பேரை சுயாதீனமாக செயற்படுவதற்கு அனுமதி வழங்குமாறு இதற்கு முன்பு சபையில் நான் கூறவில்லை என ஆளும் தரப்பினரும் சபாநாயகரும் குறிப்பிட்டிருந்தனர்.   

எனினும், 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 05 ஆம் திகதிய ஹன்சாட்டில், நான் இவ்வாறு கூறியதற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.  

எனவே, எம்மை சுயாதீனமாக செயற்படுவதற்கு இடமளிக்குமாறு கோரி பல மாதங்கள் கடந்துவிட்டன. எனினும் இதுவரையில் சபாநாயகரினால் தீர்வு வழங்கப்படவில்லை. இது பெரும் அநியாயம். எனவே சபாநாயகர் அவர்களே நீங்கள் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் தலைவராகும். ஆகவே கால தாமதம் ஆகாமல் தீர்வினை உடனடியாக வழங்க வேண்டும்.  

ஜனநாயக உரிமைகளுக்காக நீங்கள் மஞ்சள் நிறத்திலான, சால்வையை அணிந்திருந்தீர்கள் என்பதனையும் நான் அறிவேன்.   

ஏனென்றால் இந்த நாடாளுமன்றத்துக்கு என்ன நடக்கும் என்று தெரியாது. இந்த நாடாளுமன்றம் தொடர்ந்து செல்லுமா என்பது சந்தேகமாகும். பிரதமருக்கு என்ன நடக்க போகின்றது என்பது தெரியாது. ஆகவே தாமதம் இன்றி தீர்வு வேண்டும் என்றார்.  

இந்த சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட சபாநாயகர் கரு ஜயசூரிய கூறுகையில்,  

“இது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவசரமாக தீர்மானம் எடுக்க முடியாது. எவ்வாறாயினும் இந்த பிரச்சினையை புறக்கணிக்க மாட்டேன். இதற்கு தீர்வினை வழங்குவேன்” என்றார்.  
எனினும் இதன்போது குறுக்கிட்ட தினேஷ் குணவர்தன எம்.பி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு யாப்பில் தேசிய சுதந்திர முன்னணி கட்சி இல்லை. ஆகவே அம்முன்னணியை சுதந்திரமாக இயங்குவதற்கு இடமளிக்க வேண்டும்” என்றார். 

குறுக்கிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  

ஐ.ம.சு.மு கூட்டணியில் இவர்கள் விலகுவதாக இருந்தால் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஐவரை சுயாதீன பிரதநிதிகளாக கருத முடியும். எனினும் எந்தவொரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. இதன்மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் செயற்படுவதற்கு விருப்பமில்லை என்பதனை விமல் வீரவன்ச கூறியுள்ளார். விமல் வீரவன்ச அவ்வாறான முடிவுக்கு வந்ததையிட்டு தான் மகிழச்சி அடைவதாக பிரதமர் கூறினார்.  

இதற்கு பதிலளித்த விமல் வீரவன்ச, நாங்கள் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தை எதிர்க்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகிக்கும் கூட்டு எதிரணிக்கு பக்கபலமாக இருக்கவுள்ளோம் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .