Editorial / 2026 ஏப்ரல் 27 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் எனத் திவ்யா சத்யராஜ் தெரிவித்த கருத்தை, அவரது தந்தை சத்யராஜும் ஆமோதித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "திருமணம் என்பது கட்டாயமில்லை," என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஊட்டச்சத்து நிபுணரும், திமுகவில் களப்பணியாற்றி வருபவருமான திவ்யா சத்யராஜ், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "ஒரு ஆணும் பெண்ணும் 'திருமணம் செய்துவிட்டோமே' என்பதற்காக ஒன்றாக வாழக் கூடாது; அவர்களுக்குள் காதல் இருக்க வேண்டும். எனக்கு ஜாதகம் பார்த்து, ஒரே மதத்தில் நடக்கும் திருமணங்கள் மீது நம்பிக்கை இல்லை. ஒருவருக்கொருவர் பிடித்து இருந்தால் யாருடன் வேண்டுமானாலும் வாழலாம்; ஒரே வீட்டில் சேர்ந்து வாழ வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. சொல்லப்போனால், திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்வதில் எனக்குச் சம்மதமே," எனத் தெரிவித்திருந்தார்.
இவரது இந்தக் கருத்துக்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்வது நமது கலாச்சாரத்திற்கு உகந்ததல்ல என்பது எதிர்ப்பாளர்களின் வாதமாக உள்ளது. "உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் அதை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்; பொதுவெளியில் இதைப் பகிரும்போது இளம் தலைமுறையினர் தவறாக வழிநடத்தப்பட வாய்ப்புள்ளது," எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனது மகளுக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: "என் மகள் திவ்யா திருமணம், ஜாதி, மதம் மற்றும் சடங்குகள் குறித்து ஒரு பேட்டி அளித்திருந்தார். அதற்குப் பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்திருந்த நிலையில், என்னிடம் கருத்து கேட்டார்கள். நான் ஒரு தீவிர பெரியாரியவாதி; எனக்கு ஜாதி, மதம் மற்றும் சடங்குகளில் உடன்பாடு இல்லை. திருமணம் என்பது கட்டாயமில்லை; அது தனிநபரின் விருப்பத்தைச் சார்ந்த விஷயம். ஒருவர் திருமணம் செய்வது, விவாகரத்து பெறுவது அல்லது தனியாக வாழ்வது என்பது அவரவர் உரிமை.
அதேபோல், திருமணம் இல்லாமலேயே ஒரு குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, இன்றைய மருத்துவ வளர்ச்சியில் அதற்கான வாய்ப்புகள் உள்ளன. அது சரியாக அமையலாம் அல்லது அமையாமலும் போகலாம்; ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, இந்த விடயங்களில் நான் திவ்யாவுடன் உடன்படுகிறேன்," எனத் தெரிவித்துள்ளார்.
தந்தையின் இந்த ஆதரவு குறித்து நெகிழ்ச்சி அடைந்துள்ள திவ்யா, "எனது பேட்டி வைரலான நிலையில், அப்பா என்னை நம்புகிறார். நான் சொன்ன கருத்துகள் சரியா, தவறா என வேறு யாரும் எனக்குச் சான்றிதழ் (Certificate) கொடுக்கத் தேவையில்லை," எனக் குறிப்பிட்டுள்ளார்.
32 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
36 minute ago
2 hours ago