.jpg)
வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது இப்போது வழமையாகிவிட்டது. அது பெரிய சவாலான விடயமும் கூட. சில வெற்றிப்படங்களின் இரண்டாம் பாகம் தோல்வியடைந்த வரலாறுகள் தமிழ் சினிமாவுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனாலும், தமிழ் சினிமா வரலாற்றில் பொலிஸ் கதையினை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட சிங்கம் முதலாம் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் உருவாகியிருப்பது சற்று வித்தியாசமானது. ஏனெனின் சிங்கம் இரண்டாம் பாகமும் ரசிகர்களின் மனதினை பெருமளவில் கவர்ந்திருப்பதே சிறப்பானதாகும். சிங்கம் படத்தை இயக்கிய ஹரி, மீண்டும் சிங்கம் பாகம் இரண்டில் சூர்யாவுடன் கூட்டு சேர்ந்துள்ளார்.
படம் தொடங்கியதும் எழுத்தோட்டத்திலேயே சிங்கம் பாகம் ஒன்றின் முக்கிய காட்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். இது, பாகம் இரண்டின் தொடர்ச்சிக்கு ஆரம்பமாக அமைந்திருக்கிறது.
முதல் பகுதியில் பொலிஸ் வேலையை ராஜினாமா செய்வதுபோல நாடகமாடிவிட்டு, என்சிசி (தேசிய பாதுகாப்பு கற்கை நெறி) வாத்தியார் வேடத்தில் தூத்துக்குடியில் தங்கி சமூக விரோதிகளின் ஆயுதக் கடத்தலைக் கண்காணித்து வருகிறார் சூர்யா. அப்போதுதான் தெரிகிறது கடத்தப்படுவது ஆயுதங்கள் அல்ல, பெருமளவு போதைப் பொருள்கள் என்ற உண்மையும், அதில் உள்ளூர் தாதாக்கள் இருவருடன் வெளிநாட்டு கடத்தல்காரன் டேனியின் பங்கு இருப்பது. ஆனால் உள்ளூர் பொலிஸாருக்குள் ஏகப்பட்ட துரோகிகள் இருப்பதையும் துரைசிங்கமான சூர்யா இனம்காண்கிறார். இந்த சவால்களை எப்படி சமாளித்து, மீண்டும் பொலிஸாக பதிவியேற்றி எதிரிகளை இல்லாதொழிக்கிறார் என்பதுதான் கதைச் சுருக்கம்.
ஆரம்ப பாடல் கடலுக்குள் அசத்தலாக எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பாடலுடனேயே உளவு பார்க்கும் சூரியாவுக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறால் இயக்குநர் ஹரி. அதனைத் தொடர்ந்து கள்ளக்கடத்தலில் ஈடுபடும் கூட்டத்தினை கண்காணித்து, பொலிஸாருக்கு தெரிவுபடுத்தியும் நடவடிக்கை எடுக்காத பொலிஸாரைக் கண்டு கொதித்தெழுகிறார் சூர்யா. பொலிஸாருக்கு தெரியப்படுத்திய விடயத்தை உடனடியாக கடத்தல் காரர்களுக்கு தெரிவிக்கும் பொலிஸாரின் கபடத்தனத்தினால் சூர்யாவை கொல்வதற்காக விரட்டுகிறார்கள் கடத்தல்காரர்கள். தன் முகத்தை மறைத்து அவர்களை துவம்சம் செய்கிறார் சூர்யா. இதுதான் சிங்கம் பகுதி இரண்டின் ஆரம்பம்.
இதற்கிடையில் கதைக்கு சுவாரஸ்யம் சேர்க்க என்சிசி வாத்தியாராக பணியாற்றும் பாடசாலையிலேயே பிளஸ்2 மாணவியாக ஹன்சிகா. பாடசாலை சீருடையில் இருந்தாலும் வாத்தியாரை விழுந்து விழுந்து காதலிக்கிறார். ஆனால் சூர்யாவுக்காக காத்திருக்கிறார் அனுஷ்கா. படத்தின் கதை என்னமோ சாதாரண ஆக்ஷன் மசாலாதான். ஆனால் சூர்யாவின் அசாதாரண நடிப்புதான் இந்தப் படத்தின் ப்ளஸ். அதே நேரம் எதற்கெடுத்தாலும் அவரை சிங்கம் மாதிரி உறும வைத்திருப்பதும், ஒரு மாநில பொலிஸே துரைசிங்கம் என்ற ஒற்றை அதிகாரிதான் என்பது போல சித்தரித்திருப்பதும் கொஞ்சமல்ல, ரொம்ப ரொம்ப ஓவர். அதுவும் தென்னாப்பிரிக்காவுக்குள் போன பிறகு, அந்த நாட்டுப் பொலிஸுக்கே தெரியாத இடத்திலெல்லாம் பாய்ந்து பாய்ந்து வில்லனை வீழ்த்துவது சிரிப்பு பொலிஸாக்கிவிட்டது. தென்னாபிரிக்காவில் நடக்கும் ஒரு சண்டைக் காட்சியில் சூர்யா போத்தலினால் வில்லன்களை தாக்குவார். அப்போது திகைத்துப் போகும் தென்னாபிரிக்க பொலிஸார் 'இதுதான் இந்தியன் பொலிஸ் தந்திரம்' என்று வியப்பதுபோலவும் வசனங்கள். படத்தின் தலைப்பு சிங்கம் என்று வைத்துவிட்டதாலோ என்னமோ, சண்டைக் காட்சிகளிலெல்லாம் சூர்யா பாய்ந்து பாய்ந்து தாக்குகிறார். சிங்கம் நகங்களால் கிழிப்பது போல கிராபிக்ஸ் வைத்திருக்கிறார்கள்.
பள்ளி மாணவி ஹன்சிகாவின் மாமா தான் கடத்தலுக்கு உதவுகின்ற பெரும் புள்ளி. ஆகையினால் மாமா பற்றி அறிவதற்காக ஹன்சிகாவுடன் நட்பாக பழகுகிறார் சூர்யா. இதனை கேள்விப்பட்ட அனுஷ்கா, கோவப்பட்டு சூர்யாவிடம் சண்டை பிடிக்கையில் நாசுக்காக தனது நியாயத்தினை சொல்லி சமாளித்து விடுகிறார். இவ்விடத்தில் கதையினை அழகாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஹரி. இப்படத்தினைப் பொறுத்தமட்டில் சூர்யாவின் உழைப்பு உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது. மனிதர் இதுவரை இல்லாத அளவு அழகு - கம்பீரமாகக் காட்சி தருகிறார். சில காட்சிகள் மிகை என்றாலும் கூட அவரது நடிப்பால் அதை நம்ப வைத்திருக்கிறார். ஊரையே கலாய்க்கும் சந்தானத்தை சமயம் கிடைக்கும்போதெல்லாம் பக்கி பக்கி என வறுத்தெடுக்கிறார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அசத்துகிறார் சூர்யா. அவரது உடல் மொழி, அபார முயற்சி காரணமாக, நீள நீளமான சண்டைக் காட்சிகளைக் கூட ஆர்வம் குறையாமல் ரசிகர்கள் பார்த்து கைத்தட்டுகிறார்கள். என்சிசி உடையிலிருந்து பொலிஸ் சீருடைக்கு அவர் மாறும் காட்சியும், டேனியைப் (பிரதான தென்னாபிரிக்க வில்லன்) புரட்டி எடுக்கும் காட்சிகளிலும் முறுக்கேற்றுகிறார். இதற்கு முன் இல்லாத அளவு நடனக் காட்சிகள்... டபுள் உற்சாகத்துடன் கலக்கலாக ஆடியிருக்கிறார் சூர்யா. இரண்டு ஹீரோயின்களில் அனுஷ்காதான் சூர்யாவுக்கு ஜோடி. ஆனால் இதிலும் இருவருக்கும் திருமணம் ஆகாமலே படம் முடிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாகத்துக்கு அடிபோட்டிருக்கிறார்கள் போல. சிங்கம் டான்ஸ் பாட்டுக்கு அனுஷ்கா ஆட, பார்ப்பவரின் மனசும் கூடவே அல்லாடுகிறது.
ஹன்சிகாவை ப்ளஸ்டூ மாணவியாகக் காட்டுவதெல்லாம் டூ டூ மச். அவர் சூர்யா மீது வைக்கும் காதலில் அழுத்தமில்லாவிட்டாலும், அந்தப் பாத்திரத்தின் முடிவு ரசிகர்களிடம் அனுதாபத்தை தேடிக் கொள்கிறது. இன்ஸ்பெக்டர் எரிமலையாக வரும் விவேக்கும், சூசையாக வரும் சந்தானமும் சிரிக்க வைக்க ரொம்பவே முயற்சிக்கிறார்கள். இருவரில் சந்தானத்துக்கு வாய்ப்பு அதிகமும் கூட. விவேக்கும் குறை வைக்கவில்லை. சந்தானத்தின் இரட்டை அர்த்த நகைச்சுவைகள் திரையரங்கை அதிர வைக்கிறது. சர்வதேச போதை மருந்து கடத்தல்காரன் டேனியாக வரும் ஹொலிவுட் நடிகர் டேனி சபானி மிரட்டலாக அறிமுகமாகிறார். ஆனால் ரொம்ப சவசவவென முடிகிறது அவரது க்ளைமாக்ஸ். மிகப்பெரிய வில்லனை அசால்டாக முடித்துக்கட்டுகிறார் சூர்யா. இது கொஞ்சம் ஓவர்தான். மன்சூர் அலிகான், நாசர், ராதாரவி, ரகுமான், வசீம் கான், விஜயகுமார்... எல்லோருமே தங்களுக்கு கொடுத்த வசனங்களை ஒப்பித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
ப்ரியனின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவில் உப்பளங்களும், கப்பல் சண்டைக் காட்சிகளும், அந்த ஏரியல் ஷொட்களும் படத்துக்கு புதிய நிறத்தைத் தருகின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உன் கண்ணுக்குள்ள... பாட்டு மட்டும் ஆட வைக்கிறது. அதுவும் சிங்கம் படத்தில் இடம்பெற்ற காதல் வந்தாலே சாயல்தான். மற்றவை சொல்லும்படி இல்லை. படம் இரண்டரை மணி நேரத்தினையும் தாண்டி ஓடுகிறது. இடைவேளையே இவ்வளவு நீளமா என்ற ஆயாசம் வருவது உண்மைதான். எடுத்த காட்சிகள் எதையுமே வெட்ட ஹரிக்கு மனசில்லை போலும். ஆனாலும் ஆக்ஷன், ரொமான்ஸ், சிரிப்பு, நல்ல லொகேஷன்கள் என பொழுதுபோக்குக்கு குறை வைக்கவில்லை ஹரி என்பதால், படத்தை ரசிக்க நீளம் ஒரு தடையாக இருக்காது! சிங்கத்தின் உறுமல் கொஞ்சம் ஓவராக இருந்தாலும் சூர்யாவுக்காக இந்தப் படத்தை பார்க்கலாம்!
இலங்கையில் ஈஏபி தியேட்டர் சார்பில் தெஹிவளை கொன்கோட் திரையரங்கில் திரையிடப்பட்ட நாள்முதல் அரங்கு நிறைந்த காட்சியாக சிங்கம் பாகம் இரண்டு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய திரையரங்குகளிலும் ரசிகர்களின் வரவுக்கு குறைச்சலில்லாமல் படம் வெற்றிநடை போடுகிறது.