Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் திரையுலகின் மூலம் காதலுக்கு தனி இலக்கணம் வகுக்கும் திரைப்படங்களைத் தந்த பெருமையுடைய நடிகர் முரளி தனது 47ஆவது வயதில் இன்று காலை உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக சென்னை, போரூர் ராமச்சந்திரா வைத்தியசாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்ட வழியிலேயே உயிர் பிரிந்துள்ளது.
1984ஆம் ஆண்டு கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில், அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் முரளி. இவரது தந்தை சித்தலிங்கையா, பிரபலமான கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய வெற்றி நாயகர்கள் வரிசையில் இணைந்த குறிப்பிடத்தக்க நடிகர் முரளி. முதல் படமே சூப்பர்ஹிட் ஆனதால் வெற்றிப் பட நாயகனாக உருவெடுத்தார். தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்தார். காதல் படங்களுக்குத் தனி இலக்கணம் வகுத்தவை முரளி நடித்த படங்கள்.
பகல் நிலவு, இதயம், அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, சொன்னால்தான் காதலா, இரணியன், சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் அவர் நடித்துள்ளார். முரளியின் நடிப்பில் வெளியான புது வசந்தம், இதயம் ஆகியன மிகப் பெரிய வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் படங்களாகும். குறிப்பாக புது வசந்தம் தமிழ்த் திரையுலகில் புதிய வரிசைப் படங்களுக்கு இலக்கணம் வகுத்தது. இதயம் திரைப்படத்தில் காதல் சொல்லப்பட்ட விதமும், முரளியின் நடிப்பும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அத்துடன், சிவாஜி கணேசன், சரத்குமார், விஜயகாந்த், பிரபு என தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் முரளி.
பாணா காத்தாடி தவிர தனது படங்கள் அனைத்திலும் ஹீரோவாகவே நடித்த பெருமைக்குரியவர் முரளி. முரளியின் தந்தை கன்னடர் என்றாலும், அவரது தாய் ஒரு தமிழ்ப் பெண். இதனால் பிறந்தது பெங்களூர் என்றாலும் சுத்தத் தமிழராக இருந்தவர். அவரது மகன் அதர்வாவை சமீபத்தில் ஹீரோவாக்கி அழகு பார்த்தார் முரளி. அவர் ஹீராவோக நடித்த முதல் படமான பாணா காத்தாடியில் முரளியும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மகன் நடித்த முதல் படமே முரளியின் கடைசிப் படமாக அமைந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாயகனாகிவிட்ட மகன் குறித்து சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் உரையாடியிருந்த முரளி, "30 வருட திரையுலக வாழ்க்கையில் நான் ஆயிரம் தவறுகள் செய்திருக்கிறேன். அதையெல்லாம் மன்னித்து தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொண்டார்கள். என் மகன் அதர்வாவிடம், தயாரிப்பாளர்களை மதிக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லியிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் "பகல் நிலவு", "இதயம்" படங்களில் நடித்தேன். அதே நிறுவனம் என் மகனை ஹீரோவாக அறிமுகம் செய்துள்ளமை சந்தோஷத்துக்குறியது. "பூவிலங்கு" படத்தில் நான் நடித்திருந்ததை விட அதர்வா சிறப்பாக நடித்திருக்கிறான். எனக்கு நடனமாடவே வராது. ஆனால், அதர்வா நன்றாக நடனமாடியிருக்கிறான். ஒரு நடிகன் மகன் ஹீரோவாக ஜெயிப்பது கஷ்டம். இங்கு வந்திருந்தவர்கள், அதர்வாவை பாராட்டினார்கள். எனவே அவன் ஜெயித்து விடுவான் என நம்புகிறேன்" என்று கூறியிருந்தார்.
முரளியின் நடிப்பில் வெளியான படங்கள் :-
பூவிலங்கு, பகல் நிலவு, தங்கமணி ரங்கமணி, புது வசந்தம், பாலம், வெற்றி மலை, சிலம்பு, நானும் இந்த ஊருதான், நாங்கள் புதியவர்கள், சிறையில் சில ராகங்கள், புதிய காற்று, நம்ம ஊரு பூவாத்தா, சாமி போட்ட முடிச்சு, இதயம், குறும்புக்காரன், தங்க மனசுக்காரன், சின்ன பசங்க நாங்க, தங்கராசு, என்றும் அன்புடன், தாலி கட்டிய ராசா, மணிக்குயில், தங்க கிளி, மஞ்சு விரட்டு, அதர்மம், என் ஆசை மச்சான், சத்யவான், ஆகாய பூக்கள், தொண்டன்,பொம்மை, காலமெல்லாம் காதல் வாழ்க, போர்க்களம், ரோஜா மலரே, காதலே நிம்மதி, தினந்தோறும், வீர தாலாட்டு, ரத்னா, பூந்தோட்டம், என் ஆசை ராசாவே, உன்னுடன், தேசிய கீதம், பூவாசம், கனவே கலையாதே, ஊட்டி, இரணியன், வெற்றி கொடி கட்டு, மனு நீதி, கண்ணுக்கு கண்ணாக, சொன்னால்தான் காதலா, ஆனந்தம், சமுத்திரம், அள்ளித்தந்த வானம், கடல் பூக்கள், சுந்தரா டிராவல்ஸ், காமராசு, நம்ம வீட்டு கல்யாணம், காதலுடன், அறிவுமணி, பேசா கிளிகள், எங்க ராசி நல்ல ராசி, நீ உன்னை அறிந்தால், பாணா காத்தாடி போன்றன படங்கள் முரளியின் நினைவாக விட்டுச்செல்லப்பட்ட படைப்புக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
27 minute ago
1 hours ago