2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஷங்கரின் அடுத்த பிரமாண்டம் 'ஐ'

Menaka Mookandi   / 2012 ஜூன் 22 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியத் திரையுலகின் பிரமாண்டங்களைக் கொடுத்துவரும் இயக்குனர் ஷங்கர், தனது அடுத்த பிரமாண்டத்துக்கு வித்தியாசமாக 'ஐ' எனப் பெயர் சூட்டியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஷங்கருடன் இணைபவர் விக்ரம்.

தேர்தல் முறைகேடுகள் பின்னணியில் இந்த திரைப்படம் உருவாகவிருப்பதாக சொல்லப்படுகிறது.  படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் இந்த திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.  திரைப்படத்தின் கதாநாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த திரைப்படத்துக்காக அவர் மணிரத்னத்தின் திரைப்படத்தை துறந்ததோடு, மொத்தமாக கோல்ஷீட்டை கொடுத்துள்ளாராம்.

இந்த திரைப்படத்தில் இன்னொரு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகனும் பிரபல தயாரிப்பாளருமான ராம்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதே. ராம்குமார் இதற்கு முன் அறுவடை நாள் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு நடிக்கவில்லை.

இந்த திரைப்படத்தின் இன்னொரு பிரதான கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி நடிக்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுடன் முதல்முறையாக ஷங்கர் இணையும் திரைப்படம் இது. நகைச்சுவைக்கு சந்தானம் கை கோர்க்கிறார்.

ஐ என்பதற்கு - ஐந்து என்பதைத் தவிர, அழகு, அரசன், ஆசான், வியப்பு, மேன்மை, எழுத்து, எசமானன், நுண்மை, அம்பு, ஐயம் என பல பொருள்கள் உள்ளன. இவற்றின் கலவையாக இந்த திரைப்படம் உருவாகிறது, என செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாராகும் இந்ததிரைப்படத்தில் மென் இன் பிளாக் சீரிஸ் படங்களில் பணிபுரிந்த மேரி வாட், கதாபாத்திரங்களுக்கு பிரத்யேகமான உடைகளை வடிவமைக்கிறார்.

ஹரிபொட்டர் சீரிஸ் திரைப்படங்களில் பணியாற்றிய அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ரைசிங் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பகுதிகளை உருவாக்குகிறது. ஹொலிவூட் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த பல முன்னணி கலைஞர்களும் இந்த திரைப்படத்தில் பணிபுரிகிறார்கள். சண்டைக் காட்சிகளை அனல் அரசுவும், சீனாவைச் சேர்ந்த பீட்டர் மிங்கும் இணைந்து அமைக்கிறார்கள்.

இது அரசியல் படம் அல்ல. ரொமான்ட்டிக் த்ரில்லர் என்று கூறியுள்ளார் இயக்குநர் ஷங்கர். படத்தின் படத்தொகுப்புப் பணியை ஆண்டனி ஏற்றுள்ளார். இந்த படத்துக்கு வசனம் எழுதுவதன் மூலம் இரட்டை எழுத்தாளர்கள் சுபா முதல் முறையாக ஷங்கருடன் இணைகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X