2025 மே 20, செவ்வாய்க்கிழமை

காதுகளால் பார்க்கும் டேனியல் கிஷ்ஷிடம் தாண்டவத்துக்கான பயிற்சி பெற்ற விக்ரம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 14 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


பார்வைத்திறன் இழந்துவிட்டால், இருட்டிலேயே வாழ வேண்டியதுதான் என்ற தியரியை உடைத்திருக்கிறார் டேனியல் கிஷ். இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.

'எக்கோ லொகேஷன்' என்ற புதிய உத்தி மூலம், தன் காதுகளையே கண்களாக்கி, கண் தெரியும் சாதாரண மனிதர்களைப் போல மலைகளில் நடக்கிறார். அருவியோரங்களை சர்வ சாதாரணமாகக் கடக்கிறார். வாகனங்கள் ஓட்டுகிறார்.

இவரைப்பற்றி அறிந்து, நேரடியாக அமெரிக்கா போய் பேசி, தனது தாண்டவம் திரைப்படத்தில் கண் தெரியாதவராக நடிக்கும் விக்ரமுக்கு பயிற்சி கொடுத்தார்களாம். இத்திரைப்படத்திலும் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார் டேனியல் கிஷ்.

திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக சென்னை வந்த டேனியல் கிஷ், செய்தியாளர்களிடம் கூறியதாவது,

'நான், அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசிக்கிறேன். 7 மாத குழந்தையாக இருந்தபோது, நோயொன்று தாக்கியதில் ஒரு கண்பார்வை பறிபோனது. 13ஆவது மாதத்தில் இன்னொரு கண்பார்வையும் பறிபோனது. சத்திர சகிச்சை மூலம் இரண்டு கண்களையும் எடுத்து விட்டார்கள். என்றாலும், என் பெற்றோர்கள், எனக்கு தாழ்வுமனப்பான்மை ஏற்படாதவாறு, சுதந்திரமாக வளர்த்தனர்.

18ஆவது வயதில், எல்லா அமெரிக்க இளைஞர்களையும் போல் நானும் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். வெளவால்களைப் போல் காதுகளால் பார்க்கும் திறனை வளர்த்துக்கொண்டு, என்னை நானே கவனித்துக்கொண்டேன். இப்போது கண் பார்வையற்றவர்களுக்காக ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். அதன் மூலம் காதுகளால் பார்க்கும் திறனை, பல நாடுகளுக்கும் சென்று கற்றுக்கொடுக்கிறேன்.

'தாண்டவம்' திரைப்படத்தில் என்னைப் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் விக்ரம் நடிப்பதாக கேள்விப்பட்டதும், சந்தோஷப்பட்டேன். எப்படி நடப்பது, எப்படி ஒலி அலையை காதுகளால் வாங்குவது என்பது பற்றி விக்ரமுக்கு பயிற்சி அளித்தேன். சில நாட்களிலேயே அவர் நன்றாக கற்றுக்கொண்டார்.

நான், அவரை மாணவராகத்தான் பார்த்தேன். நடிகராக பார்க்கவில்லை. விக்ரமின் செல்லப்பெயர், 'கென்னி' என்று கேள்விப்பட்டேன். 'தாண்டவம்' திரைப்படத்தில் அதே பெயரில்தான் நடித்து இருக்கிறார். நான், நானாகவே நடித்து இருக்கிறேன்.

கண் பார்வையற்ற ஒருவர், காதுகளையே கண்களாக பயன்படுத்தி, தனது வாழ்க்கையை சிதைத்தவர்களை பழிவாங்கும் கதையம்சம் கொண்ட திரைப்படம் இது. இதில், கண்பார்வையற்றவராக விக்ரம் நடித்திருக்கிறார்' என்றார்.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X