2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விஷ்வரூபம்: ஒரு நடுநிலைப் பார்வை

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 14 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் அதிக கவனம் பெற்ற விஸ்வரூபம் திரைப்படத்தை சென்னை 'வூட்லன்ட'; திரையரங்கில் முதல் நாளன்றே பார்க்க முடிந்தது. பெரும் விமர்சனத்திற்குள்ளான இத் திரைப்படத்திற்கான டிக்கெட்டுக்களை பெறுவது குதிரைக் கொம்பாகவே இருந்தது.

தமிழ்நாடு முழுவதும் ரஜினிகாந்த் படத்திற்கு இருக்கும் வரவேற்பை கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கும் தமிழ் ரசிகர்கள் வழங்கியிருந்தமைக்கு இத்திரைப்படம் தொடர்பாக எழுந்த எதிர்ப்புகளும் அரசியல் ஊடுறுவல்களுமே காரணம் எனலாம். இதற்காக முஸ்லிம் அமைப்புகளுக்கும், ஜெயலலிதாவிற்கும் கமல் ரசிகர்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

நேற்றைய தினம் இலங்கையில் 'கொண்கோட்' அரங்கில் இரண்டாவது முறையாகப் பார்த்தேன். இந்தியத் திரையரங்கில் திரைப்படத்தின் வசனங்களைவிட ரசிகர்களின் கூச்சல் சப்தமே மேலோங்கியிருந்தமையால் இரண்டாவது முறை பார்க்க வேண்டியதாயிற்று (சும்மா கத விடாத. படம் புரியாமத்தானே ரெண்டாவது முறை பார்த்தே).

இரு நாட்டு திரையரங்கிலும் பார்த்தபடியால் சர்ச்சைக்குரிய காட்சிகள் நாட்டுக்கு நாடு வித்தியாசப்பட்டதையும் உணர முடிந்தது. 7 காட்சிகள் நீக்கப் படுகின்றன என்பதாகச் சொல்லியிருந்தார்கள். ஆனால் தமிழகத் திரையரங்குகளில் சில அரபு மற்றும் தமிழ் வசனங்கள் மட்டுமே நீக்கப்பட்டிருந்தன. இலங்கைத் திரையரங்கில் அவை கூட நீக்கப்படாமலே இருந்தன.

அமெரிக்கக் கைதியின் கழுத்து அறுப்புக் காட்சியில் ஓரிரு பிரேம்கள் மேலதிகமாக இலங்கைத் திரையரங்குகளில் வெட்டப்பட்டிருந்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் காட்சிகளோ, ஒலியோ நீக்கப்பட்டதனால் படத்தின் வீரியத்திலோ, படம் ஏற்படுத்தும் பாதிப்பிலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதுதான் நிஜம்.

குறிப்பாக தலிபான் தீவிரவாதி உமர் கோவையிலும், மதுரையிலும் பதுங்கியிருந்ததாக சொல்லப்படும் வசனமும், குர்ஆன் வசனங்களும், நாசர் அரபு மொழியில் கூறும் 'அரேபியர் அல்லாதவர்களை வெளியேற்ற வேண்டும' என்ற வசனமும் தமிழகத் திரையரங்கில் நீக்கப்பட்டிருந்த போதும், அக்குறித்த வசனங்கள் ஏற்கனவே திரைப்பட எதிர்ப்பாளர்களாலும், விமர்சகர்களாலும் இணையத்தளங்களிலும், ஊடகங்களிலும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டதனால் அக்காட்சியின் போது ரசிகர்கள் அனைவரும் இந்தக் காட்சியில் இன்ன வசனம்தான் சொல்லப்படுகிறது என்பதை புரிந்து கொண்டார்கள்.

பலரும் அக்காட்சிகளின் போது தமக்குள்ளும், நண்பர்களுக்குள்ளும் அவ்வசனங்களை சொல்லிக்காட்டினார்கள். ஆக இத்திரைப்படத்தின் எதிர்ப்பின் காரணமாக நீக்கப்படுவதாக 24 கூட்டமைப்பினால் அறிவிக்கப்பட்ட 7 காட்சிகளும், வசனங்களும்தான் விஸ்வரூபம் திரைப்படத்தில் அனைவராலும் புரிந்து கொள்ளப்பட்ட விடயங்களாகும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். திரைப்படத்தின் ஏனைய காட்சிகளோ, திரைப்படமோ புரியவில்லை என்று விமர்சிக்கும் எல்லோருக்கும் நீக்கப்பட்ட காட்சிகளும், வசனங்களும் மட்டும் உறுதியாக விளங்கிக்கொள்ள முடிந்ததும், பலராலும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப்படமாகியதும், திரையரங்குக்கே செல்லாத முஸ்லிம், தமிழ் மக்களனைவரையும் திரைப்படம் நோக்கி நகர்த்தியதும்தான் இத்திரைப்படத்திற்கு உண்டான எதிர்ப்பினால் ஏற்பட்ட விளைவுகளாகும். ஆக முஸ்லிம்களின் 24 கூட்டமைப்பினர் மிக முக்கியமான விளம்பரப் புரட்சியை இத்திரைப்படத்தின் மூலம் புரிந்துள்ளதோடு கமல்ஹாசனின் சொத்துக்கள் அனைத்தும் அவரிடமே திரும்பக் கிடைப்பதற்கு வழிவகை செய்திருக்கிறார்கள்.

கமல்ஹாசன் அவர்களே!
உங்களது மேலதிக வருமானத்தில் முஸ்லிம்களின் 24 கூட்டமைப்பினர், 24 கூட்டமைப்புக்குள் அடங்காத மற்றுமொரு 25ஆவது முஸ்லிம் அமைப்பான பீ.ஜேயின் 'தௌகீத் ஜமாத்', எழுத்தாளர் மனுஸ்ஷ புத்திரன், இயக்குநர்கள் செல்வமணி, விக்ரமன் உள்ளிட்ட திரையுலகத்தினர் என பெரும்பாலானோருக்கு பங்கு கொடுக்க வேண்டியிருக்கிறது. மேலும் உங்களுக்காக குரல் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, ஏதேதோ உளரி இன்று நடிகர் சங்கத்திடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் நடிகர் விஷால் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது?

இவற்றையெல்லாம் நீங்கள் யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். ஏனென்றால் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் விஸ்வரூபம் 2ஐ ரிலீஸ் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு படத்தின் பாதியை மட்டும் பார்த்த ரசிகர்கள் மீதியைப்பார்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே வருமா? வராதா? என்ற கவலை மக்களுக்கு.

பின்னர் என்னென்ன காட்சிகள் நீக்கப்பட்டிருக்கும் என்ற கவலை? அதன் பின்னர் படத்தின் இடைவேளை வரை காண்பித்துவிட்டு இடையில் நிறுத்திய தமிழக பொலிஸ்காரர்களால் உண்டான கவலை, மேலும் தொடர் குழப்பங்களால் நீங்கள் நாட்டை விட்டுபோகப் போவதாக சொன்னபோது ஏற்பட்ட பெரும் கவலை என தொடர்ந்து தமிழக மக்கள் கவலையில் தோய்ந்திருந்த நிலையில், விஸ்வரூபம் படமே பாதிதான், மீதியை விஸ்வரூபம் 2இல் தான் பார்க்க முடியும் என்று நீங்கள் வைத்த 'ட்விஸ்ட்' மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் உணர்ச்சிக்கு தமிழில் என்ன பெயர் சொல்லி அழைப்பதென்றே புரியவில்லை.

ஒருவேளை அரபி மொழியில் ஏதேனும் வார்த்தைகள் இருக்குமோ தெரியாது. யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது? 24 கூட்டத்தில் ஏதேனும் ஒரு கூட்டத்திடமா? அல்லது 25ஆவது கூட்டத்திடமா? ஐயையோ இது விஸ்வரூபம் திரைப்படத்தைவிட அல்லவா குழப்பமான பிரச்சினை. பேசாம படத்தில் அரபி மொழியை சிரமப்பட்டுப் பேசிய நடிகர் நாசரிடம் கேட்கலாமோ என்றும் தோன்றுகிறது. பாவம் அவர்! அவருக்கென்ன தெரிந்திருக்கப்போகிறது. சகலமும் நீங்கள்தானே! இந்தச் சந்தேகத்திற்கு பதிலளிக்க யாரும் தமிழ் நாட்டில் இருக்கிறார்களோ? இல்லையோ? நிச்சயம் உங்களால் பதில் சொல்ல முடியும் என்பது தமிழ்நாட்டிற்கே தெரிந்த விடயம்.

அது எந்தக் கேள்வியாக இருந்தாலும் சரியே. ஏனெனில் உங்கள் திரைப்படங்களை விடவும் உங்கள் பேட்டிகள் ஊடகங்களில் அதிக கவனம் பெறுவதோடு, சர்ச்சையையும் புரட்சியையும் உண்டு பண்ணிவிடுகின்றன. இல்லையென்றால் ஒன்றரை வருடங்களாக ஊடகங்கள் முன்னால் தோன்றுவதையே தவிர்த்து வந்த இந்தியாவின் எதிர்காலப் பிரதமர் ஆகும் கனவோடு இருக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையே ஊடகங்களுக்கு முன்னால் வந்தமரச் செய்திருக்குமா உங்கள் பேட்டி.

தவிரவும் விஸ்வரூபம் திரைப்படத்தை வேகமாக ரிலீஸ் செய்து விட்டு, ஹொலிவூட் திரைப்படத்தை இயக்கி நடிக்க வேண்டியிருக்கின்றது. 'யாவரும் கேளீர்' என்று பெயர் கூட வைத்துவிட்டீர்கள். ஆனால் ஒன்று அமெரிக்கர்களுடைய கருத்து சுதந்திரத்தை நினைத்து ஆச்சரியமாக இருக்கின்றது. 'தசாவதாரம்' திரைப்படத்தில் NaCl என்றால் கூட என்னவென்று தெரியாதவராக 'ஜோர்ஜ் புஸ்' ஐ கிண்டலடித்தீர்கள். அதில் ஓரளவு உண்மையும் இருந்தது. மேலும் அமெரிக்க ஊடகங்களும் அவரை அவ்வாறு கிண்டலடிப்பதுண்டு. அதனால் பிரச்சினையில்லை. ஆனால் விஸ்வரூபத்தில் 'அணு' குறித்து எந்த அறிவுமற்றவர்களாகவும், முல்லா உமர் போன்ற தீவிரவாதி அமெரிக்காவில் சாதாரண பிரஜையாக நடமாடுவதைக் கூட கண்டுபிடிக்க முடியாதவர்களாகவும் அமெரிக்க CBI யை சித்தரித்திருக்கிறீர்கள்.

மேலும், அமெரிக்கப் படை 'குழந்தைகளையும், பெண்களையும் கொல்லமாட்டார்கள்' என்று தலிபான்களே நம்பியிருக்கும் நிலையில் சாதாரண பொதுமக்களைக் குண்டு வீசித்தாக்குவதுபோல அமெரிக்கப்படைகளை கொடூரமானவர்களாகவும், வானில் ஹெலிகொப்டர் மூலமும், பூமியில் 'ஜீப்' மூலமும் சென்றபோதும், கண்ணெட்டிய தூரத்திலிருக்கும் தலிபான்களைக் கண்டுபிடிக்க இயலாத வெறும் சிப்பாய்களாகவும் காண்பித்திருக்கிறீர்கள். இப்படி நேர் முரணாக நீங்கள் சித்தரித்தும் உங்களுக்கு எதிராகப் போராட்டமோ, எதிர்ப்போ நடத்தாத அமெரிக்கர்களை நினைத்து ஆச்சரியப்படாமலிருக்க முடியவில்லை. இவ்வளவு கருத்து சுதந்திரம் இருக்கும்போது உங்கள் 'யாவரும் கேளீர்' யை யாவரும் கேட்கத்தானே செய்வார்கள். ஆதலால் உங்கள் அதி புத்திசாலித்தன மூட்டைகளை அங்கே அவிழ்த்துவிடுங்கள். அதில் இன்னுமொரு சௌகரியமும் உண்டு.

துப்பாக்கி திரைப்படத்தில் முருகதாஸ் Sleeper cell என்ற புதிய விடயத்தை கொண்டு வரும்போது, அது குறித்து பாமர ரசிகனும் புரிந்து கொள்ளும் வகையில் கதையோட்டத்தில் ஒரு தாமதம் ஏற்பட்ட போதும் கூட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி வழியே மக்களுக்கு உணர்த்தியிருப்பார். இதனால் சாதாரண ரசிகனும் Sleeper cell குறித்து புரிந்தவனாக தொடர்ந்து திரைப்படத்தோடு ஒன்றித்துப் போனான். ஆனால் விஸ்வரூபத்திலோ Dirty bomb, plutonium, Cesium radiation உள்ளிட்ட விடயங்களை தமிழ் சினிமாவிற்கு புதிதாக அறிமுகப்படுத்தும் போது, தமிழ் ரசிகனைப் பாமரனாகக் கொள்ளாது, இவையனைத்தையும் புரிந்து கொள்ளக் கூடிய புத்திசாலியாகவே கருதி அவை பற்றி பாடம் எடுக்காமல் விட்டுவிட்டீர்கள்.

இத்தகைய நிலைப்பாடு தமிழ்சினிமாவின் பாமர ரசிகனுக்கு ஒரு ஆங்கிலப்படம் பார்த்த உணர்வையே கொடுத்தது (எதுவும் புரியல). ஆனால் அமெரிக்க ரசிகர்கள் எளிதில் புரிந்து விடுவார்கள். குறித்த அவ்விடயங்கள் தொடர்பாக முன்பின் காட்சிகளில் விளக்கியிருப்பதை கூர்ந்து கவனித்துப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அமெரிக்க ரசிகர்களிடம் உண்டு. ஆகையால் உங்கள் எண்ண வெளிப்பாடுகளை மிகப் புத்திசாலித்தனமாக வெளிப்படுத்த முடியும். (உண்மையில் விஸ்வரூபம் திரைப்படக்காட்சிகளை விடவும் துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெரும் இந்த Sleeper cell என்ற விடயம் அதிக ஆபத்தானதாகும்.

ஏனெனில் Sleeper cell எனப்படுவோர் இந்தியாவில் சாதாரண பிரஜையாக பெட்டிக்கடை, பீடாக் கடை, துணிக்கடை, விவசாயம், அலுவலகத் தொழில் என தொழில் புரிந்து கொண்டு வாழ்ந்து வருவார்கள். என்று அவர்களுக்க மேலிடத்திலிருந்து கட்டளை கிடைக்கிறதோ அன்று அவர்கள் தீவிரவாதிகளாக செயற்படுவார்கள் என்பது எவ்வளவு ஆபத்தானது. இந்தியாவில் வாழும் அத்தனை முஸ்லிம்களையும் சந்தேகக் கண் கொண்ட பார்க்கச் செய்யும் விடயம் இது. இவ்விடயம் குறித்து 24 கூட்டமைப்பினர் மௌனமாக இருந்தமை ஆச்சரியத்தையே தருகிறது. ஒருவேளை விஜய், அம்மா கட்சியைச் சேர்ந்ததாலோ என்னவோ).

இன்னுமொரு முக்கிய விடயம். 'ஹேராம்' படத்தில் ஒவ்வொரு பாத்திரத்தையும், அப்பாத்திரங்களின் இயல்பான மொழியிலேயே பேச விட்டிருந்தீர்கள். தமிழன் தமிழிலும், வடநாட்டுக்காரன் ஹிந்தியிலும், வெள்ளைக்காரன் ஆங்கிலத்திலுமாக தத்தமது மொழியிலேயே உரையாடினார்கள். இது காட்சிகளின் உண்மைத்தன்மைக்கு வலுவூட்டினதேயொழிய பல் மொழிப் பாண்டித்தயம் இல்லாத பாமரர்களுக்குப் புரியவில்லை. இதனால் உங்களுக்கு ஏற்பட்ட நஸ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. அதற்காக விஸ்வரூபத்தில் முல்லா உமர் உள்ளிட்ட தீவிரவாதிகளைத் தமிழிலே பேசவைத்ததோடு, அதற்கான காரணமாக உமர் மதுரையிலும், கோவையிலும் ஒழிந்திருந்தார் என்று பூச்சுற்றியதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.

இவற்றால் இரண்டு பிழைகள் நேர்ந்துவிட்டன. ஒன்று, தேர்ந்த விமர்சகர்களின் பார்வையில் தலிபான் காட்சிகளில் உண்மைத்தன்மையற்றுப் போய்விட்டதான உணர்வைக் கொடுத்தது. பாமர ரசிகர்களின் (எதிர்ப்பாளர்கள்) பார்வையில், இந்தப்படம் உண்மைக்குப் புறம்பானது என்பதை உலகுக்கு நிரூபிக்க போதுமான ஆதாரத்தை இவ்வசனம் கொடுத்தது. இப்படியாக ஒரு படைப்பாளியாகவும் இருக்க முடியாமலும், பாமரருக்காக இறங்கி வரவும் முடியாமலும் உங்களுக்கு ஏற்படும் தடுமாற்றம் 'ஹோலிவூட்' படத்தை ஆங்கில மொழியில் எடுக்கும்போது ஏற்படாது என நம்பலாம்.

இன்னும், பகுத்தறிவு என்ற உங்கள் கொள்கையை எல்லாப் படங்களிலும், நீங்கள் ஏற்கும் எல்லாக் கதாபாத்திரங்களிலும் ஏற்றிப் பிரசாரம் செய்வதைத் தடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் கதாபாத்திரம் முஸ்லிம் கதாபாத்திரம் என ரசிகர்களிடமும், உங்கள் மனைவிப் பாத்திரத்திடமும் சொல்லப்பட்டதன் பின்னர் வரும் காட்சியொன்றில் நிருபமா 'கடவுள் காப்பாற்றிவிட்டார்' என்று சொன்னதற்கு, 'எந்தக்கடவுள்' என பகுத்தறிவுவாதத்தை முன்வைப்பீர்கள்.

தியேட்டரில் ஒரு சில விசில் சப்தங்களுக்கும், உங்களது நிஜ வாழ்வின் பகுத்தறிவுவாதத்திற்கும் அவ்வசனம் காரணமாக இருந்த அதேவேளை, நீங்களும் அல்லாஹ்வைத் தூய்மையாக நேசிக்கின்ற, இறுதிக் காட்சியில் தீவிரவாதிகள் பிழையான முறையில் அழிவுக்காக இறைவனைத் தொழும்போது பலர் நலனுக்கும், உண்மைக்குமாக இறைவனைத் தொழுகின்ற ஓர் உண்மையான முஸ்லிமாக இருக்கின்றீர்கள் என்ற இத்திரைப்படத்தின் அதி முக்கிய கருத்தியலை சிதைத்துப் பொய்யாக்கிய கேள்வியாக அக்கேள்வி அமைந்துவிடுகிறது. விஸ்வரூபத்தில் உங்கள் கதாபாத்திரம் காஸ்மீரியா? விஸ்வனாத்தா என்ற கேள்விகளுக்கு மேலாக நடிகர் கமலஹாசனா? என்ற இன்னுமொரு கேள்வியையும் ரசிகர்களுக்கு எற்படுத்திக் குழப்பாதீர்கள்.

அடுத்து, ஒரு திரைப்படத்தை உண்மைத்தன்மையோடு எடுப்பதா? கற்பனையாக எடுப்பதா என்பதில் தொடர்ந்தும் உங்களுக்கு இருக்கும் குழப்பத்திலிருந்து விடுபட முயற்சியுங்கள். ஏனெனில் ஒசாமா பின் லேடன், உமர் என உண்மைப் பாத்திரங்களைக் கொண்டு கதையை வடிவமைத்த நீங்கள், வெறும் கைதட்டலுக்காக வசனங்களை அமைக்கும்போது அது உண்மைத்தன்மையை இல்லாதொழித்துவிடும் எனும் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டியவராகின்றீர். 'அப்பா இல்லாதவன் ரொம்ப ஸ்மார்ட் ஆ இருப்பான்.. ஒன்னப் போல' என முல்லா உமர் சொல்கையில், பதிலுக்கு உங்கள் பாத்திரம் 'அப்பா யாரென்றே தெரியாதவன் அதவிட ஸ்மார்ட் ஆ இருப்பான்' என பேசும். இவ்வசனங்கள் பாராட்டுக்குரியவை எப்போதென்றால், வில்லன் உமர் என்ற உண்மைப் பாத்திரமாக இல்லாதிருந்தால். வில்லன் முல்லா உமராக இருக்கின்ற காரணத்தால் இவ்வசனம் குறித்து ஏமாற்றமே வருகின்றது. இவ் ஏமாற்றத்திற்குள் இவ்வெதிர் பதிலின் மூலம் துப்புத் துலக்குவதிலும் நீங்கள் உமர் பாத்திரத்தை விட உசாரானவர் என்று சொல்ல வந்த விடயம் கவனிக்கப்படாமலே போகிறது. இதே குழப்பத்தை உங்களுடைய 'உன்னைப் போல் ஒருவன்' படத்திலும் மிக அறியாமையோடு புரிந்திருப்பீர்கள். அதிக கண்டணத்திற்குள்ளாக்கப் பட வேண்டிய தவறு அது. அதாவது The wednesday என்ற பெயரில் நஸ்றுதீன் ஷா நடித்த மூலப் படத்தில் தீவிரவாதிகள், பொலிஸ், அதில் குறிப்பிடப்படும் சம்பவங்கள் என்பன கற்பனையாக சித்தரிக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தை 'உன்னைப் போல் ஒருவன்' என்ற பெயரில் நீங்கள் எடுத்த போது, உண்மைச் சம்பவங்களாகவும், கதாபாத்திரங்களாகவும் சித்தரித்திருப்பீர்கள். அதில் 3 முஸ்லிம் தீவிரவாதிகளையும், ஒரு இந்து ஆயுத விநியோகஸ்தரையும் காட்டியிருப்பீர்கள். ஒரு காட்சியில் முஸ்லிம் தீவிரவாதிகளுள் ஒருவன் தனது மனைவிக்கு நேர்ந்த அவலத்தை கூறி தன் மனைவியை கருவருத்துக் கொன்றதாக கவலைப்படுவார். அதற்கு இந்து ஆயுத வியாபாரியோ 'அதுதான் உங்களுக்கு இன்னும் 3 பேர் இருக்கிறார்களே' என கிண்டல் செய்வார். இந்தக் கிண்டலோ, காட்சியோ சாதாரண நிகழ்வாகச் சொல்லப்பட்டிருந்தால் அதன் பாதிப்பு வேறு. ஆனால் குஜராத் கலவரத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடூர சம்பவங்களின் உச்சமாக சித்தரிக்கப்படுகின்ற 'பெஸ்ட் பேக்கரி' சம்பவத்தை தொடர்புபடுத்தியதென்பதானது மிகப் பெரும் தவறாகும். 'பெஸ்ட் பேக்கரி' சம்பவம் எனப்படுவது ஒரு முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணின் பெண்ணுறுப்பினூடாக கையைச் செலுத்தி குழந்தையை வெளியிலெடுத்து இரு உயிர்களையும் கொன்றொழித்த கொடிய சம்பவமாகும். இந்தச் சம்பவத்தையே தனது பாதிப்பாக சொல்லும் ஒருவனைத் தீவிரவாதியாக சித்தரிப்பதும், அவனது கவலைக்குப் பதிலாக இந்து ஆயுத வியாபாரி மேற்சொன்னவாறு நக்கலடிப்பதும், ஈற்றில் பாதிக்கப்பட்ட அந் நபரே கொல்லப்படுவதும் கமலஹாசனை பாசிச வெறியறாகவே மக்களுக்கு உணர்த்துகின்ற காட்சியாகும். இவற்றை  நீங்கள் தெரிந்து செய்கிறீர்களா? தெரியாமல் செய்கிறீர்களா என்ற கேள்வி இங்கு முக்கியமானது. நிஜத்தில் கமல்ஹாசன் மதச்சார்பற்ற, அன்பு வழி நடக்கின்ற ஒரு நல்ல மனிதர் என்ற படியால் நீங்கள் தனது புத்திசாலித்தனத்தினை வெளிப்படுத்தும்போது தெரியாமல் விடுகின்ற மாபெரும் தவறாகவே கொள்ளத் தோனுகிறது. ஆகையால் இவை குறித்த கவனம் தங்களுக்கு மிகவும் அவசியம் என கருதுகின்றேன்.
 
இதே நேரம், தேர்ந்த நடிப்பிலும், இயக்கத்திலும் தாங்கள் வெளிப்படுத்திய அதீத திறமை, பட ஆரம்பம் முதல் இறுதி வரையில் ஆசன நுனிக்கே அனைவரையும் வரவழைத்து எந்தவித உடலசைவுமின்றி அனைவரையும் கட்டிப்போட்ட உங்களது திரைக்கதை உத்தி, ஆப்கானிய வாழ்க்கை முறை பற்றிய அழுத்தமான பதிவைத் தந்தமை, தொழிநுட்ப ரீதியாகவும், பட உருவாக்கத்திலும் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியமை... போன்ற பல விடயங்களுக்காக தங்களைப் பாராட்ட வேண்டும்.

எது எவ்வாறிருப்பினும் தமிழ் சினிமாவை அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முழுத் தகுதியும், நடிப்பில் அனைவரையும் புறந்தள்ளும் ஆற்றலும், கலைஞன் என்பதற்கு அப்பால் சக மனிதன் மீது நிஜமாக அன்பு செய்யும் உணர்வும், சக கலைஞர்களையும் வளர்த்து விடும் பேருள்ளமும், ஓய்வின்றித் தேடவும் உழைக்கவும் செய்கின்ற தன்முனைப்பு என சகலகலா வல்லவனாகத் திகழும் ஒரேயொரு கலைஞனான உங்கள் மீது அளப்பெரிய நம்பிக்கையையும், விசுவாசத்தையும் காண்பித்திருக்கின்ற தமிழ் சினிமாவிற்கு மாத்திரமின்றி அனைத்த சமூகங்களிற்கும் பயன்தரக்கூடிய வகையில் உங்கள் அடுத்த படைப்புகள் வெளிவர வேண்டும் என்பதும் என் விருப்பமாகும்.

-முஷர்ரப் (முஷாபி)

You May Also Like

  Comments - 0

  • imran Thursday, 14 February 2013 10:06 AM

    தத்துவம் - கேக்கிறவங்களுக்கு புரியக் கூடாது!
    மகா தத்துவம் - சொல்றவங்களுக்கே புரியக் கூடாது!!
    விஷ்வரூபம் - மகா தத்துவம்

    Reply : 0       0

    Nafeel Thursday, 14 February 2013 04:09 PM

    ஏன் இந்த மடத்தனமான அலசல்.

    Reply : 0       0

    Manithan Friday, 15 February 2013 08:45 AM

    விஸ்வரூபம் ஓரளவு புரிந்தது. ஆனால் இந்த விமர்சனம் புரியவேயில்லை. ஒரே குழப்பமாயிருகிறது. யாவரும் கேளிர் என்றால் எல்லாரும் கேளுங்கள் என்று அர்த்தமா? எல்லோரும் மக்களே என்று அர்த்தமா? நீங்கள் கேளிரை கேளீர் என என எழுதியிருந்தீர்கள். முல்லா உமர் மதுரையிலும், கோவையிலும் ஒழிந்திருந்தார் என்று பூச்சுற்றவில்லை. அதன் உண்மையான அர்த்தம் உங்களுக்குப் புரியவில்லை. மதுரை, கோயமுத்தூர் போன்ற நகரங்களில் அவர் முஸ்லிம்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கினார் எனும் கமலஹாசனின் நையாண்டிதான் அது.

    Reply : 0       0

    ABU SAMA Friday, 15 February 2013 09:22 AM

    தலைப்பு போன்று நடுநிலையான பார்வை. நன்றாக இருந்தது...

    Reply : 0       0

    yoga Friday, 15 February 2013 05:43 PM

    உமக்கு மண்டைப்பிழை

    Reply : 0       0

    Mushafi Friday, 15 February 2013 06:55 PM

    மனிதன். . யாவரும் கேளீர் என்பதும் ஒரு வகை நையாண்டிதான். தீவிரவாதிகளைப் பொறுத்தவரை பதுங்குதல், பயிற்சி கொடுத்தல் எல்லாம் ஒன்றேதான். பதுங்கினார், சாப்பிட்டார், தூங்கினார், குளித்தார், உரையாடினார், பயிற்சி கொடுத்தார் என்ற விரிவு அவசியமில்லை என்று கருதினேன். இருந்தும் நன்றி உங்கள் கருத்துக்களுக்கு.

    Reply : 0       0

    IBNU ABOO. Saturday, 16 February 2013 03:30 PM

    தலிபான்களுக்கு இந்த விஷ்வரூப விவகாரம் நிச்சயமாக எட்டியிருக்கும். இதன் தயாரிப்பாளர் யார் என்றும் தெரிந்திருக்கும். இனிதான் அவர்கள் மதுரைக்கும் கோவைக்கும் வரப்போகிறார்கலோ...?

    Reply : 0       0

    jesslya jessly Saturday, 16 February 2013 04:17 PM

    வழவழா கொழகொழா அலசல்

    Reply : 0       0

    appu nihirthan Sunday, 17 February 2013 03:17 AM

    இது நடுனிலையான விமர்சனம் இல்லை. திட்டமிட்ட காழ்ப்புணர்ச்சி.

    Reply : 0       0

    Sunthar Monday, 18 February 2013 04:49 AM

    ஆழமான விமர்சனம். திரைப்படம் பற்றிய விமர்சகரின் நுண்ணிய அவதானம் பாராட்டுக்குரியது. துப்பாக்கி படத்தோடு ஒப்பிட்டமை பொருத்தமாக உள்ளது. கமல்ஹாசனையும், தலிபான்களையும் பாராட்டுவது போல விமர்சித்திருப்பதும். விமர்சிப்பது போல பாராட்டியிருப்பதும் புதுமையான எழுத்த முறையாகத் தெரிகிறது. வாழ்த்துகள்

    Reply : 0       0

    i.hassan Monday, 18 February 2013 05:39 PM

    யார் இது? என்னமோ வலவல என்ட்ரு................

    Reply : 0       0

    ansar Wednesday, 20 February 2013 01:52 AM

    என்னப்பா இது? ஏதாவது வேண்டுதலா?

    Reply : 0       0

    rm.maharim Tuesday, 26 February 2013 07:22 AM

    மிஹவும் அருமையான ஒரு திரைப்படம் எனினும் திரைப்படத்தின் முடிவு ஒர் சிறப்பான நிலையில் இல்லை. சில குர்ரான் வார்தைகள் பயன்படுத்தப்பட்டது கவலைக்குரிய விடயம். சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததார் கமல்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X