2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தனுஷுக்கு உரிமை கோரும் புதிய பெற்றோர்...

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


கடந்த 2002ஆம் ஆண்டில், இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற அடையாளத்துடன் 'துள்ளுவதோ இளமை' திரைப்பட நாயகனாக அறிமுகமானவர் தனுஷ். அவ்வாறு அவர் நடிகரான அதே ஆண்டில், தொலைந்த தன் மகன் கலைச்செல்வன்தான் இன்றைய நடிகர் தனுஷ் என புதிய விவகாரத்திற்கு கோடிட்டுள்ளார் சிவகங்கை பேருந்து நிலையத்தில் நேரக் கணிப்பாளராக கடமையாற்றும் கதிரேசன்.

'என் சொந்த ஊர் திருப்பாசேத்திப் பக்கத்திலுள்ள கல்லூரணி. என் மனைவி பெயர் மீனாள். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவன் கலைச்செல்வன். இரண்டாவது தனபாக்கியம். நான் பஸ் நடத்துனராக பணியாற்றிக்கொண்டிருந்த போது எங்க வீடு மேலூர் பக்கத்தில எம்மலம்பட்டி ஆர்-டி.ஓ. ஆபீஸ் பக்கம் இருந்துச்சு. அப்போது பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த கலை 10ஆம் வகுப்பில் 365 புள்ளிகளை எடுத்தான். இதனையடுத்து திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம் சீதையம்மாள் பாடசாலையில் 101இல் சேர்த்துவிட்டோம்.

விடுதியுடன் சேர்ந்து அமைந்துள்ள அந்த பாடசாலையின் விடுதி பொறுப்பாளராக இருந்தவர் சீதாபதி. இவர் எங்க ஊருக்காரரு என்பதால் அவர் பொறுப்பில் இவனை விட்டோம். கொஞ்ச நாளிலேயே இவன் வைச்சிருந்த ஆடைப் பெட்டியில்... 'அம்மா, என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு இந்த படிப்பு பிடிக்கவில்லை. நான் ஊரைவிட்டே போறேன். எனக்கு எப்பத் தோணுதோ, அப்ப உங்களைத் தேடி வருவேன்' அப்படின்னு எழுதி வைச்சுட்டு வெளியேறிட்டான். 2002ஆம் ஆண்டே அவன் எங்களை விட்டுட்டு போனான்.

மகனைத் தேடி அலைஞ்சு திரிஞ்சு சலிச்சுட்டோம். இடையில் ஒரு நாள், தனுஷ் சன்.டி.வி.யில் ஒரு பேட்டி கொடுத்தாப்ல. நான் மதுரைக்காரன் என்றும், மதுரை பக்கத்தில மேலூரை சேர்ந்தவன் என்றும் பேட்டியில் சொன்னான். 'என்னடா.. இவனுக்கு தேனிதானே சொந்த ஊரு, அப்புறம் ஏன் மேலூர் என சொல்றான்?' என சந்தேகமாக இருந்தது.

அப்போது அக்கம், பக்கத்தில் இருந்தவங்க எல்லாம் காணாமல் போன உன் மகன் கலைதான் தனுஷ் என சொல்ல ஆரம்பிச்சாங்க. அதற்கப்புறம் தான் கலையோட போட்டோ எல்லாம் தேடிப் பிடிச்சு, ஒத்துவைச்சுப் பார்த்தால்... உண்மை எனக்கு தெரிஞ்சது. பிறகுதான் என் கலையை மீட்காமல் விடுவதில்லை எனப் போராடிக் கொண்டிருக்கிறேன்.

ஏன் சார்... என்னைப் பாருங்க. என் முகச்சாயல்தானே அவனுக்கு. ஒருநாள், நான் வேலை பார்க்கிற சிவகங்கை பஸ்-ஸ்டாண்டில் 'வேங்கை' திரைப்படம் படப்பிடிப்பு நடத்தினாங்க. அப்ப நான் இல்லை. ஆனால், டிரைவர் ஆபிரகாம் நேராக தனுஷ்கிட்ட போய், 'உங்க அப்பா கதிரேசன் இங்க கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காரு' என சொல்லியிருக்காரு. 'ஏன் கஷ்டப்படணும். என்னை வந்துப் பார்க்கச் சொல்லுங்கனு' சொல்லிட்டு ஷூட்டிங் போயிட்டான் கலை.

நான் இருக்கிற ஊர்ல, வேலை பார்க்கிற சிவகங்கையில என எல்லோருக்கும் தெரியும் என் மகன் கலைதான் தனுஷ் என்று. அதை நிரூபிக்க போராடிக்கிட்டு வருகிறேன். சி.எம். செல்லுக்குக் கூட மனு அனுப்பினேன். விசாரிக்க சிவகங்கை தாலுகா பொலிஸ் ஸ்டேசனுக்கு வரச் சொன்னாங்க. டெய்லி அலைந்தேன். அப்புறம் 'பெரிய இடத்து விவகாரம்' என சொல்லிட்டாங்க.

அதற்குப் பிறகு எங்க ஊரு நடிகர் கஞ்சா கருப்புகிட்ட இந்த விஷயத்தை சொன்னேன். அவரும் 'இதிலே நான் தலையிடமுடியாது' எனக்கூறி ஒதுங்கிகிட்டார். என் மகள் கல்யாணத்திற்குப் பத்திரிகை அனுப்பிக் கூட அவன் வரலைங்க. அவன் சம்பாதிப்பதில் சல்லிக் காசு கூட எங்களுக்கு வேண்டாம். என் மகன் தானென்று தனுஷ் சொன்னாப் போதும். அதை நிரூபிப்பதற்கான எந்த டெஸ்ட்டிற்கும் நான் தயாராய் இருக்கேன்' என கண்ணீர் வடித்தார் கதிரேசன்.

தனுஷின் புகைப்படங்களையும், தன் மகன் கலைச்செல்வனின் புகைப்படங்களையும் ஒத்து வைத்துப் பார்த்துக் கொண்டே காலம் தள்ளுகிறார் கலையின் தாய் மீனாள். 'உறுதியாய் சொல்றேன்... கலைச்செல்வன்தான் தனுஷ். பெத்தவளுக்குத் தெரியாதா, பிள்ளை யாரென்று..? கொட்டக்குடிப் பக்கத்தில 'ஆடுகளம்' ஷூட்டிங் நடந்துக்கிட்டிருந்தப்ப நாங்களும் அங்கே போனோம். தனுஷ் சேவல் விட்டுக்கிட்டிருந்தான்.

நான் கலை, கலைன்னு கத்தினேன். மைக் வச்சு அவங்க கத்தினதால் அவனுக்கு கேட்கலை போல. தனுஷ் யாருக்காகப் பயந்துக்கிட்டு இருக்கான் எனத் தெரியவில்லை? இந்த பிரச்சினை அவனுக்கு நல்லாவே தெரியும்..! வெளியில் வந்து உண்மையை சொன்னால் போதும். மற்றபடி எந்த சொத்து சுகத்துக்கும் நாங்க ஆசைப் படலை' என்றார் தாய் மீனாள்.

இது ஒரு புறமிருக்க முன்னதாக, தனுஷ் - ஐஸ்வர்யா திருமணத்தின் போது, 'எங்களது பிள்ளை தனுஷ். திரும்பத் தாருங்கள்' என மதுரை தவிட்டுசந்தையை சேர்ந்த முருகபாண்டி, பூமி ஆகிய இருவர் கஸ்தூரி ராஜாவை வற்புறுத்த, அவரோ... '5 இலட்சம் கேட்டு தன்னை மிரட்டுகிறார்கள்' என வடபழனி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ய... இருவரும் காவல்துறையினரால் மிரட்டப்பட்டு விரட்டப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூரிலிருந்து கடத்தப்பட்ட கலைச்செல்வன்... குழந்தைத் தொழிலாளியாக கஸ்தூரி ராஜாவிடம் விடப்பட... அவரோ, தன்னுடைய 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நபர் வராததால் அந்த திரைப்படத்தினில் கலைச்செல்வனை தனுஷாக அறிமுகப்படுத்தினார் என்றும், தொடர்ந்து திரையுலகில் தனுஷ் பிரகாசிக்க, அப்பொழுதுதான் குழந்தைத் தொழிலாளியாக விடப்பட்ட கலையைக் கேட்டு கஸ்தூரி ராஜா வை மிரட்டியுள்ளனர் மதுரை வாசிகள் என்றொரு தகவல் கோடம்பாக்கம் ஏரியாவில் இன்றுவரை கிசுகிசுக்கப்படுவதும் உண்டு.

திருப்பத்தூரில் கலைச் செல்வன் காணாமல் போனதாகப் பதியப்பட்ட வழக்கு இன்றுவரை முடிவுக்கு வராமல் இருக்கிறது. தனுஷை சுற்றும் இந்த சர்ச்சைகளுக்கு அவரின் வார்த்தைகள்தான் முற்றுப்புள்ளியே!







You May Also Like

  Comments - 0

  • ibnuaboo Friday, 09 August 2013 02:58 PM

    ஒரு டீ.என்.ஏ பரிசோதனை மூலம் எல்லாம் வெளிச்சத்துக்கு வரும்

    Reply : 0       0

    Deva Monday, 12 August 2013 11:15 AM

    இது பொய்யான தகவல்.

    Reply : 0       0

    rutra Wednesday, 14 August 2013 05:36 AM

    என்னதான் நடக்கிறது இவரது வாழ்வில்....

    Reply : 0       0

    Roshan Thursday, 15 August 2013 12:02 PM

    எல்லாம் இறைவன் செயல்.......

    Reply : 0       0

    m.kanagalingam Friday, 16 August 2013 06:37 AM

    டி.என்.ஏ. பரிசோதனைதான் சரி

    Reply : 0       0

    suresh Monday, 19 August 2013 06:08 AM

    இதெல்லாம் நம்புறமாதிரியா இருக்கு. எதுக்கும் டி ஏன் ஏ செய்தா சரி

    Reply : 0       0

    janani Wednesday, 02 October 2013 04:57 AM

    தனுஷ்கும் அவங்களோட இருக்கிற அந்த பையனுக்கும் இடையில் ரொம்ப வித்தியாசம் இருக்கு. இவங்க சும்மா பொய் சொல்றாங்க‌. இதெல்லாம் நம்ப முடியாதது. இது எல்லாத்துக்கும் ஒரு டீ.என்.ஏ டெஸ்ட் செய்து பார்த்தால் எது உண்மை என்று தெரிந்திடும். எல்லாம் கடவுளுக்கு தான் தெரியும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X