2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

மூலதனச்சந்தையும் முதலீடுகளும் பாகம்-02

Gavitha   / 2016 மே 30 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்ரான் மன்சூர்- இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு

பங்குகளை எவ்வாறு கொள்வனவு செய்வது

விடுமுறைகளுக்கு முன்னர், நாங்கள் பங்குச்சந்தை தொடர்பான அறிமுகத்தை பார்த்தோம் அதேபோல் இந்த வாரம் பங்குகளை அல்லது தொகுதிக்கடன்களை எவ்வாறு கொள்வனவு செய்வது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

பங்குகள் அல்லது தொகுதிக்கடன்களை கொள்வனவு செய்ய இரண்டு சந்தைகள் காணப்படுகின்றது. அவையாவன முதலாம் தரச்சந்தைஇ இரண்டாம் தரச்சந்தை ஆகியனவாகும். இவை இரண்டையும் பற்றி விரிவாக பார்க்கலாம.;

முதலாம் தரச் சந்தை (Primary Market)

பங்குகளை அல்லது தொகுதிக்கடன்களை நிறுவனங்கள் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கும் சந்தை முதலாம் தரச் சந்தை எனப்படும். அதாவது முதலாம் தரச் சந்தையில் பங்குகளை அல்லது தொகுதிக்கடன்களை நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக பொதுமக்கள் கொள்வனவு செய்து கொள்ள முடியும்.

இச்சந்தையில் பங்குகளை அல்லது தொகுதிக்கடன்களை வெளியிடும் நிறுவனமானது தங்களது முன்விவரணத்தையும் (prospectus) வெளியிடும்.

முன்விவரணமானது பங்குகளை வழங்குகின்ற நிறுவனம் பற்றிய தகவல்கள் அதன் தற்கால நடவடிக்கைகள், எதிர்கால திட்டங்கள், நிதி நிலைமை மற்றும் பங்குகளை வழங்கி மூலதனத்தை திரட்டிக்கொள்வதற்கான பிரதான காரணம், நிறுவனத்தின் தற்போதைய பணிப்பாளர்கள், முகாமைத்துவம் போன்ற தகவல்களை வழங்கும்.

முதலாம் தரச் சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது

1.    ஏதாவதொரு பங்குத்தரகு நிறுவனத்தின் ஊடாக மத்திய வைப்புத்திட்ட கணக்கொன்றை ஆரம்பித்துக்கொள்ளல்.
2.    குறித்த நிறுவனத்தினால் இலவசமாக வழங்கப்படும் முன்விவரணத்தை பங்குத்தரகு நிறுவனங்களிடம் இருந்தோ அல்லது மேற்படி பங்கு வழங்கும் நிறுவனத்திடம் இருந்து அல்லது கொழும்பு பங்குச்சந்தையின் இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது அனுமதிக்கப்பட்ட வங்கிகள் ஊடாகவோ பெற்றுக்கொள்ளல்.
3.    முன்விவரணத்தை முழுமையாக வாசித்து நிறுவனம் பற்றிய தகவல்களை பெறல்.
4.    பங்குகள் அல்லது தொகுதிக்கடன்களை கொள்வனவு செய்ய முன்விவரணத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்தல்.
5.    படிவத்தில் கட்டாயமாக மத்திய வைப்புத்திட்ட கணக்கின் இலக்கத்தை இடல் வேண்டும்.
6.    விண்ணப்பப்படிவத்தினை கொள்வனவு செய்கின்ற பங்குகளின் மொத்த பெறுமதியோடு சேர்த்து நிறுவனத்திற்கு நேரடியாகவோ அல்லது பங்குத்தரகு ஊடாகவோ அனுப்ப வேண்டும்.
7.    பின்னர் நிறுவனம் மத்திய வைப்புத்திட்ட கணக்கிற்கு அனுமதித்த பங்குகளை வரவு வைக்கும்.
8.    விண்ணப்பித்ததற்கு குறைவான பங்குகள் வழங்கப்பட்டிருப்பின் மேலதிகமான பெறுமதி திரும்பி பங்குதாரரது கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.
9.    தற்பொழுது பங்குகளை பெற்ற பங்குதாரர் தனது பங்குகளை இரண்டாம் தரச் சந்தையில் அவற்றை விற்பனை செய்து இலாபம் உழைக்கவும் நிறுவனத்தின் இலாப நட்டங்களில் பங்குகொள்ள உரித்துடையவராகின்றார்.

முதலாம் தரச்சந்தையில் முதலீட்டாளர்கள் நிறுவனம் பங்குகளை வழங்கும் போது மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் ஆனால் இரண்டாம் தரச்சந்தையில் தேவையான நேரத்தில் கொள்வனவு செய்து கொள்ள முடியும்.

இரண்டாம் தரச் சந்தை (Secondary Market)

முதலாம் தரச் சந்தையில் கொள்வனவு செய்த பங்குகளை முதலீட்டாளர்கள் தங்களிடையே கொடுக்கள் வாங்குதல் செய்தல் இரண்டாம் தரச் சந்தை எனப்படும்.

உதாரணமாக மேலே குறிப்பிட்ட முதலாம் தரச் சந்தையின் ஊடாக ஒ என்ற நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்த முதலீட்டாளர் ஒருவர் தான் வாங்கிய விலையை விட அதிகமான விலைக்கு அல்லது குறைவான விலைக்கு அப்பங்குகளை இன்னுமொரு முதலீட்டாளருக்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம் அவர் மூலதன இலாபம் (capital gain) அல்லது மூலதன நட்டத்தை (capital lost) அடையலாம்.

உதாரணமாக 10 ரூபாய்க்கு X என்ற நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யும் போது, இங்கு ஒரு பங்குக்கு 5 ரூபாயை மூலதன இலாபமாக பெறலாம்.

முதலீட்டாளர்கள் இரண்டாம் தரச் சந்தையின் ஊடாக தேவையான நேரம் 294 கம்பனிகளின் பங்குகளையும் தங்களது தேவைகளையும், சந்தை வழங்களையும் பொறுத்து கொள்வனவு செய்யலாம்.

முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்
1. பங்குத்தரகர்களிடம் இருந்து முதலீட்டு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இரண்டாம் தரச் சந்தையில் முதலீடுகளை மேற்கொள்ளும் போது கட்டாயம் பங்குத்தரகர்களிடம் இருந்து அல்லது முதலீட்டு ஆலோசகர்களிடம் இருந்து முதலீட்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

பங்குத்தரகர்கள், முதலீட்டு ஆலோசகர்கள் தனிப்பட்ட ரீதியில் ஆய்வுகளை மேற்கொள்வதோடு நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளையும் திறமையாக ஆய்வு செய்து முழுமையான தகவல்களை வழங்குவார்கள்.
2. முதலீடு சம்பந்தமான இறுதி முடிவை முதலீட்டாளர்களே எடுக்க வேண்டும்.
பங்குத்தரகர்களோ, முதலீட்டு ஆலோசகர்களோ முதலீட்டு ஆலோசனைகளை                                 வழங்குவதோடு பங்கு கொள்வனவு மற்றும் விற்பனைகளில் மட்டுமே ஈடுபடுவார்கள். அவர்கள் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் இலாப நட்டத்தில் பங்கெடுக்கமாட்டார்கள்.
ஆகவே முதலீட்டாளர்களே தங்களது முதலீடு சம்பந்தமான இறுதி முடிவை எடுக்க வேண்டும்.
3. முதலீடு செய்துள்ள பங்குகள் தொடர்பான தகவல்களை பெறல்.
பங்குகளின் விலை மாற்றத்தில் பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்தலாம். மேலும் நாளுக்கு நாள் அவற்றின் விலை மாற்றமடையலாம். ஆகவே முதலீட்டாளர்கள் தொடர்ந்து சந்தை நிலைவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
4. கிடைக்கின்ற இலாப நட்டத்தில் திருப்தி கொள்ள வேண்டும்.
பங்குச்சந்தையில் முதலீடானது ஒரு வர்த்தகமாகும். இங்கு இலாப நட்டம் இரண்டும் காணப்படும். பங்குச்சந்தையானது வட்டி உழைக்கும் ஒரு தளம் அல்ல என்பதை முதலீட்டாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். ஆகவே கிடைக்கின்ற இலாப நட்டத்தில் முதலீட்டாளர்கள் திருப்தி கொள்ள வேண்டும்.

 


  Comments - 0

  • GANESH-RUSSIA Thursday, 15 September 2016 06:59 AM

    மிகவும் அருமையான தகவல்கள், தமிழில் இது போன்ற தகவல்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. பங்கு சந்தை நிறுவனம் முதலீடு தொடர்பான பல கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. தொடர்ப்புக்கு www.cse.lk திரு இம்ரான், உங்கள் சேவை இன்னும் தொடர வேண்டும் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .