2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

3 சிறுமிகள் வன்புணர்வு: வழக்கு ஒத்திவைப்பு

Kogilavani   / 2017 ஜூலை 11 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், தீஷான் அஹமட், பொன்ஆனந்தம்

மூதூர், பெரியவெளி சிறுமிகள் மூவர், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்று கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு மூதூர் நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டது.  

இந்த வழக்கு, மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என் றிஸ்வான் முன்னிலையில், நேற்று( 10) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.   

இதன்போது, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் வீடியோ ஆதாரம் பெறல் தொடர்பான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அதற்கு அனுமதியையும் வழங்கியது.  

வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது சந்தேக நபர்கள் அறுவரும், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் மூவர் சார்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தவிசாளர் உட்பட 9 சட்டத்தரணிகளும், சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணிகள் அறுவரும் இவ்வழக்கில் ஆஜராகினர்.  

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பில் ஆஜராகிருந்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தவிசாளர் மற்றும் சட்ட அலுவலகர்கள், பாதிக்கப்பட்ட சிறுமிகளை கொழும்பில் உள்ள தமது தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று வீடியோ ஆதாரம் ஒன்றை, தயாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.  

சிறுமிகளை, பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று அந்த ஆதாரத்தை தயாரிப்பதற்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியது.  

மேலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை, குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு மாற்றப்பட உள்ளதால், வீடியோ ஆதாரம் தயாரிக்கும் பணியைத் துரிதப்படுத்துமாறு, மூதூர் பொலிஸாருக்கு, நீதிமன்றம் கட்டளையிட்டது.   

அத்துடன், இந்த வழக்குக்கு தேவையான ஆதாரங்களான வைத்திய அறிக்கை மற்றும் அரச பகுப்பாய்வு திணைக்கள அறிக்கை ஆகியன கிடைக்கப் பெறாததால், இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு, அடுத்த தவணைத் திகதியாக, செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதியை நீதிமன்றம் அறிவித்தது.  

திருகோணமலை, மூதூர் பெரியவெளி பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் மூவர், இவ்வருடம் மே மாதம் 28 ஆம் திகதியன்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், ஐவர் கைதுசெய்யப்பட்டனர்.   
அந்த ஐவரையும், சிறுமிகள் மூவரும் அடையாளம் காட்டத்தவறியமையால், அவர்கள், நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .