2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

உலகின் மிகச்சிறிய நத்தார் வாழ்த்து அட்டை

Kogilavani   / 2010 டிசெம்பர் 24 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகிலேயே மிகவும் சிறிய நத்தார் வாழ்த்து அட்டையை நனோ தொழில்நுட்பவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

சாதாரண அளவிலான தபால் முத்திரையொன்றில் மேற்படி கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகளில் 8,000 இற்கும் அதிகமானவற்றை உள்ளடக்க முடியுமாம். அவ்வளவு சிறிய அட்டை இது.

இதை தயாரித்த பிரிட்டனின் கிளாஸ்கோவ் பல்கலைகழகமானது இந்த வாழ்த்து அட்டை உலகிலே மிகவும் சிறிய வாழ்த்து அட்டை எனவும் இது வெற்றுக் கண்களுக்கு புலப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.

இப்பல்கலைக்கழகத்தின்  பொறியியல் கல்லூரி,  உலகில் முன்னணி நனோதொழில்நுட்ப நிபுணர்களின் உதவியுடன் இந்த வாழ்த்து அட்டையை  வடிவமைத்துள்ளது.

மொத்தமாக, இத்தகைய 8,276 வாழ்த்து அட்டைகளை தபால் முத்திரையொன்றில் உள்ளடக்கலாம்.

நத்தார் மரமொன்றின் படத்தைக் கொண்ட இந்த வாழ்த்து அட்டையை  பேராசிரியர் டேவிட் குமிங் மற்றும் டாக்டர் கிய்ன் சென் ஆகியோர் இணைந்து ஒரு சிறிய கண்ணாடி துண்டினுள் இணைத்துள்ளனர்.

பேராசிரியர் குமிங் இது தொடர்பாக தெரிவிக்கையில் 'எங்களது நனோ தொழில்நுட்பமானது உலகிலேயே மிகச் சிறந்தது. ஆனால், சிலநேரங்களில் பொதுமக்களுக்கு இந்த தொழில்நுட்பம் குறித்து விளக்குவது கடினமானது. எங்களது தொழில்நுட்பமானது எவ்வளவு துல்லியமானது என்பதை வெளிப்படுத்துவதற்கு இந்த கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை சிறந்த வழியாகும்' என்றார்.

'இந்த வாழ்த்து அட்டையை தயாரிப்பதற்கு 30 நிமிட நேரமே தேவைப்பட்டது. தயாரிப்பை விட வடிவத்தை தீர்மானிப்பதற்குத்தான் அதிக நேரம் சென்றது.

இந்த வாழ்த்து  அட்டையானது 200 மைக்ரோ மீற்றர் அகலமும் 290 மைக்ரோமீற்றர் நீளமும் கொண்டது. மைக்ரோ மீற்றர் என்பது ஒரு மீற்றரில் 10 லட்சத்தில் ஒருபங்காகும். மனித தலைமயிரின் அகலம் சுமார் 100 மைக்ரோ மீற்றர்களாகும்' என பேராசிரியர் குமிங் தெரிவித்துள்ளார்.

'சாதாரண ஏ5 அளவு வாழ்த்து அட்டையில் இத்தகைய 5 லட்சம் மைக்ரோ வாழ்த்து அட்டைகளை வைக்க முடியும். ஆனால், அதில் நீங்கள் கையெழுத்திடுவதுதான் சவாலானதாக இருக்கும்' எனவும் அவர் கூறுகிறார்.
 


  Comments - 0

  • thurairatnam Thursday, 13 January 2011 12:26 PM

    குட் news

    Reply : 0       0

    azmi Wednesday, 20 April 2011 04:42 PM

    எனக்கு உலகில் மிக சிறிய கலண்டர் பற்றிய விபரம் தர முடியுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X