2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கூகிள் நிறுவனத்தின் சாரதியற்ற காருக்கு அமெரிக்காவில் அனுமதிப்பத்திரம்

Super User   / 2012 மே 08 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


சாரதியின்றி சுயமாக இயங்கும் காருக்கு அமெரிக்காவின் நெவடா மாநில போக்குவரத்துத் துறை அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளது.

மேற்படி டொயோட்டா பிரையுஸ் ரக காரை சாரதியின்றி இயங்கக்கூடியதாக பிரபல இணையத்தள நிறுவனமான கூகிள் நிறுவனம் வடிவமைத்திருந்தது.

இக்காருக்கு நெவடா மாநில அரசாங்கம் அனுமதிப்பத்திரம் வழங்கியதன் மூலம் அம்மாநில வீதிகளில் இக்கார் விரைவில் பயணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கணினியின் மூலம் இயங்கும் இக்காரின் மீது வீடியோ கமரா, ராடர் மற்றும் லேசர் உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் வீதியிலுள்ள ஏனைய வாகங்களை கண்காணித்து இக்கார் தனது பயணத்தை மேற்கொள்ளும்
ஏனைய பல கார் தயாரிப்பு நிறுவனங்களும் சாரதியற்ற காருக்கு நெவடா மாநிலத்தில் அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு முயற்சித்து வருகின்றன. 

கூகிள் நிறுவன பொறியியலாளர்கள் கலிபோர்னியா மாநில வீதிகளிலும் இந்த காரை பரீட்சித்தனர்.

இந்த கார் 140000 மைல் தூரம் பயணித்துள்ளதாக மென்பொருள் பொறியியலாளரான செபஸ்டீன் த்ருன் கூறியுள்ளார். ஒரு தடவை போக்குவரத்து சமிக்ஞை விளக்கொன்றின் அருகில் நிற்கும்போது பின்னால் வந்த கார் இடித்ததை தவிர வேறு எந்த விபத்தை சாரதியற்ற தமது கார் எதிர்கொள்ளவில்லை எனவும் அவர் கூறினார்.

சாரதியற்ற கார்களானவை 'எதிர்கால கார்கள்' என தான் நம்புவதாக நெவடா மாநில போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர் புரூஸ் பிரெஸ்லோ தெரிவித்துள்ளார்.

சுயமாக இயங்கும் கார்களுக்கு அனுமதி வழங்குவதற்காக நெவடா மாநிலம் தனது போக்குவரத்து சட்டங்களில் கடந்த மார்ச் மாதம் மாற்றங்களை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. கலிபோர்னியா போன்ற ஏனைய மாநிலங்களும் இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளன.

சாரதியற்ற கார்களை இனம்காண்பதற்காக சிவப்பு நிறத்திலான விசேட இலக்கத் தகடுகளை நெவடா மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X