2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

நாசாவின் கியூரியோசிட்டி விண்கலம் செவ்வாயில் தரையிறங்கியது

Super User   / 2012 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்பிய கியூரியோசிட்டி ஆய்வுக்கலம் செவ்வாய் கிரகத்தின் தரையில் வெற்றிகரமாக இறங்கியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

ஒரு தொன் எடையுள்ள கியூரியோசிட்டி ஆய்வுக்கலமானது 250 கோடி அமெரிக்க டொலர்  செலவில் தயாரிக்கப்பட்டதாகும்.

ஒரு காரின் அளவிலான இக்கலம் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து  விண்வெளிக்கு ஏவப்பட்டது. 8 மாதகால பயணத்தின்பின் ஜி.எம்.ரி. நேரப்படி இன்று திங்கட்கிழமை அதிகாலை 5.33 மணிக்கு (இலங்கை நேரப்படி காலை 11.03டிமணிக்கு) செவ்வாய் தரையில் கியூரியோசிட்டி கலம் இறங்கியது.

இக்கலம் செவ்வாய் வான்பரப்பை சுமார் 21,240 கிலோமீற்றர் வேகத்தில் அடைந்தது. பின்னர் பரசூட்டின் உதவியுடன் வேகம் குறைக்கப்பட்டதுடன், செவ்வாய் தரையில் இக்கலம் வேகமாக மோதுவதை தவிர்ப்பதற்காக ஸ்கை கிரேன் எனும் ஏணியும் முதல் தடவையாக பயன்படுத்தப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

இக்கலம் தரையிறங்கியவுடன் செவ்வாய் தரையில் இக்கலத்தின் சக்கரங்கள் இருப்பதை உறுதிப்படுத்தும் புகைப்படமொன்றை இக்கலத்தில் மேல் பொருத்தப்பட்டிருந்த கமெராவொன்று உடனடியாக நாஸாவுக்கு அனுப்பியது.

அதையடுத்து நாசா விஞ்ஞானிகள் துள்ளிக்குதித்து ஒருவரையொருவர் கட்டித் தழுவி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நாசா ஊழியர்களுக்கு 'மார்ஸ்' சொக்லேற் வழங்கப்பட்டது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தால் அதை கண்டுபிடிக்கக்கூடிய அதிநவீன கருவிகள் இந்த ஆய்வுகூட கலத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

எவ்வாறெனினும், வேற்றுகிரக மனிதர்களையோ உயிருள்ள வேறு ஜீவராசிகளையோ கியூரிசேரிட்டி கலம் கண்டறியும் என நாசா  விஞ்ஞானிகள் எதிர்பார்க்கவில்லை. மாறாக, செவ்வாய் கிரகத்தின் மண், பாறைகள் என்பவற்றை பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, அக்கிரகம் கடந்த காலத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு உதவியளித்ததாக என ஆராய முடியும் என அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

எதிர்காலத்தில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொள்வதற்கான சாத்தியம் குறித்து ஆராய்வதை கியூரியோசிட்டி விண்கலத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X