Editorial / 2026 ஏப்ரல் 27 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

இணையம் (Internet) இல்லையென்றால் இன்று உலகமே ஸ்தம்பித்துவிடும் என்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வங்கிப் பரிவர்த்தனை முதல் ஆன்லைன் கல்வி வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட 21ஆம் நூற்றாண்டில், "இன்டர்நெட் என்றால் என்ன?" எனக் கேட்கும் ஒரு நாடு இப்போதும் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இந்த நவீன நூற்றாண்டில் எல்லாமே இணையத்தைச் சார்ந்தே இயங்குகின்றன. இணையத்தின் வருகைக்குப் பின்னரே 'இன்புளுயன்சர்கள்' (Influencers), ஆன்லைன் உணவு விநியோகம், இணையவழி கல்வி எனப் பல புதிய துறைகள் உருவாகியுள்ளன. நமது வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இணையம் மாறிவிட்டது.
உலகமே 5G வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும்போது, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எரித்திரியா (Eritrea) மட்டும் இன்னும் 18ஆம் நூற்றாண்டிலேயே உறைந்து போய்க்கிடக்கிறது. உலகின் மிகக் குறைந்த இணையப் பயன்பாடு கொண்ட நாடுகளின் பட்டியலில் எரித்திரியா முதலிடத்தில் உள்ளது. அங்கு இணையம் என்பது மக்களுக்கு ஒரு எட்டாக்கனியாகவே உள்ளது; இதற்குக் காரணம் அந்நாட்டு அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளே ஆகும்.
அங்குள்ள தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் அனைத்தும் அரசு வசமே உள்ளன; தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது. ஒரு சிலருக்கு மட்டும் இணையத்தைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் எதனைத் தேடுகிறார்கள், யாரோடு பேசுகிறார்கள் என்பதை அரசு 'கழுகுப் பார்வை'யுடன் கண்காணித்துக் கொண்டே இருக்கும்.
அதிவேக பிராட்பேண்ட் வசதிகள் அந்த நாட்டில் கிடையாது. மொபைல் டேட்டா (Mobile Data) என்பது கனவிலும் நினைக்க முடியாத ஒன்று. ஒரு சில முக்கிய நகரங்களில் மட்டும் ஆங்காங்கே 'இன்டர்நெட் கஃபேக்கள்' (Internet Cafes) இருக்கும். ஆனால், அங்கேயும் இணையத்தின் வேகம் ஆமை வேகத்தை விடக் குறைவாகவே இருக்கும். அதற்காக வசூலிக்கப்படும் கட்டணமோ, ஒருவரது மாத சம்பளத்திற்கு இணையானது. இதனால் பெரும்பாலான மக்கள் இதுவரை இணையத்தைப் பயன்படுத்தியதே இல்லையாம்.
இணைய வசதி இல்லாதது அந்த நாட்டின் வளர்ச்சியைப் பாதாளத்திற்குத் தள்ளியுள்ளது. உலகளாவிய ஆன்லைன் கல்வி வளங்கள் கிடைக்காததால், எரித்திரிய மாணவர்கள் நவீனக் கல்வி முறையிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச சந்தையுடன் அந்நாட்டுத் தொழிலதிபர்களால் தொடர்பு கொள்ள முடிவதில்லை. எல்லாவற்றையும் விட, உலகில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளக் கூட மக்கள் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது.
'டிஜிட்டல் இடைவெளி' (Digital Divide) என்பது உலகளவில் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ஒருபுறம் செயற்கை நுண்ணறிவு (AI) உலகையே மாற்றிக் கொண்டிருக்க, மறுபுறம் ஒரு நாடு அடிப்படை இணைய வசதி கூட இல்லாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. அரசியல் காரணங்களுக்காகவும், அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தையுமே எரித்திரியா அரசு முடக்கி வைத்திருக்கிறது. தொழில்நுட்பம் என்பது வெறும் வசதி மட்டுமல்ல, அது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை என்பதை உலகம் உணர வேண்டிய தருணம் இது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .