2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

பேஸ்புக்கின் உண்மையான பெயர் கொள்கையில் மாற்றம்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 16 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்ச்சைக்குரிய பேஸ்புக்கின் உண்மையான பெயர்க் கொள்கை தொடர்பாக கடந்த ஒரு வருடமாக நீடித்த வாதங்களையடுத்து பேஸ்புக்கானது தனது பயனர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் பொருட்டு இரண்டு மாற்றங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை (15), அறிவித்துள்ளது.

பேஸ்புக்கானது, உங்களது நண்பர்களுக்கும் குடும்பத்துக்கும் தெரிந்த உங்களின் பெயரை பேஸ்புக்கில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தும் கொள்கையை கொண்டிருக்கின்றது. எனினும் இந்தக் கொள்கையினை பின்பற்றியவர்கள் சிலரின் பேஸ்புக் கணக்குகள் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அந்தக் கணக்குகள் பேஸ்புக்கால் முடக்கப்பட்டிருந்தது. அதனையடுத்தே, கடந்த ஒக்டோபரில் தனது மேற்படி கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக பேஸ்புக் உறுதியளித்திருந்தது.

எனினும் பேஸ்புக்கானது தனது உண்மையான பெயர்க் கொள்கையை அகற்றவில்லை, மாறாக தனது மேற்படிக் கொள்கையை மேம்படுத்தும் பொருட்டு இரண்டு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, இனி பேஸ்புக்கில் குறிப்பிட்ட ஒரு நபரின் பேஸ்புக் பெயர் தொடர்பாக முறைப்பாடு செய்வதானால், தனியே பொய்யான பெயர் என முறைப்பாடு மட்டும் செய்தால் போதாது, ஏன், எதற்காக குறிப்பிட்ட நபரின் பெயரை முறைப்பாடு செய்கிறீர்கள் என்பதற்கான காரணங்களைக் குறிப்பிட வேண்டும்.

அடுத்து, பேஸ்புக்கில் உங்களது பெயர் தொடர்பாக வேறு எவரும் முறைப்பாடு செய்யும் பட்சத்திலும் வீட்டு வன்முறையாலோ அல்லது தமது பாலினத்தை வெளிப்படுத்துவதால் தமக்கு ஆபத்து என கருதி உண்மையான பெயரைப் பயன்படுத்தாமல் வேறு பெயர்களைப் பயன்படுத்துபவர்களும் தமது பேஸ்புக் கணக்கானது முடக்கப்படுவதற்கு முன்னர் தங்களது நிலையை விவரிக்க ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது.

எனினும் இந்த மாற்றங்கள், அமெரிக்காவில் மாத்திரம் மட்டுபட்ட அளவிலேயே அலைபேசி, கணினியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெறப்படும் கருத்துக்களை வைத்தே, உலகளாவிய ரீதியில் இந்த மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.                

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X