2025 மே 03, சனிக்கிழமை

லித்தியம் மின்கலங்களை எடுத்துச் செல்லத்தடை

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரியளவில் லித்தியம் மின்கலங்களை சரக்காக பயணிகள் விமானத்தில் எடுத்துச் செல்வதற்கு தடைவிதிக்கப்படவேண்டும் என ஐக்கிய நாடுகளின் வான் பயணம் சம்பந்தமான கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

மின்கலங்களால் தீவிரமான தீ தோன்றலாம் எனவும், இதனால், வானூர்தி அழிவடையலாம் எனவும், ஆகையால் மேற்கூறப்பட்ட தடையானது அவசியம் என சர்வதேச சிவில் வான்வழி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்படித் தடையானது, எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச சிவில் வான்வழி நிறுவனத்தின் தீர்மானத்தை, அனைத்து நாடுகளும் கணக்கிலெடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றபோதும் பெரும்பாலான நாடுகள், சர்வதேச சிவில் வான்வழி நிறுவனத்தின் பரிந்துரைகளை செயற்படுத்துகின்றன.

எனினும் பயணிகள் விமானத்தில், பயணிகள் தங்கியிருக்கும் பகுதியில், மக்களால் எடுத்துச் செல்லும் சாதனங்களுகுள் உள்ள மின்கலங்களுக்கு மேற்படித் தடையானது பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கூறப்பட்டுள்ளது.

மின்கலங்களை பாதுகாப்பாக பொதியிட்டு எடுத்துச் செல்லும் வழிவகைகளை 2018ஆம் ஆண்டிலேயே சர்வதேச சிவில் வான்வழி நிறுவனம் இறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகையில், அதுவரையில் தடை நீடிக்கும் என சர்வதேச சிவில் வான்வழி நிறுவனத்தின் தலைவர் ஒலுமுயிவா பேனார்ட் அலியு தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் பெரும்பாலான லித்தியம் மின்கலங்கள், சரக்குக் கப்பல்களிலேயே கொண்டுசெல்லப்படுகின்ற நிலையில், 30 சதவீதமானவை இன்னும் வான்வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றன. அதிலும் பெரும்பாலானவை, தனித்து சரக்கு விமானங்களில் கொண்டுசெல்லப்படாமல் பயணிகள் விமானத்திலேயே கொண்டுசெல்லப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்க வான்வழி நிர்வாகத்தின் எதிர்வுகூறலின்படி, பாரியளவில் மின்கலங்களை காவிச்செல்லும் விமானங்களில், 26 மில்லியன் பயணிகள் வருடாந்தம் செல்கின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.

வான்வழி தொடர்பான நிலையங்களின் சோதனைப்படி, லித்தியம் மின்கலங்களானவை, தானாகவே தீப்பற்றக் கூடியவை என்றதுடன், 600 பாகை செல்சியஸ் வரையில் வெப்பத்தை வெளியிடக்கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல விமானங்கள், அலுமினியத்தாலேயே தயாரிக்கப்படுகையில், அலுமினியத்தின் உருகுநிலையானது 600 பாகை செல்சியஸை அண்மித்தே உள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X