2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

வரவேற்புப் பெற்றுவரும் PickMe

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டு ஜீன் முதல், கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் வாடகை முச்சக்கர வண்டிகளையோ, சிறியரக கார்களையோ அல்லது கார்களைளோ பெற விரும்புவோருக்கான இலகுவான தெரிவாக,  PickMe மாறியிருக்கிறது. இலகுவான சேவை, உச்சபட்ட வேகம், திருப்தியான பயணமென,  PickMe சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கிறது. 

 PickMe என்பது வாடகைக் கார் சேவை நிறுவனமன்று. மாறாக, இதுவொரு கணினி மென்பொருள் நிறுவனமாகும்.  PickMe ஆனது, அன்ட்ரொய்டின் கூகிள் பிளேயிலோ அல்லது அப்பிளின் அப் ஸ்டோரிலோ, முழுவதும் இலவசமாகத் தரவிறக்கப்பட முடியுமென்பதோடு, இந்தச் செயலியைப் பயன்படுத்துவதற்கோ அல்லது செயலி மூலம் சேவைகளைப் பெறுவதற்கோ, அச்செயலியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர், எந்தவொரு கட்டணத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செலுத்த வேண்டியதில்லை என்பது, மிகவும் சிறப்பம்சமாகும். ஏனெனில், சில இணைய சேவைகளைப் பயன்படுத்தும் போது, அந்தச் சேவையின் குறித்ததொரு பங்கை மேலதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும். அவ்வாறான நிலை, இந்தச் செயலியில் கிடையாது.

அன்ட்ரொய்ட் அல்லது அப்பிள் செயலியைத் தனது திறன்பேசியில் தரவிறக்கும் ஒருவர்,  PickMe சேவையோடு இணைந்துள்ள ஆயிரக்கணக்கான வாடகைக் கார்களையோ, முச்சக்கர வண்டிகளையோ அல்லது நனோ கார்களையோ வாடகைக்குப் பெற முடியும். இந்தக் கார்களை  PickMe நிறுவனம் உரிமையாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக, அவற்றுடன் இணைப்பொன்றையே கொண்டிருக்கிறது.

உங்களுடைய   PickMe செயலியை நீங்கள் செயற்படுத்தும் போது, உங்களுடைய திறன்பேசியின் இருப்பிடத்தைக் கண்டுகொண்டு, அவ்விடத்துக்கு அருகிலுள்ள முச்சக்கர வண்டிகள், நனோ கார்கள், கார்கள் ஆகியவற்றின் விவரங்களை அச்செயலி காட்டும். அதன் மூலம், உங்களுக்கான வாடகை வாகனம் தெரிவுசெய்யப்பட்டு, விரைவிலேயே அவ்வாகனம் உங்களை வந்தடையும். உங்கள் இருப்பிடத்திலிருந்து 2 கிலோ மீற்றர் ஆரைக்குள்ள வாகனங்களையே இச்செயலி அடையாளங் காட்டுவதால், காத்திருக்கும் நேரமென்பது குறைவானதாகக் காணப்படுகிறது. அத்தோடு, இச்சேவையானது 24 மணிநேர சேவையாகக் காணப்படுவதால், இரவு நேரங்களில் பயணம் செய்வோர், அலைந்து திரிந்து வாகனங்களைத் தேட வேண்டிய கடினமான பணியும் இலகுவாக்கப்படுகின்றது.

வாடகை வாகனம் தெரிவுசெய்யப்பட்டதும், வாகனத்தின் விபரங்கள், வாகன ஓட்டுநரின் அலைபேசி இலக்கம் உள்ளிட்ட விவரங்கள் ஆகியன, உங்களை குறுஞ்செய்தி மூலம் வந்தடையும்.

இச்சேவையில் இணைந்துள்ள வாகனங்களில்,  PickMe நிறுவனத்தால் விசேட வழங்கப்பட்டுள்ள கருவியொன்று காணப்படும். ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இக்கருவியின் மூலமாக, பயணத்தின் தூரம் கணிப்பிடப்படுவதோடு, இவ்விசேட கருவியின் காரணமாக, வாகனமொன்று உங்களுக்காக ஒதுக்கப்பட்ட பின்னர், அவ்வாகனம் செல்லும் பாதையை, உங்களுடைய திறன்பேசியின் செயலி ஊடாகவே கண்காணிக்க முடியும். இதன்மூலம், வாகனம் உங்கள் வீட்டை நெருங்கியதை நீங்கள் வீட்டுக்குள்ளிருந்தே கண்காணிக்கும் வசதி ஏற்படுவதன் காரணமாக, உங்களுடைய பயணம் மேலும் இலகுவாக்கப்படுகிறது.

கடந்தாண்டு நவம்பரில் சோதனை ஓட்டம் ஆரம்பிக்கப்பட்டு, இவ்வாண்டு ஜூனிலேயே பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இந்த வசதி, மக்களின் ஆதரவை மாத்திரமன்றி, வாடகை வாகன நிறுவனங்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. இதன் காரணமாக, மூன்று மாத காலப்பகுதிக்குள்ளேயே 75,000க்கும் மேற்பட்ட பயனர்களையும் 2,000க்கும் மேற்பட்ட வாடகை வாகனங்களையும் அந்நிறுவனம் கொண்டுள்ளது. வாகனங்களில் 70 சதவீதமானவை முச்சக்கர வண்டிகள் என அறிவிக்கப்படுகின்றது.

அண்மைய காலத்தில், விசேட குறியீடுகள் (Promo Code), விருப்பத்துக்குரிய முகவரிகள், கட்டணங்கள் காண்பிக்கப்படும் தெரிவு வசதி ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ள  PickMe, பயணத்துக்கான முற்கூட்டிய அனுமானிப்பு, முற்பதிவு செய்யக்கூடிய வசதி ஆகியவற்றை, இனிவரும் சில வாரங்களுக்குள் அறிமுகப்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதாக, அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.

இந்தியாவில் இவ்வாறான சேவைகள் காணப்படுகின்ற போதிலும், அவற்றின் பாதுகாப்புச் சம்பந்தமான பல கேள்விகள் அண்மைக்காலத்தில் எழுந்திருந்தன. இவ்வாறான பிரச்சினைகள் எழுவதைத் தடுக்கும் முகமாக, செயலியில் அவசர தேவைகளுக்கான பொத்தான் ஒன்றையும் மேலும் அதிகரித்த பாதுகாப்பு வசதிகளையும் அறிமுகம் செய்ய எதிர்பார்ப்பதாகவும்  PickMe தெரிவிக்கின்றது. இதன்மூலம், பாதுகாப்பான, சொகுசான பயணமொன்று உறுதிப்படுத்தப்படும்.

கொழும்பு 4இல் அமைந்துள்ள டிஜிட்டல் மொபிலிட்டி சொலியூஷன்ஸ் லங்கா நிறுவனத்தால் உரிமைப்படுத்தப்பட்டுள்ள  PickMe சேவையானது, அந்நிறுவனத்தின் நிறுவுநரும் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜிப்றி ஷல்பரினது தலைமைத்துவத்தின் கீழ் செயற்பட்டு வருவதோடு, இனிவரும் மாதங்களில் மேலும் அதிகமான வாடிக்கையாளர்களையும் வாகனங்களையும் இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X