2026 மார்ச் 27, வெள்ளிக்கிழமை

ரெலோ தலைமைக்கு எதிராக போராட்டம்! வீடியோ

Lenin Raj   / 2026 மார்ச் 27 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


  எஸ். கீதபொன்கலன்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கட்சியின் 12-வது தேசிய மகாநாட்டை உடனடியாகக் கூட்டி புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்ய வலியுறுத்தியும் இன்று (27) திருகோணமலையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க அங்கத்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டம், கட்சியின் மாவட்டக் காரியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமானது. அங்கிருந்து பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்ற அங்கத்தவர்கள், திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கிற்கு முன்பாகத் தொடர்ந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

போராட்டத்தின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கட்சியின் மூத்த உறுப்பினர் கௌரிதாஸ் பத்மலோஜினி கூறியதாவது:

"கட்சியின் யாப்பு விதிகளின்படி, தற்போதைய தலைவர் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 23.03.2026 அன்றுடன் நிறைவடைந்துள்ளது. எனவே, தாமதமின்றி கட்சியின் 12-வது தேசிய மகாநாடு கூட்டப்பட வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாகும்."

மேலும் அவர் குறிப்பிடுகையில், வடக்கு மற்றும் கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் கட்சியின் புதிய நிர்வாகிகள் யாப்பு விதிகளின்படி தெரிவு செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்ட நிர்வாகிகளின் தெரிவும் கட்சியின் தலைமைக் குழு முன்னிலையிலேயே நடைபெற்றது. இருப்பினும், இந்தத் தெரிவு யாப்புக்கு முரணானது என தற்போது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணியில் கட்சியின் தலைமைத்துவத்தின் ஆசீர்வாதம் இருப்பதாகத் தாம் சந்தேகிப்பதாகவும், உட்கட்சி ஜனநாயகத்தை மீறும் இச்செயற்பாட்டை உடனடியாக நிறுத்தி, வழக்கை மீளப்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். அவற்றுள் சில:
• "தலைமைக் குழுவே! தேசிய மகாநாட்டை உடனே நடத்து!"
• "தங்கண்ணா, சிறி அண்ணா கட்டிக்காத்த கட்சியைச் சீரழிக்காதே!"
• "கட்சித் தலைமையே! இரட்டை வேடம் போடாதே, ரெலோவை அழிக்காதே!"
• "பதவி ஆசை போதும்; சாகும் வரை நீங்களா பதவியில் இருப்பீர்கள்?"
• "தலைமைக்குழு உறுப்பினர்களே! பதவி ஆசைக்காகவா அன்று ஆயுதம் தூக்கினீர்கள்?"

கட்சியின் புதிய நிர்வாகிகளின் தெரிவை அங்கீகரித்து, ஜனநாயக ரீதியாக மகாநாட்டை நடத்தி புதிய தலைமையை உருவாக்க வழிவிடுமாறு போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

 
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .