2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

யானை தாக்குதலில் பெண் பலி: சடலம் ஒப்படைப்பு

Mayu   / 2026 ஏப்ரல் 08 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத்புரம் பகுதியில் இன்று (08) அதிகாலை வீட்டு முற்றத்தில் நின்ற குடும்பப் பெண் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
மஜீத்புரம், மல்வத்தை-03 எனும் முகவரியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அபூபக்கர் சபீனா பேகம் (48 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இன்று அதிகாலை வழமை போல வீட்டு முற்றத்திற்கு வந்த வேளையில், அங்கு நின்ற காட்டு யானை திடீரென அவரைத் தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிவான் திருமதி எம்.எம். பாத்திமா சாமிலா அவர்களின் கட்டளைக்கு இணங்க, பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல்-ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டார். அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உயிரிழந்த இந்தப் பெண், கடந்த 4 வருடங்களுக்கு முன்னரும் இதேபோன்று யானை தாக்குதலுக்குள்ளாகி ஒரு கால் முறிந்த நிலையில் சிகிச்சை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வீட்டின் அருகிலுள்ள பகுதி, யானைகள் அடிக்கடி வழிமாறிச் செல்லும் ஒரு பாதையாகக் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் சம்மாந்துறைப் பிரதேசத்தில் யானை தாக்குதல்களினால் பலர் உயிரிழந்துள்ளதோடு, தற்போது யானைகளின் நடமாட்டம் அப்பகுதியில் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .