2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

100க்கு மேற்பட்ட பிடியாணைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன: பதில் பொறுப்பதிகாரி

Super User   / 2013 ஜனவரி 23 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல் அஸீஸ்

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இதுவரை நிறைவேற்றப்படாத 100க்கு மேற்பட்ட பிடியாணைகள் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ளன என கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி வசந்த குமார தெரிவித்தார்.

இவற்றை நிறைவேற்றுவதற்கு மக்களுடன் இணைந்து பணிபுரியும் உத்தியோகத்தர்களான நீங்கள் முன்வர வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

கல்முனை பிரதேச மட்ட சிவில் பாதுகாப்பு குழுவின் இந்த வருடத்தின் முதலாவது கூட்டம் இன்று கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாவனை, மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை மற்றும் மனச்சேனை போன்ற பிரதேசங்களில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இதுவரை நிறைவேற்றப்பட முடியாதுள்ள நூற்றுக்கு மேற்பட்ட பிடியாணைகள் உள்ளன.

இவற்றை நிறைவேற்ற மக்களுடன் கடமை புரியும் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களாகிய நீங்கள் இவற்றை நிறைவேற்ற பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்குவதனூடாகவே கடந்த காலங்களில் உங்களின் ஒத்துழைப்புடன் பல விடயங்களை சிறப்பாக மேற்கொண்டதை போன்று இதனையும் மேற்கொள்ள முடியும்.

இது போன்றே தலைக்கவசமில்லாமல் மோட்டார் சைக்கிள் செலுத்துவோரின் விகிதமும் எமது பிரதேசத்தில் அதிகரித்திருக்கின்றது. இதனை கட்டுப்படுத்தவும் நாங்கள் இது தொடர்பாக சட்டத்தில் கூறப்பட்டுள்ள உச்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்;. இந்த செய்தியையும் நீங்கள் மக்கள் மட்டத்தில் கொண்டுசெல்ல வேண்டும்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X